‘ஹனுமன்’ -விமர்சனம்!

‘ஹனுமன்’ -விமர்சனம்!

ஹீரோ தேஜா சஜ்ஜாவுக்கு சக்தி வாய்ந்த கல் ஒன்று கிடைக்கிறது. அதன் மூலம் மாபெரும் பலசாலியாக உருவெடுப்பதோடு, அதன் மூலம் ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறார். தேஜா சஜ்ஜாவின் சக்தி பற்றி தெரிந்துக்கொள்ளும் வில்லன் வினய், அவரிடம் இருக்கும் சக்தியை பறிப்பதற்காக அவரை தேடி வருகிறார். அவர் நினைத்தது நடந்ததா?, தேஜா சஜ்ஜாவிடம் ஹனுமானின் சக்திவாய்ந்த கல் கிடைத்தது ஏன்? போன்ற கேள்விகளுக்கான பதிலை ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி ஜானரில் சொல்வது தான் ‘ஹனு-மான்’.

நாயகனாக வரும் தேஜா சஜ்ஜா, துறுதுறு நடிப்பால் ஹனுமந்த் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். தனக்கு கிடைத்த திடீர் சக்தி மூலம் அவர் செய்யும் சாகசங்கள் அனைத்தையும் தெலுங்கு ஹீரோக்கள் படங்களில் செய்திருப்பதை சுட்டிக்காட்டுபவர் இறுதியாக பாலய்யா போல் ரயிலை விரலால் நிறுத்துவதற்காக கிளம்பும் காட்சியில் ஒட்டு மொத்த திரையரங்கே சிரிப்பு சத்தத்தால் அதிர்கிறது. காமெடி கலந்த நடிப்பில் சிறுவர்களையும் கவரும் தேஜா, காதல் காட்சி, செண்டிமெண்ட் காட்சி ஆகியவற்றிலும் அளவாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.வில்லன் வினை எப்பொழுதும் போல் கார்ப்பரேட் வில்லன் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களை கொடுத்து மிரட்டி பயமுறுத்துகிறார். அவருக்கு கொடுக்கப்பட்டது என்ன வேலையோ அதை நிறைவாகச் செய்திருக்கிறார். நாயகன் தேஜாவின் அக்காவாக வரும் வரலட்சுமி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கலங்கடித்திருக்கிறார். இவருக்கும் நாயகன் தேஜாவுக்குமான கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. குறிப்பாக இறுதிக் காட்சிகளில் கொஞ்சம் சிரிப்பையும் மீரி ரியல் எமோஷனலாக இருக்கிறது.

ஷிவேந்திரா ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிகப் பிரமாண்டம். இவருக்கு பக்கபலமாக மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள் உதவி புரிந்துள்ளன. குறிப்பாக கிராமம், ஆஞ்சநேயர் சிலை வி.எஃப்.எக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு கவனம் பெற்றுள்ளது. இப்படத்திற்கு அதுவே மிகப் பெரிய பிளஸ் ஆகவும் அமைந்திருக்கிறது. கௌரா ஹரியின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பிரமாண்டத்தைக் கூட்டியிருக்கிறது. குறிப்பாக இவரது பக்தி மயமான பின்னணி இசை பார்ப்பவர்களுகளை மெய் சிலிர்க்க வைத்தது.

ஆன்மீகம் பேசும் படம் என்றாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பிரசாந்த் வர்மா மற்றும் ஸ்கிரிப்ட்டில் பக்காவாக கதை எழுதியுள்ளனர். அதாவது கமர்ஷியல் சப்ஜெக்டுடன் தொடங்கி பிறகு ஃபேண்டஸி படமாக உருமாறி இறுதியில் ஆன்மீகப் படமாக முடிவடையும் விதத்தில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் வர்மா, கமர்ஷியல் பட விரும்பிகளுக்கான அம்சங்களையும், சிறுவர்களுக்கு பிடிக்கும் அம்சங்களையும் அளவாக கையாண்டு, அதை சரியான முறையில் ஆன்மீகத்தோடு சேர்த்து கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஹீரோவுக்கு போட்டியாக குரங்கு ஒன்று பேசிக்கொண்டு வலம் வரும் காட்சிகளை சிறுவர்கள் கொண்டாடி தீர்ப்பது உறுதி.

மொத்தத்தில் இந்த ‘ஹனு-மான்’-னை அனைவரும் கொண்டாடுவார்கள்.

error: Content is protected !!