எஸ். எஸ். வாசன்!

எஸ். எஸ். வாசன்!

குழலூதும் இரட்டைக் குழந்தைகள் எனும் டிரேட் மார்க் அந்தக் கால மனிதர்களுக்கு நல்ல அறிமுகம். இன்று மக்கள் மறந்திருக்கலாம். ஆம்! சென்னை அண்ணாசாலையில் அன்றைய மவுண்ட் ரோடில் இப்போது ஜெமினி மேம்பாலம் என்று அழைக்கப்படும் இடத்தில் நுங்கம்பாக்கம் திருப்பத்தில் அமைந்திருந்தது அந்த சினிமா ஸ்டுடியோ. அதன் அதிபர்தான் எஸ்.எஸ்.வாசன். சுப்ரமணியம் ஸ்ரீநிவாசன் என்பதன் சுருக்கம் இது.

s s vasan aug 26

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மிக பிரமாண்டமான ‘சந்திரலேகா’, ‘ஒளவையார்’ போன்ற படங்களை எடுத்து இந்தியாவின் சிசில் பி டெமிலி என்று பெயர் வாங்கிய இந்த திரைப்படத் தயாரிப்பாளர் பன்முகத் திறமை மிக்கவர். இவர் எடுத்த எந்தவொரு படமும் சோடை போகவில்லை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் புகழ் பெற்றது. ஜெமினி ஸ்டுடியோ அவ்வப்போது படம் எடுக்கக் கூடுகின்ற கம்பெனி போல அல்ல. அது ஒரு நிரந்தர ஸ்தாபனம்.

அங்கு ஊழியர்கள், டெக்னீஷியன்கள் போன்றவர்கள் நிரந்தரமாகப் பணியாற்றினார்கள். கதைக்கு என்று ஒரு இலாகா. அதில் பணிபுரிந்தவர்களும் உலகப் புகழ் பெற்றனர். கொத்தமங்கலம் சுப்பு, வேப்பத்தூர் கிட்டு போன்றவர்களை உலகுக்குக் காட்டிய ஸ்தாபனம் ஜெமினி. இதன் முதலாளி எஸ்.எஸ்.வாசன் திரைப்பட தயாரிப்பாளர், சினிமா ஸ்டுடியோ அதிபர், பத்திரிகை முதலாளி, சினிமா இயக்குனர், எழுத்தாளர், தொழிலதிபர் போன்ற பல நிலைகளில் பிரபலமானவர்.

கலைகளும், காவியங்களும், இதிகாசப் புராணங்களும் கரைந்தோடும் பொன்னி நதி என்று புகழ்ந்து போற்றப்படுகின்ற காவிரித்தாயின் நீர்ச்செழிப்பில் நீள் நெல் வயல்கள் நிறைந்து சூழ்ந்த தஞ்சாவூர் ஜில்லாவின் தென் பகுதியில் அமைந்த திருத்தலமான திருத்துறைப்பூண்டியில் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த சுப்ரமணிய அய்யர் – வாலாம்பாள் தம்பதியருக்கு 1904-ம் வருடம் ஜனவரி 2-ம்தேதி ஒரே மகனாகப் பிறந்தார் ஸ்ரீநிவாசன் என்னும் வாசன். நான்கு வயது இளம் பருவத்திலேயே தன் தந்தையை இழந்து தாயாருடன் அவருடைய உடன் பிறந்த மூத்த சகோதரியின் வீட்டில் தங்கி ஆரம்பக் கல்வி கற்று வந்தார்.

ஏழ்மை நிலையின் காரணமாக சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த தாய் வாலாம்பாள், அந்தக் காலத்தில் கைம்பெண்களுக்குக் கென்றே ஏற்பட்ட இட்லி வியாபாரம் செய்து கொண்டு தன் மகனை வளர்த்து அருகிலிருந்த எலிமென்டரி ஸ்கூலில் படிக்க வைத்தார்.

உயர்நிலைப்பள்ளிக் கல்வி முடிந்து மேற்கொண்டு பட்டப்படிப்பிற்காக சென்னைக்கு வந்து கல்லூரியில் சேர்ந்து எஸ்.எஸ்.எல்.சி.க்கு அடுத்ததான அன்றைய ‘பெலோ ஆப் ஆர்ட்ஸ்’ என்னும் ‘எப்.ஏ’ படித்து முடித்தார். (இந்த ‘எப்.ஏ’தான் பின்னாளில் ‘இன்டர் மீடியட்’ என்றும், அதன் பிறகு ‘பி.யூ.ஸி’ என்றும் ஆனது). மேற்கொண்டு பி.ஏ. பட்டப்படிப்பு நிறைவு பெற்று அரசாங்க உத்தியோகம் பார்ப்பதைவிட, தொழில் செய்து முன்னேற்றம் அடையலாம் என்ற நோக்கத்துடன் பலவிதமான சிறு சிறு தொழில்களை மேற்கொண்டு அதில் கணிசமான லாபமும் பெற்றார் வாசன்.

