ஒற்றை தலைமை என்ற மிகப்பெரிய ஆயுதம் மம்தா பானர்ஜிக்கு கச்சிதம்!

ஒற்றை தலைமை என்ற மிகப்பெரிய ஆயுதம் மம்தா பானர்ஜிக்கு கச்சிதம்!

கடந்த 10 ஆண்டுகளாக மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வரும் நிலையில் மூன்றாவது முறையாக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி சாதனை படைப்பார் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி அசைக்கமுடியாத சக்தியாக இருப்பதற்கு காரணம் என்ன. தொடர்ந்து படியுங்கள்.

மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெரும்பான்மைக்கு தேவையான 147 இடங்களை விட அதிக இடங்களை கைப்பற்றி மம்தா மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பார் என ஆரூடம் சொல்லி இருக்கிறது தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள். முதலில் இது சாத்தியமா என்பதை பற்றி ஆய்வு செய்ய வேண்டியுள்ளது,

கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் கணிப்புகள் வெளியிடப்பட்ட போது 163 இடங்களை கைப்பற்றி மம்தா ஆட்சியை தக்க வைப்பார் என சொல்லி இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 211 இடங்களை கைப்பற்றி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை மம்தா பானர்ஜி பதிவு செய்திருந்தார் அதற்கு முந்தைய தேர்தலை விட அந்த தேர்தலில் 27 இடங்களை மம்தா பானர்ஜி அதிகம் பெற்று இருந்தார் வாக்கு வங்கியும் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் அதிகம் பிடித்திருந்தார்.

இதற்கு மிக முக்கிய காரணம் மம்தா பானர்ஜி காட்டிய அதிரடிகள். கூட்டணியில் பெரிதாக யாரையும் சேர்த்துக் கொள்ளாமல் 293 தொகுதிகளில் தனியாக நின்றதால் அதற்கான பலனை 2016 ஆம் ஆண்டு மம்தா பெற்றிருந்தார். தற்போதும் அதே பாணியில் கூட்டணியில் இடம் பெற்று இருப்பவர்களுக்கு வெறும் மூன்று இடங்களை மட்டும் கொடுத்து விட்டு மீதம் இழுக்கக் கூடிய 291 இடங்களில் தனியாக களம் காண்கிறார். மற்ற கட்சிகள் இன்னும் தொகுதிகளை கூட முடிவு செய்யாத நிலையில் 296 வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் அறிவித்து அதிரடியை காட்டியிருக்கிறார். இந்த அதிரடி நடவடிக்கைகள் தான் மம்தா பானர்ஜியின் தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது

கூட்டணி குழப்பங்கள், தொகுதி பங்கீட்டில் இழுபறி போன்றவை எதுவும் இல்லாமல் முடிவு களை மிக விரைவாக எடுப்பதன் மூலம் கட்சியினரையும் தொண்டர்களையும் தொடர்ந்து அவரால் உற்சாகமாக வைத்திருக்க முடிகின்றது. இது தேர்தல் நேரத்தில் அவருக்கு பெரும் பலனையும் கொடுத்து வருகிறது.

பொதுவாக ஒவ்வொரு தேர்தல்களிலும் அரசுக்கு எதிரான மனநிலை என்பது நிச்சயம் இருக்கும் அதுதான் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க கூடியதாக இருக்கும். குறிப்பாக கடுமையான வன்முறைக்கு பெயர்போன மேற்கு வங்க மாநிலத்தில் அரசுக்கு எதிரான மனநிலை இருந்தாலும் கூட மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே வன்முறை என்ற ஆயுதத்தை கையில் எடுப்பதால் அது ஒட்டுமொத்த எதிர்ப்பு மனநிலையாகத் தான் பதிவாகிறது. ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்தோ, ஜாதி சார்ந்தோ இல்லாமல் அது அரசியல் வன்முறையாக தான் இருக்கிறது. அப்படி எழும் மனநிலைகளை, அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை வழங்குவதன் மூலம் ஓரளவிற்கு மம்தா பானர்ஜி சாமாளிகிறார்.

