கூகுளின் செயற்கை நுண்ணறிவு ஆய்வு கூடம் -பெங்களூரில் அமைகிறது!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு ஆய்வு கூடம்  -பெங்களூரில் அமைகிறது!

பெங்களூருவில் புதிதாக சர்வதேச தரத்திலான ‘செயற்கை நுண்ணறிவு’ஆய்வு கூடம் ஒன்றை அமைக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கூகுள்  சார்பில்கூகுள் பார் இந்தியாவின்’ 5வது மாநாடு டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கூகுள் நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத் தலைவரும், பொறியாளருமான ஜெய் யாக்னிக், பெங்களூருவில், உலக தரத்திலான செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுக் கூடத்தை அமைத்து, பயனாளிகளுக்கு பல பயன்களை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக வலுமையான குழுவை உருவாக்கி அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வினை மேம்படுத்துவதோடு, நாட்டின் பல ஆராய்ச்சி பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆய்வு முடிவுகளை பயன்படுத்தி சுகாதார பிரிவு, விவசாயம், கல்வித்துறை சம்பந்தமாக செயலிகள் மற்றும் புதிய சேவைகளை உருவாக்க உள்ளதாகவும் ஜெய் யாக்னிக் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் புதிதாக கட்டப்படவுள்ள இந்த ஆய்வு கூடம், ஆராய்ச்சியாளர்கள் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், இதன் தலைவராக பிரபல விஞ்ஞானி மணிஷ் குப்தா செயல்படுவார் எனவும் தெரிவித்தார்.

மாநாட்டின் போது, கூடுதலாக சில அம்சங்களையும் கூகுள் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்தது. அதன்படி கூகுள் அசிஸ்டென்ட் பயனாளர்கள், தேவையான மொழியில் தகவல்களை தரும்படி கட்டளை வழங்கினால், கூகுள் அசிஸ்டென்ட் அதனை அறிந்து அத்தகவலை விரும்பும் மொழியில் தெளிவாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.

வோடபோன் – ஐடியா போன்ற செல்போன் இணைப்புடன் 2ஜி சேவை பெறும் வாடிக்கையாளர்கள், கூகுள் அசிஸ்டென்ட் மூலம் தகவல்களை பெற முடியும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!