எல்.ஐ.சி.தயவால் இயங்கும் ஐ டி பி ஐ வங்கிக்கு மேலும் நிதி உதவி!

எல்.ஐ.சி.தயவால் இயங்கும் ஐ டி பி ஐ வங்கிக்கு மேலும் நிதி உதவி!

கடந்த 10 காலாண்டுகளாக நஷ்டத்திலேயே இயங்கி கொண்டுள்ள ஐ.டி.பி.ஐ வங்கி, கடந்த மார்ச் காலாண்டிலும் வெற்றிகரமாக நஷ்டத்தில் தான் உள்ளதாம். அதே சமயம் இந்த ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனம் வாங்கியிருந்தாலும், ஐடிபிஐ வங்கியின் பங்கு களின் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையிலும்  அதன் தொடர்ச்சியாக ஐடிபிஐ வங்கிக்கு மறுமூலதன நிதி வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது மத்திய அரசின் பங்காக ரூபாய் 4557 கோடியும், எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்காக ரூபாய் 4743 கோடியும் மொத்தம் ரூபாய் 9300 கோடி நிதியை ஐடிபிஐ வங்கிக்கு வழங்கப் படுகிறதாம்.!

 

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியில் லட்சக்கணக்கான மக்கள் பாலிசி எடுத்து, காப்பீட்டு தொகையை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். கிட்டதட்ட 30 கோடி பேர் எல் ஐ சியில் பாலிசி எடுத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலிசிதாரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் பிரீமியம் தொகையை வைத்து, எல் ஐ சி நிறுவனம் கடன் பத்திரங்களிலும், பல நிறுவனங்களின் பங்குகளை பெருவதிலும் முதலீடு செய்து வருகிறது.

அப்படி முதலீடுகள் செய்தால் மட்டுமே, மக்கள் செலுத்தும் காப்பீட்டு தொகையை குறிப்பிட்ட காலகடடத்திற்கு பிறகு வட்டியுடன் எல் ஐ சியால் திரும்ப மக்களிடம் கொடுக்க முடியும். ஆனால் எல்ஐசி முதலீடு செய்திருக்கும் சில நிறுவனங்கள் திவாலாகி வருவதால் ஏற்கனவே சிக்கல்கள் எழுந்தன.

இந்நிலையில், தொழில் வளர்ச்சிக்கு கடன்கள் வழங்கும் பொதுத்துறை வங்கியாக இருந்து வந்த ஐடிபிஐ வங்கியின் 51 சதவிகித பங்குகளை எல்ஐசி கடந்த ஜனவரி மாதம் ரூ.21,600 கோடி ரூபாய்க்கு வாங்கியது. கடந்த 5 வருடங்களாகவே ஐடிபிஐ வங்கி இழப்பை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், 2018-19 நிதியாண்டு வரை சுமார் 15,000 கோடி இழப்பை ஐடிபிஐ வங்கி சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஐடிபிஐ வங்கி இந்த நிதியாண்டின் ஜூன் மாதம் வரையில் மட்டுமே கிட்டதட்ட 3,800 கோடி இழப்பை சந்தித்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ஐடிபிஐ வங்கியின் பங்குச்சந்தை மதிப்பு கடுமையாக குறைந்துள்ளது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் 62 ரூபாயாக இருந்த ஐடிபிஐ-யின் பங்குவிலை, இன்றைய தேதிக்கு 26 ரூபாயாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கும் எல் ஐ சியிடம் மக்கள் செலுத்திய காப்பீட்டு தொகைகளுக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கும் போது, நம் காப்பீட்டு தொகைகள் தான் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்குவதற்கான முதலீடுகளாக மாறியது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். முதலீடு செய்த நிறுவனங்களின் பங்குசந்தை விலை குறையும் போது, இந்த நிறுவனங்களால் எல்ஐசிக்கு கிடைக்கும் லாபமும் கடுமையாக குறையும். லாபம் குறைந்தால் எப்படி மக்களின் காப்பீட்டு தொகையை எல்ஐசியால் திரும்ப செலுத்த முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பங்குச் சந்தை முதலீட்டில் ஏற்ற இறக்கங்கள் என்பது சகஜமான ஒன்று என்றும், எல் ஐ சி, 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடுகள் செய்திருக்கும் போது ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் சரிந்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி ஆண்டு தோறும் ஒன்றிலிருந்து ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை நிறுவனங் களின் பங்குகளில் முதலீடு செய்யும் எல் ஐ சிக்கு இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது. இந்நிலைடிதான் மத்திய அரசும், எல்.ஐ.சியும் இணைந்து ரூபாய் 9,000 கோடியை ஐடிபிஐ வங்கிக்கு மறுமூலதன நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

error: Content is protected !!