கொரோனா போய் ஜிபிஎஸ் வந்தாச்சு- டும் டும் டும்!- பெரு நாட்டின் அதிர்ச்சி தகவல்!

கொரோனா போய் ஜிபிஎஸ் வந்தாச்சு- டும் டும் டும்!- பெரு நாட்டின் அதிர்ச்சி தகவல்!

டந்த 3 ஆண்டுகளாக உலகம் முழுவதையும் ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றே இன்னும் முழுமையாக விலகாத நிலையில் தென் அமெரிக்க நாடான பெருவில் ஜிபிஎஸ் எனப்படும் Guillain-Barre Syndrome என்கிற அரிய வகை நரம்பியல் நோய் அதிகரித்து வருவதால், அந்நாட்டில் அடுத்த 90 நாட்களுக்கு சுகாதார அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெருவில் இதுவரை 165 பேருக்கு ஜிபிஎஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் 4 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. ஈக்வெடார், கொலம்பியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை அண்டை நாடாக கொண்டு இருக்கும் பெரு ஒரு குடியரசு நாடாகும். இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 3.37 கோடியாகும். இயற்கை வளங்கள் அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்று பெரு நாடு. தற்போது இந்த பெரு நாடு பெரும் சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதாவது, அரிய வகை நரம்பியல் நோய் பெரு நாட்டை தற்போது உலுக்க தொடங்கியிருக்கிறது.

குய்லின் பார் சிண்ட்ரம் என்ற இந்த அரிதான நோய் ஏற்படுகிறபோது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே நம் நரம்பு மண்டலத்தை தாக்குகிறது. இதனால் தசை பலவீனம் அடைகிறது. இந்த நோய் வந்தால் கால்கள் மற்றும் கைகள் தான் முதலில் பாதிக்கப்படும். கை, கால், உடல் பகுதிகளில் உணர்வற்ற நிலை, பலவீனம், வலி ஆகியவை ஏற்படும். மெல்ல இவை மார்பு மற்றும் முகத்துக்கு பரவும். இதன் பிந்தைய அறிகுறிகளாக, உதவி இல்லாமல் நடப்பதில் சிரமம், கால்கள், கைகள் மற்றும் முகத்தை நகர்த்த இயலாமல் முடக்கம் ஏற்படுவது, சுவாசிப்பதில் சிரமம், மங்கலான அல்லது இரட்டை பார்வை, பேசுவதில் சிரமம், விழுங்குவதில் அல்லது மெல்லுவதில் சிக்கல்கள், சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் மலச்சிக்கல் தொடர்ச்சியான கடுமையான வலி ஆகியவை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளர். நோய் பாதித்த 4 வாரங்களில் அதன் கடுமையான நிலையை அடைந்து விடுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக ஜிபிஎஸ் நோய் அறிகுறிகள்:

*தசைகளில் பலவீனம்

* கை, கால்களில் கூச்ச உணர்வு

* பேசுவதில், மெல்லுவதில் அல்லது விழுங்குவதில் சிரமம்

* அதிகமான இதயத் துடிப்பு

* குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்தம்

* சுவாசிப்பதில் சிரமம்

இந்த நோய்க்கு என்று தனியாக சிகிச்சை இல்லை என்றாலும் வெளிப்படும் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சையளிப்பதோடு நோயின் தீவிரத்தையும் காலத்தையும் குறைக்க முடியும். பெரும்பாலானோர் இதிலிருந்து முழுமையாக தேறிவிடுவர். ஆனால் சிலருக்கு இது தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். சில நேரங்களில் பக்கவாதம் ஏற்படுகிறது. இந்நோய் எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடியதாக இருப்பதால், மிக கவனமுடன் இதை கையாள மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.

ஜிபிஎஸ் நோய் ஏற்படுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது பெரும்பாலும் தொற்றுநோய்களால் தூண்டப்படுகிறது. குறிப்பாக கேம்பிலோபாக்டர் ஜெஜூனி எனப்படும் பாக்டீரியாவால்தான் ஜிபிஎஸ் நோய் உண்டாகிறது. மேலும் ஜிபிஎஸ் நோய் சில தடுப்பூசிகளோடு தொடர்புடையதாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள். அந்த வகையில் கொரோனா, இரைப்பை குடல் தொற்று, ஜிகா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சிலர் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

மயோ கிளினிக் ஆய்வின்படி, ஜிபிஎஸ் நோய் உறுதிப்படுத்தப்பட்ட மூன்றில் இரண்டு பகுதி நோயாளிகள் கொரோனா, இரைப்பை குடல் தொற்று, ஜிகா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களாக இருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குயில்லன் பார்ரே சிண்ட்ரோம் நோயை எதிர்கொள்ள 3.27 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளார் பெரு அதிபர் டினா பொலுவார்டே.

error: Content is protected !!