உதாரணமாக நடப்பு சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 50 இடங்கள் இஸ்லாமியர்களுக்கு 35 இடங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு 79 இடங்கள் பழங்குடியினருக்கு 17 இடங்கள் இப்படி அனைத்து தரப்பினருக்கும் ஆன முக்கியத்துவத்தை பகிர்ந்து அளிப்பதால் பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்க முடிகிறது.

மம்தா பானர்ஜியின் மற்றொரு மிக முக்கியமான தேர்தல் ஆயுதம், ”தான் மேற்கு வங்கத்தின் மகள்” என்ற முழக்கம். மம்தா பானர்ஜி அளவிற்கு மிகுந்த செல்வாக்கு உடைய தலைவர்கள் அங்குள்ள மற்ற கட்சிகளில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மேற்கு வங்கத்தை 35 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த கம்யூனிஸ்டுகளான ஜோதிபாசு மற்றும் புத்ததேவ் பட்டாச்சாரியாவிற்கு பிறகு அவர்கள் அளவிற்கு புகழ்மிக்க தலைவர்கள் மேற்குவங்கத்தில் இல்லை இதே நிலைமைதான் காங்கிரஸ் கட்சிக்கும். பாரதிய ஜனதா கட்சி கடந்த சில ஆண்டுகளாக மட்டும் தான் வளர்ந்து வரக்கூடிய நிலையில் அங்கும் புகழ்மிக்க தலைவர்கள் யாரும் கிடையாது. எனவே ஒற்றை தலைமை என்ற மிகப்பெரிய ஆயுதம் மம்தா பானர்ஜிக்கு கச்சிதமாக பொருந்தி வருகிறது. மம்தா பானர்ஜியின் இந்த ஒற்றை தலைமைக்கு மிக முக்கிய காரணம் அவர் காட்டும் மாநில உரிமை மீதான அக்கறை மற்றும் பாரதிய ஜனதா கட்சியை மூர்க்கமாக எதிர்க்கும் முறை.

சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐ அதிகாரிகள் மேற்கு வங்க மாநில காவல்துறை அதிகாரிகள் வீடுகள் மற்றும் இல்லத்தில் சோதனைகள் நடத்த முற்பட்டபோது சிபிஐ அதிகாரிகளையே கைது செய்தார் முதல்வர் மம்தா பானர்ஜி. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில அரசுகளுக்கு எந்த நிதி உதவியும் வழங்காத இந்த கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என புறக்கணித்தார். இவை சில உதாரணங் கள் தான். இப்படி நூற்றுக்கணக்கானவை உள்ளது.மம்தா பானர்ஜியின் இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மாநிலத்தில் அவருக்கு கூடிய செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து உதவியாக இருந்து வருகிறது.

இவையெல்லாம் போக பெண்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு மேற்குவங்க மாநில அரசு செய்து வரும் நலத்திட்டங்களும் தேர்தல் சமயங்களில் அவருக்கு கைகொடுக்கிறது. பெண்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள பெண்களுக்கு கல்வியில் முன்னுரிமை, ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருட்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை நேரடியாக வழங்குதல் கார் மற்றும் சிறிய ரக வாகனங்களை வாங்கும் பொழுது 30% வரை மானியம் மேற்கு வங்கத்தின் கலாச் சாரத்தை காப்பாற்ற கலைஞர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை குறைந்த விலை மருந்தகங்கள் இவ்வாறு பல திட்டங்களை குறிப்பாக பெண்களை கவரக்கூடிய திட்டங்களை செயல்படுத்தி இருப்பதால் மொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட சரிபாதி உள்ள பெண் வாக்காளர்களின் ஓட்டுகள் மம்தா பானர்ஜியின் வெற்றிக்கு பெரிதும் உதவி வருகிறது.  இத்தகைய காரணங்கள் தான் மம்தா பானர்ஜிக்கு தேர்தல்களில் தொடர்ந்து சாதகமாக இருந்து வருகிறது அது இந்த முறையும் தொடருமா பொருத்திருந்து பார்ப்போம்.

நிரஞ்சன் குமார்

error: Content is protected !!