மது விற்பனையில் இருந்து அரசு வெளியேற நல்ல நேரம் இது!

மது விற்பனையில் இருந்து அரசு வெளியேற நல்ல நேரம் இது!

டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கு திறக்கலாமா என்று அரசு பரிசீலிப்பதாக அமைச்சர் முத்துசாமி சொல்கிறார். அவரை பலரும் வறுக்கிறார்கள். அருகில் இருந்த அமுதாவுக்கும் அர்ச்சனை. ஆச்சரியம் இல்லை. மது என்று சொன்னதுமே சிலருக்கு நிதானம் போய்விடுகிறது. நமது வளர்ப்பு அப்படி. போலியான வாதங்களையும் போதனைகளையும் ஊற்றி ஊற்றி வளர்த்திருக்கிறார்கள். அதனால், எதார்த்தம் எது என்று தெரிந்தாலும் அதற்கு மாறாக கருத்து கூறும் கட்டாயத்தில் இருக்கிறோம். Politically correct மாதிரி Socially correct கருத்துகளை சொல்ல வேண்டி இருக்கிறது.

சிறந்த முடிவு மது விலக்கு. அதில் சந்தேகமே கிடையாது. அதை செயல்படுத்த முடியாமை அல்லது விரும்பாமைக்கு ஒவ்வொரு அரசும் பல காரணங்களை சொல்கின்றன. முடிவு இல்லாத விவாதம். மாற்று ஏற்பாடு என்ற பெயரில் நடப்பவை எல்லாம் கேலிக்கூத்து. அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் வருகை 500 கடைகள் மூடல். மூடிய பிறகு ஒரே ஒரு குடிமகனாவது குடிப்பதை நிறுத்தி இருப்பாரா? டாஸ்மாக் வருமானத்தில் ஒரு ரூபாய் குறைந்திருக்குமா? சான்சே இல்லை.

மாறாக, மூடல் விழா நடந்த இடத்தின் அருகில் உள்ள கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. திருவிழா கூட்டத்தை ஒழுங்குபடுத்த செய்வதை போல சவுக்கு, மூங்கில் மரங்களால் நீண்ட தடுப்பு அமைத்து, அருகில் உள்ள மற்ற கடைகளின் பிழைப்பில் மண்ணை போட்டிருக்கிறது டாஸ்மாக். பார் லைசன்ஸ் மூலமாக கொழித்த அதிமுகவினர் இன்னும் இறங்கி வர மறுப்பதால், பார்கள் மூடப்பட்டு தெருவே ஓப்பன் பாராக திகழ்கிறது. வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் கிளாஸ் தொடங்கி பொறித்த மீன், பீஃப் பிரியாணி வரை வரிசையாக தெருவோர கடைகள் முளைத்துள்ளன. அனைத்துக்கும் நடுவில் சுழல் விளக்கு பொருத்திய ஜீப், சைரன் ஒலி எழுப்பும் பைக் சகிதம் ஏழெட்டு போலீஸ்காரர்கள் பந்தோபஸ்து.

500 கடை மூடலுக்கு முன் வளைந்து நெளிந்தாவது வாகனங்கள் செல்ல முடிந்த தெருக்களில் இப்போது நடந்து செல்லக்கூட இடம் இல்லாமல் சுற்றிக் கொண்டு செல்கிறார்கள் பெண்களும் குழந்தைகளும் குடிக்காத ஆண்களும். குடிப்பது என்று ஒருவன் முடிவு எடுத்து விட்டால், அவனை தடுக்க எவராலும் முடியாது. கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதோ, கடை திறந்திருக்கும் நேரத்தை குறைப்பதோ குடிமகன்களை தடுக்க முடியாது. வேறெங்கும் இல்லாத அதிக விலையும், சரக்கின் மட்டமான தரமும் கூட குடிப்பவர்களிடம் குமுறலை எற்படுத்துகிறதே தவிர, குடியை விட்டொழிக்க தூண்டவில்லை. கேட்ட பிராண்டுகள் கிடைக்கவில்லை என்றால், கிடைத்த பிராண்டை திறந்து ஊற்றிக் கொள்பவர்களே 99 சதவீதம்.

கடைகளையும் நேரத்தையும் குறைப்பதால் மது கிடைக்காமல் எவரும் துடிக்கப் போவதில்லை. கடன் வாங்கியாவது கள்ளச்சந்தையில் அதிகம் கொடுத்து வாங்கி குடிப்பார்கள். 7 மணிக்கு திறக்க அமைச்சரிடம் கோரிக்கை வைத்தவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். டாஸ்மாக் கடையிலேயே குவாட்டருக்கு 10 ரூபாய் கொள்ளை அடிக்கும்போது, கள்ளச்சந்தையில் ரிஸ்க் எடுத்து பிசினஸ் செய்பவர்களுக்கு வேறு தண்டமாக அழ வேண்டி இருக்கிறதே என்பது அவர்களின் ஆதங்கம்.

