புண்ணிய இடங்கள் மதம் கடந்து மக்கள் கூடுபவை!
‘மயிலேறும் ராவுத்தர்’ என அழைத்து அருணகிரிநாதர் பாடிய முருகனின் பழனி கோவிலுக்குள் இந்து அல்லாதார் நுழைவது குறித்த நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் முஸ்லிம்கள் கூறும் முகமனான ஸலாம் என்பதையும் முருகனுக்குக் கூறுவார். முருகன் வழிபாட்டிற்கும் முஸ்லிம் களுக்கும் இருக்கின்ற தொடர்பு தமிழ்ச் சூழலில் மிக முக்கியமானது. பழம் மதுரையின் அடையாளம் திருப்பரங் குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் மேலே சிக்கந்தர்; கீழே ஸ்கந்தன். பக்தி, நம்பிக்கை, வேண்டுதல், சுற்றுலா, தொல்லியல், பண்பாடு, பொழுது போக்கு என வழிபாட்டு இடங்களுக்கு வருகிறவர்கள் பல தரப்பட்டு இருப்பார்கள். மதங்களைக் கடந்து, சாதிகளைக் கடந்து மக்களாகக் கூடுகிற இந்த இடங்களின் மீது தலையீடு நிகழ்த்தி மக்களில் ஒரு சாராரை வழி மறிப்பது என்பது ஆபத்தான போக்கு .
வைதீகப்படாத மக்களின் வாழ்வில் அந்தச் சாமி, இந்தச் சாமி பேதங்கள் எதுவுமில்லை. சமீபத்தில் திருமணப் பத்திரிகை ஒன்று பார்த்தேன், “அருள்மிகு பெரிய நாயகி துணை/ அருள்மிகு ஆனந்த வல்லி, அருள்மிகு கால பைரவர், அருள்மிகு முத்தால ராவுத்தர் துணை என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இதுதான் தமிழரின் நம்பிக்கை மரபு. ‘எந்தச் சாமியைக் கும்பிட்டால் என்ன ? யாராவது ஒரு சாமி வரம் கொடுக்காதா?!’ என்னும் எளிய மக்களின் நம்பிக்கையில் நெருப்பை அள்ளிப் போடுகிறது நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு.
சூரியன் மறைந்த நேரம் மெல்லிருட்டு முஸ்லிம்களின் தொழுகைப் பள்ளி வாசல்களின் முன்னால் முஸ்லிம் அல்லாத தாய்மார்கள், தந்தையர்கள் தங்களின் குழந்தைகளோடு வரிசை யாக நிற்பார்கள் . தொழுகையை நிறைவு செய்துவிட்டு வருபவர்கள் அந்த வரிசைகளை நோக்கி வருவார்கள். ஏதேனும் ஒரு திருக் குர்ஆன் வசனத்தை ஓதி ஒவ்வொரு குழந்தையின் நெற்றி யிலும் ஊதுவார்கள். தமிழகம் முழுவதும் இந்தக் காட்சியை நம்மால் காண முடியும்
.
குழந்தைகளைக் கொண்டுவந்து காத்து நிற்கும் பெற்றோருக்கும், குழந்தை களின் நெற்றியில் ஓதி ஊதும் அந்தத் தொழுகையாளிகளுக்கும் இடை யில் மதம் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. தமிழ்நாடு முழுவதும் இந்தக் காட்சியை நம்மால் காண முடியும் .!வீட்டில் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால், அருகிலிருக்கும் பள்ளி வாசலுக்கு எடுத்துச் சென்று மந்திரித்துப் பார்க்கும் சகோதர சமய உறவுகள் அடர்ந்த நிலம் இது.
மாதா கோவில் குருசடிக்கு மெழுகு வர்த்திக் காணிக்கை செலுத்தும் கிறிஸ்தவர் அல்லாத மக்கள் ஏராளம் உண்டு. மண்டைக்காட்டு அம்மனையும் குளச்சல் கடற்கரைப் புதூரின் லூசியாளையும் அக்காள் தங்கைகளாக உறவுமுறைப் பேணும் மரபு இந்த மண்ணிற்குரியது. குமரி மாவட்டத்தின் பல தர்ஹாக்களின் அருகில் காவல் தெய்வமாகச் சுடலை மாடன் நிற்பதைப் பார்க்க முடியும்.
இவை போன்ற புண்ணிய இடங்கள் மதமற்றவை. மதம் கடந்து மக்கள் கூடுபவை. அங்கே அவர்கள், அவர்களின் சுய அடையாளத்துடன் வரலாம் என்பதே அவற்றின் அழகு. தக்கலை சுற்றுவட்டாரத்தில் உயர் நிலை, மேல் நிலைப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்றும் தேர்வு நாளன்று தக்கலை பீர் முஹம்மது அப்பாவை வழிபட்டுச் செல்லும் மரபைப் பார்க்க முடியும். முஸ்லிம்களுக்கு அவர் இறைநேசர், முஸ்லிம் அல்லாதவர்க்கு அவர் சித்தர், பள்ளிநாயன், அல்லா சாமி. அங்கு வழங்கப்படும் உணவு முஸ்லிம்களைப் பொறுத்தவரை நேர்ச்சை. மற்றவர்களுக்கு அது பிரசாதம். வேறு வேறு அடையாளங்கள் கொண்டோ, வேறு வேறு பெயர்கள் கொண்டோ அழைப்பதனால் எந்த வேறுபாடும் இல்லை .
இயல்பாக மக்கள் இணைந்து கொள்கிற இத்தகைய ஒற்றுமைத் தலங்களின் மீது பெரும்பான்மை அடிப்படைவாதமும் , சிறுபான்மை அடிப்படைவாதமும் நீண்ட காலமாகவே குறி வைத்துத் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றன. மக்கள் இணக்கமாக இருத்தல் என்பது அவர்களின் அடிப்படைவாத அரசியலுக்கு ஒத்து வராது . ஆனால் அதே அடிப்படைவாதக் குரலை நீதிமன்றத்தில் இருந்து கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆகம விதிகளால் அல்ல, மக்கள் தங்களின் வாழ்வில் பேணும் ஆகும் விதிகளைக்கொண்டு மக்களை அரவணைத்துக் கொள்வதே அழகு…!