அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு!

லாகா இல்லாத தமிழ்நாடு அமைச்சரான செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு, இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னைஐகோர்ட் உத்தரவிட்டது. மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். முன்னதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை கடந்த செப்டம்பர் 20 -ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 முறை ஜாமீன் மறுக்கப்பட்டு இருந்தது. மேலும் செந்தில் பாலாஜியின் காவல் 8 வது முறையாக நீடிக்கப்பட்டது.

இந்த சூழலில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தது. செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அறிக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “மருத்துவக் காரணங்களைக் கூறி ஜாமீன் கோர முடியாது. செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்ட்ரைவில் இருந்த தகவலின் அடிப்படையில் வேலை பெற்றவர்கள் ரூ.67 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கொடுத்துள்ளார்கள். அதேபோல் சிறை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சிகிச்சை இல்லாத போது மட்டும்தான் ஜாமீன் கோர முடியும். ஆனால் செந்தில்பாலாஜிக்கு அதுபோன்ற அவசியம் ஏற்படவில்லை. மருத்துவமனையிலோ அல்லது அரசு மருத்துவமனையிலோ சிகிச்சை பெறலாம்.

கால் மறத்துப் போவதாக செந்தில்பாலாஜி தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தையும் ஏற்கக்கூடாது. அறுவை சிகிச்சை நடந்தது முதல் அவருக்கு அந்த பிரச்னை இருந்துள்ளது. ஆகவே தற்போது ஜாமீனுக்காக அதை கூற முடியாது.போக்குவரத்து துறைகளில் வேலை வாங்கு தருவதாக கூறி பணம் பெற்ற நபர்களில் அவரது சகோதரர் அசோக்குமார் முக்கிய நபராக இருக்கிறார். தற்போதுவரை அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பிருக்கிறது” என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். அதில், மருத்துவ காரணங்களை ஏற்க முடியாது என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதாலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!