மேட்டூர் அணைக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே!

மேட்டூர் அணைக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே!

காவிரி ஆறு பாசனம் மட்டும் வாழ்வாதாரத்துக்கானது மட்டுமல்ல… சுற்றுலாவுக்கும் தான். ஒக்கேனக்கலில் ஆரம்பித்து வங்கக் கடலில் கலக்கும் வரை பல்வேறு இடங்களில் நமக்கு காவிரி சுற்றுலா அம்சங்களை ஏற்படுத்தி உள்ளது. காவிரியின் முக்கிய அம்சம் மேட்டூர் அணை. ஆம்.. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் உள்பட 12 டெல்டா மாவட்டங்களின் பாசன தேவை மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மேட்டூர் அணை உயிர்நாடியாக விளங்குது.

மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி. அணையின் நீர்த்தேக்க பகுதி 59.25 சதுர மைல். அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி. ஆகும். (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி). அணையின் உச்ச நீர்மட்டம் 120 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம். பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடுவதற்காக அணையின் நீர்மட்ட அளவை பொறுத்து மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு, மின் நிலை மதகு என 3 நிலை மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அணையின் இடது கரைப்பகுதியில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் நிலையில் உபரி நீர் திறந்து விடுவதற்காக 16 கண் மதகுகள் அமைக்கபட்டுள்ளன. ஒவ்வொரு மதகும் 20 அடி உயரமும், 60 அடி நீளமும் கொண்டதாகும். இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் அதற்குரிய தளவாடங்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டன.

கொஞ்சம் விளக்கமா சொல்வதானால் கர்நாடக மாநிலம் குடகு மலையில் உள்ள மெக்காரா என்ற இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் வழியாக பாய்ந்தோடி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் வழியாக 800 கிலோமீட்டர் தூரம் கடந்து காவிரி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் முடிய பெய்யும் பருவ மழையினால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்துச்சு.இதனால் விவசாய பயிர்கள் நாசம் அடைவதை தடுப்பதற்காக ஆங்கிலேயர்களால் 1925-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன என்றொரு செய்தியுண்டு. அதே சமயம்
)1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயன்றது; அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்பு 1835 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரைத் திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.

1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர் , அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அணுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதக்கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார். அதன்படி மேட்டூரில் 1924ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சென்னையில் வசித்து வந்த ஸ்டேன்லி என்ற பொறியாளர் மூலம் அணைகட்ட ஆரம்பிக்கப்பட்டது என்றும் ஒரு செய்தியுண்டு.

ஆனாலும் அப்போதைய தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு என்ஜினீயர் கர்னல் டபிள்யூ.எல்.எல்லீஸ், அணை நிர்வாக என்ஜினீயர் வெங்கட்ராமையா, முதன்மை தலைமை என்ஜினீயர் முல்லிங் கஸ் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக அணை கட்டுமான பணியில் ஈடுபட்டாய்ங்க (கட்டிங் கண்ணையா). . 1800 குடிசைகள் அமைத்து, 11 ஆயிரத்து 800 பேர் உழைத்து, ஆண்களுக்கு 7 அணாவும், பெண்களுக்கு 4 அணாவும் கூலியாகக் கொடுத்து உருவாக்கப்பட்டது.

பொங்கி வரும் வெள்ளத்தில் அணை கட்டுவது அவ்வளவு எளிதானதல்ல. 1930 ல் அமராவதியில் பெருக்கெடுத்த வெள்ளம் அணையின் ஒரு பகுதியை அடித்துச் சென்றது. எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விபரம் இதுவரை இல்லை. ஆனால், இறந்த எண்ணிக்கை மறைக்கப்பட்டதை ஒரு செய்தி உறுதிப்படுத்துகிறது.அணை கட்டிய காலத்தில் 23 ஆயிரத்து 804 பேர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றதாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியின்போது அங்கு மலேரியா பரவியது. மொத்த தொழிலாளர்களில் 25% பேர் பாதிக்கப்பட்டார்கள்.

ஆனாலும் தொடரப்பட்ட அணையின் கட்டுமான பணி சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு 1934-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி நிறைவடைந்தது. இந்த அணை கட்டப்பட்டபோது அப்போதைய செலவுத்தொகை ரூ.4 கோடியே 80 லட்சம் ஆகும்.

இதைத்தொடர்ந்து 1934-ம் ஆண்டு இதே ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி, அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லி அணையை திறந்து வைத்தார். அவர் நினைவாகவே மேட்டூர் அணைக்கு ஸ்டாலின் நீர்த்தேக்கம் என்ற பெயரிடப்பட்டது. இது காலப்போக்கில் மேட்டூர் அணை என்று மக்கள் மத்தியில் அழைக்கப்பட்டு வருது.

ஆக ஆங்கிலேயர்கள் தமிழகத்திற்கு அளித்த வரப்பிரசாதமாக இந்த அணை திகழ்கிறது.

error: Content is protected !!