ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்!

அறியாத வயசு என்று சொல்லப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உலக மக்களை முடக்கி போட்டுள்ளழ் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களின் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும் சூழலில், தனியார் பள்ளிகள் சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே மழலையர் வகுப்புகளுக்கும் ஆரம்ப வகுப்புகளுக்கும் கூட ஆன்லைன் வகுப்பு கள் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பல மணி நேரம் தொடரும் ஆன்லைன் வகுப்புகளுக்குக் கல்வியாளர்களும் பல்வேறு ஆசிரியர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான விதிமுறைகளை வகுத்து, அவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், எந்தெந்த வகுப்புகளுக்கு ஆன்லைன் கல்வியைக் கற்பிக்கலாம், எத்தனை மணி நேரம் எடுக்கலாம்? என்பன குறித்த விவரங்கள் வரையறைக்கப்பட்டுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ள தகவல் இதோ:

* எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளுக்கு, குழந்தைகளின் பெற்றோர்களுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்பு குறித்து அறிவுறுத்தக்கூடாது.

* 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் என்சிஇஆர்டியின் மாற்றுக் கல்வி அட்டவணையைப் பின்பற்ற வேண்டும். அதற்கான விவரங்களை http://ncert.nic.in/aac.html என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

* 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டு வகுப்புகளுக்கு மேல் பாடம் நடத்தக்கூடாது. ஒவ்வொரு வகுப்புக்கான காலமும் 30 முதல் 45 நிமிடங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

* 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நான்கு வகுப்புகளுக்கு மேல் பாடம் நடத்தக்கூடாது. ஒவ்வொரு வகுப்புக்கான காலமும் 30 முதல் 45 நிமிடங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

மேலும் ஆன்லைன் கல்விக்கு 8 வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, திட்டம், மதிப்பாய்வு, ஏற்பாடு, வழிகாட்டல், பேச்சு, பணியைப் பிரித்துக் கொடுத்தல், சரியாக நடக்கிறதா என்று அறிறிதல் மற்றும் பாராட்டுதல் ஆகியவற்றை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!