தங்க நகைகளுக்கும் தவணை முறை: நடுத்தர மக்களுக்கு இனி கொண்டாட்டம்!
புதிதாக ஒரு யோசனையை முன்வைத்து, மத்திய நிதி அமைச்சகத்துக்கு இந்திய தங்க வியாபாரிகள் சங்கம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளது. தங்க நகைகளுக்கு EMI வசதி வழங்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. இது நடைமுறைக்கு வந்தால், நடுத்தர வருமான மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்க வழி பிறக்கும்.
தங்கம் வாங்குவது இனி எளிது
தற்போது, வீடு, கார் போன்ற பெரிய கடன்களுக்கு மட்டுமே வங்கிகள் தவணை முறை வசதிகளை (EMI) வழங்குகின்றன. ஆனால் தங்க நகைகள் வாங்குவதற்கு இந்த வசதி இல்லை. தங்க நகைகள் வாங்க வேண்டும் என்றால், மொத்த பணத்தையும் ஒரே நேரத்தில் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலைமையில் மாற்றம் கொண்டு வர, தங்க வியாபாரிகள் சங்கம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதாவது, ஒரு நபர் தங்க நகை வாங்க விரும்பினால், அவரது வங்கிக் கணக்கின் CIBIL மதிப்பெண்ணின் (Credit Score) அடிப்படையில் கடன் வழங்கலாம் என அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இது நடைமுறைக்கு வந்தால், பொதுமக்கள் தங்க நகைகளை சிறிய தவணைகளில் எளிதாக வாங்க முடியும். இதன் மூலம், நகைகள் வாங்குவது என்பது ஆடம்பரமான ஒன்றாக இல்லாமல், நடுத்தர குடும்பங்களின் மாதச் செலவுகளில் ஒன்றாக மாறிவிடும்.
அரசுக்கும், வியாபாரிகளுக்கும் நன்மை
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், தங்க வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். மேலும், இதனால் மத்திய அரசுக்குக் கிடைக்கும் GST வருமானமும் பெருகும். மேலும், EMI முறையில் கடன் வழங்குவதால், வாடிக்கையாளர்களின் கடன் பரிவர்த்தனைகள் வெளிப்படையானதாக மாறும், இது அவர்களின் CIBIL மதிப்பெண்ணையும் மேம்படுத்த உதவும்.
இந்தியாவுக்குப் புதிய அனுபவம்
உலகளவில், சில நாடுகளில் தங்க நகைகளுக்கு EMI வசதி ஏற்கனவே உள்ளது. ஆனால், இந்தியாவில் இது ஒரு புதிய அணுகுமுறையாகும். இந்த வசதி அமல்படுத்தப்பட்டால், நகைகள் வாங்குவதற்குப் புதிய வாடிக்கையாளர் பிரிவை உருவாக்கும். குறிப்பாக, பண்டிகைக் காலங்கள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில், நகைகள் வாங்குவதற்குத் தேவையான நிதிச்சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், இந்த EMI திட்டம், தங்க சந்தைக்கும், வாடிக்கையாளர்களுக்கும், அரசுக்கும் ஒரு win-win சூழலை உருவாக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.


