இந்தியாவின் மகா சாசனம்: அரசியல் சாசன தினம் – ஒரு சிறப்புக் பார்வை

இந்தியாவின் மகா சாசனம்: அரசியல் சாசன தினம் – ஒரு சிறப்புக் பார்வை

லகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்வது அதன் அரசியலமைப்புச் சட்டம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் தேதி, ‘தேசிய அரசியல் சாசன தினம்’ (Constitution Day) அல்லது ‘சம்விதான் திவாஸ்’ (Samvidhan Divas) எனக் கொண்டாடப்படுகிறது. 1949ஆம் ஆண்டு இதே நாளில் தான் இந்திய அரசியல் நிர்ணய சபையால் நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் பின்னணி மற்றும் சிறப்பம்சங்களை  காண்போமா?

உருவான வரலாறு மற்றும் கால அளவு

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டை வழிநடத்த ஒரு வலுவான சட்டம் தேவைப்பட்டது. இதற்காக 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்பு வரைவுக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில் என். கோபாலசுவாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.எம். முன்ஷி, சையத் முகமது சாதுல்லா, பி.எல். மிட்டர் மற்றும் டி.பி. கைதான் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் செயல்பட்டார்.

இந்த மாபெரும் சட்டப் புத்தகத்தை உருவாக்கி முடிக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் தேவைப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் இதன் வரைவுக் குழுத் தலைவராக இருந்ததால், அவர் ‘இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.

உலக நாடுகளின் கலவை (Sources of Constitution)

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வெறுமனே ஒரு அறையில் அமர்ந்து எழுதப்பட்டதல்ல. இது 1935ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும், சுமார் 60 நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களை நுணுக்கமாக ஆராய்ந்து, சிறந்த அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டன:

  • பிரிட்டன்: நாடாளுமன்ற முறை, ஒற்றைக் குடியுரிமை, சபாநாயகர் பதவி (எழுதப்படாத அரசியலமைப்பு முறையிலிருந்து பெறப்பட்டது).

  • அமெரிக்கா: எழுதப்பட்ட அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள், உச்ச நீதிமன்றம்.

  • சோவியத் ரஷ்யா: அடிப்படைக் கடமைகள், ஐந்தாண்டுத் திட்டங்கள்.

  • அயர்லாந்து: குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் முறை.

  • கனடா: வலுவான மத்திய அரசு கூட்டாட்சி முறை.

  • ஆஸ்திரேலியா: பொதுப் பட்டியல் (Concurrent List).

கையால் எழுதப்பட்ட பொக்கிஷம்

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மிகச்சிறந்த அம்சம் யாதெனில், இது தட்டச்சு (Type) செய்யப்படவில்லை. மாறாக, பிரேம் பிஹாரி நரேன் ரைசாதா என்பவரால் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் அழகிய கையெழுத்தில் எழுதப்பட்டது.

  • இது உலகின் மிக நீண்ட, கையால் எழுதப்பட்ட ஆவணமாகும்.

  • ஆங்கில வடிவத்தில் மட்டும் 1,17,369 வார்த்தைகள் உள்ளன.

  • இந்த அசல் கையெழுத்துப் பிரதிகள் இன்றும் நாடாளுமன்ற நூலகத்தில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்டப் பெட்டிகளில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

  • இந்த வரலாற்று ஆவணத்தில் 1950 ஜனவரி 24 அன்று, 283 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.

வளர்ச்சியும் மாற்றங்களும்

காலத்தின் தேவைக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்வதே ஒரு சிறந்த அரசியலமைப்பின் அடையாளம். நமது அரசியலமைப்பு நெகிழ்வுத்தன்மை கொண்டது.

  • தொடக்கத்தில் (1950): 22 பகுதிகள், 395 விதிகள், 8 அட்டவணைகள் இருந்தன.

  • தற்போது: 25 பகுதிகள், 448 விதிகள், 12 அட்டவணைகள் உள்ளன.

  • இந்திய அரசியலமைப்பின் முகப்புரை (Preamble) இதுவரை ஒரே ஒரு முறை (1976 அவசர நிலையின் போது) திருத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் மூன்று தூண்கள்

ஒரு நாட்டின் சீரான ஆட்சிக்கு சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் அவசியம். இந்த மூன்று அங்கங்களின் அதிகாரங்களையும், பொறுப்புகளையும், அவற்றுக்கிடையேயான உறவையும் நமது அரசியலமைப்பு மிகத் தெளிவாக வரையறுக்கிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வை இது உறுதி செய்கிறது.

முடிவுரை

1949 நவம்பர் 26ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஜனவரி 26ல் நடைமுறைக்கு வந்த நமது அரசியலமைப்புச் சட்டம், வெறும் சட்டப் புத்தகம் மட்டுமல்ல; அது இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமையையும் காக்கும் கேடயம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஆன்மாவாகத் திகழும் இந்த அரசியல் சாசனத்தைப் போற்றுவதும், பாதுகாப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

ராஜா செந்தூர்பாண்டி