விவசாயிகள் உயிரழப்பு ; மனித உரிமை ஆணையம் விசாரணை

விவசாயிகள் உயிரழப்பு ; மனித உரிமை ஆணையம் விசாரணை

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து ஆறு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

tn jan 6

தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும் பயிர்கள் வாடி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி தமிழ் நாளிதழ் ஒன்றில் விவசாயிகள் தொடர்பாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது.அதில், தமிழகத்தில் மாரடைப்பால் 83 விவசாயிகள் உயிரிழந்ததாகவும், விவசாயிகள் பலர் தற்கொலையில் ஈடுபடுவதாகவும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் (53), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் (எ) விஜய் ராகவம் (50) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது. அதே நாளிதழில் வியாழக்கிழமை வெளிவந்த செய்தியில் விவசாயிகளின் உயிரிழப்பு 106 ஆக எட்டிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

ஆங்கில நாளிதழில் ஜனவரி 3-ஆம் தேதி வெளிவந்த செய்தியில், நான்கு விவசாயிகள் மாரடைப்பால் இறந்ததாகவும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விவசாயி முருகய்யன் என்பவர் தனது வயலிலேயே மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இப்படி
ஊடங்களில் வெளியான இச்செய்தி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, இச்சம்பவத்தை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

அதில், “விவசாயத் துறைக்காக உருவாக்கப்பட்டுள்ள கொள்கைத் திட்டங்கள், சட்டங்கள் ஆகியவற்றை சீரிய வகையில் அமல்படுத்தும் தேவை எழுந்துள்ளது. குறிப்பாக சிறு விவசாயிகளுக்கான கொள்கைத் திட்டங்கள் உரிய வகையில் அமல்படுத்தப்படுதுவது அவசியம். பயிர்கள் பாதிப்பால் விவசாயிகள் நிதி ரீதியாக பாதிக்கப்படுவது மட்டுமின்றி, மனரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர்.விவசாயி ஒருவர் உயிரிழக்கும் போது அல்லது தற்கொலை செய்து கொள்ளும் போது அவரது ஒட்டுமொத்த குடும்பமே நிலைகுலைந்து விடுகிறது. ஆகவே, தமிழகத்தில் விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அல்லது மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் குறித்து 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தலைமைச் செயலர் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!