பகல் 12 மணிக்கு கடை திறக்கும் வரை எந்த வேலையும் செய்யாமல் தவிப்புடனே திரியும் தொழிலாளர்களை எல்லா இடத்திலும் பார்க்கலாம். இரவு 10 மணிக்கு அடைத்து விடுவார்கள் என்பதால் என்ன வேலை இருந்தாலும் அரை மணி நேரம் முன்னரே ஏறக்கட்டி விட்டு கடை நோக்கி பாய்ந்தோடும் நடுத்தர வகுப்பினரையும் காணலாம். சினிமா டிக்கெட் வாங்குவதற்கு கூட இப்போதெல்லாம் யாரும் முண்டியடிப்பது கிடையாது. ஆன்லைன் புக்கிங் அனைத்தையும் புரட்டிப் போட்டு விட்டது. ஆனால் டாஸ்மாக் கடையில் ஒரு பீர் பாட்டில் வாங்கி வருவதற்குள் வியர்வையில் குளித்து ஆடை கசங்கி வரும் வாலிபர்களை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. ஆன்லைன் பர்ச்சேஸ், டோர் டெலிவரியை அனுமதித்தால் தீமைகளை காட்டிலும் நன்மைகள் அதிகம் என்பது யோசித்து பார்த்தால் தெரியும்.

ஆளும் கட்சி மட்டும் இல்லாமல் அனைத்து கட்சிகளும் பாத்திரங்களாக பங்கேற்று நடத்தும் நாடகம் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. ஒன்று முழுவதுமாக மூடி விடுங்கள். வேறு வழி இல்லாமல் குடியை விட்டு விலக பாதி பேருக்காவது வாய்ப்பு கிடைக்கும். அல்லது முழுவதுமாக திறந்து விடுங்கள். நினைத்த நேரம் வாங்கலாம் குடிக்கலாம் என்றால் அடித்துப் பிடித்து ஓடுவதோ அதிக விலைக்கு விற்பதோ நடக்காது. தெருக்களில் போக்குவரத்து சீராகும்.

உண்மையில், மது விற்பனையில் இருந்து அரசு வெளியேற நல்ல நேரம் இது. துறையின் முன்னாள் அமைச்சருக்கு நேர்ந்த கதியை சோதனையாக பார்க்காமல், அடி முதல் நுனி வரை புது கோணத்தில் ஆய்வு செய்து அதிரடியான முடிவு எடுக்க கிடைத்திருக்கும் வாய்ப்பாக முதல்வர் அணுக வேண்டும். எல்லா வியாபாரத்தையும் போல இதையும் தனியாரிடம் விட்டு விடலாம். எத்தனை மணிக்கு கடை திறக்கலாம் என்பதை ஏரியாவுக்கு தகுந்த மாதிரி ஓனரே முடிவு செய்து கொள்ளலாம். சில கடைக்காரர்கள் கூட்டணி அமைத்து ஏலத்தில் மற்றவர்கள் கடை எடுக்க விடாமல் தடுத்ததால், அரசே கடை நடத்த ஆரம்பித்தது. அது போன்ற கூட்டணி அமைக்க இடம் அளிக்காமல், வெளிப்படையான ஏலம் நடத்தி கடை உரிமம், பார் உரிமம் வழங்கினால் பிரச்னை வராது. ��

கவுன்சிலர்கள் தொடங்கி ஆலை அதிபர்கள் வரையில் ஆளும் கட்சியினர் கணிசமாக சம்பாதிக்க டாஸ்மாக் பெரிய களம் அமைத்து கொடுத்திருக்கிறது. அரசு கஜானாவுக்கும் ஆளும் கட்சியின் தேர்தல் செலவுக்கும் தாராளமாக அள்ளிக் கொடுக்கிறது. முக்கியமாக காவல் துறைக்கும் கை கொடுக்கிறது. இவர்களுக்கு எப்படி நிவாரணம் அளிக்கலாம் என்பதை தீர்மானிப்பது தான் சவால். தனியாரிடம் விடுவதால் அரசுக்கு வருமானம் அதிகமாகுமே தவிர நிச்சயமாக குறையாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

குடியால் ஏற்படும் தீமைகள் குறித்து போதுமான பிரசாரம் செய்தாகி விட்டது. செயலில் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. குடி பழக்கம் இருந்தால் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில் தொடங்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது வரை எல்லா இடத்திலும் எக்ஸ்ட்ரா சார்ஜ் செலுத்த வேண்டும் என்பதை முதலாவதாக செய்யலாம்.

கதிர்

படம் : Bala &  Saai

 

error: Content is protected !!