இந்த நிலையில் அன்றைய சினிமாவின் பிதாமகரும், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஸ்டூடியோ அதிபருமான கே.சுப்ரமணியம் மவுண்ட் ரோடில் தனக்குச் சொந்தமான ஸ்டூடியோவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அதை விற்றுவிடத் தீர்மானித்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட வாசன், எண்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கி ‘ஜெமினி ஸ்டூடியோஸ்’ என்று ‘நாமகரணம்’ செய்து அதன் கீழே ‘மூவிலேண்ட்’ என்றும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்தார்.

ஜெமினி – ஸ்டூடியோஸ் ஆகிய இரண்டு சொற்களுக்கும் இடையில் ‘இரட்டை’ என்பதைக் குறிப்பதன் பொருட்டு கோவணம் கட்டிக்கொண்டு குழலூதும் இரண்டு குழந்தைகளின் அழகிய உருவத்தையும் வரைந்து வைத்தார்.

ஜெமினி ஸ்டூடியோவின் ஒவ்வொரு படமும் இந்த இரட்டைக் குழந்தைகளின் குழலோசையோடு தொடங்கப்பெற்று, அதே இனிய குழலோசையுடன் இறுதி பெறும்!
வாசன் முதன் முதலாகத் தனது சொந்த ஜெமினி ஸ்டூடியோவிலேயே 1941-ல் ‘மதன காமராஜன்’ என்ற படத்தை தயாரித்தார். அக்கால பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் வி.வி.சடகோபன், அன்றைய பேரழகி கே.எல்.வி.வசந்தா ஆகியோர் இணைந்து இந்த படத்தில் நடித்தனர். பிரபல டைரக்டர் பி.என்.ராவ் இயக்கினார்.

‘மதன காமராஜன்’ படத்தைத் தொடர்ந்து ‘மிஸ் மாலினி’ வரையில் 7 ஆண்டுகளில் 11 வெற்றிப்படங்களை எடுத்து வெளியிட்ட வாசன், 12-வது படமாக தனது ஜெமினி ஸ்டூடியோவின் நிரந்தர ஆஸ்தான ஹீரோ நடிகரான எம்.கே.ராதா, ரஞ்சன் மற்றும் அன்றைய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கிய டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோரை வைத்து, ஆங்கிலப்படங்களுக்கு நிகரான ஒரு பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கும் திட்டத்திலும், லட்சியத்திலும் 1948-ல் ‘சந்திரலேகா’வைத் தொடங்கினார். அந்தப் படத்திற்காக அவர் போட்டிருந்த பட்ஜெட்டையும் மீறி பணம் தண்ணீராகச் செலவாகிக் கொண்டிருந்தது.

‘யானையைக் கட்டித் தீனி போட்டதைப் போல’ என்று பேச்சு வழக்கில் சும்மா சொல்வது உண்டு. அது வாசனைப் பொறுத்தவரையில் பலித்து உண்மையாகி விட்டது. ஆம், சந்திரலேகா கதையில் வரும் காட்சி நிகழ்ச்சிகளுக்காக யானைகளும், குதிரைகளும், சிங்கம், புலி மற்றும் பிராணிகள் உட்பட பல பேரைக் கொண்ட ஒரு பெரிய சர்க்கஸ் கம்பெனியையே ஜெமினி ஸ்டூடியோ வளாகத்திற்குள் வைத்துக்கொண்டு அன்றாடம் அவர்களைக் கவனித்துப் பராமரித்துக் கொண்டு, சர்க்கஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளையெல்லாம் வாசனே இயக்கி படமாக்கினார். ஸ்டூடியோவிற்குள்ளேயே தினமும் சர்க்கஸ் நடந்தது!

ஏற்கனவே தன் சொந்த வாழ்க்கையிலும், தொழிலிலும் எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும் தன்னையோ, மற்றவர்களையோ சமரசம் செய்து கொள்ள விரும்பாத அழுத்தமான தீவிரக் கொள்கை கொண்ட வாசனுக்கு, சந்திரலேகா படத்தின் காரணமாக ஒரு கட்டத்தில் அதுவரையில் இல்லாத அளவிற்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

அதற்காக அவர் சற்றும் மனந்தளராமல், இரவு பகலாகக் கண் விழித்துக் கஷ்டப்பட்டுச் சம்பாதித்துக் கண்போலக் காப்பாற்றி வந்த ஆஸ்திகளை அடமானம் வைத்து பெரிய அளவில் கடன் வாங்கி சந்திரலேகா படத்தை எடுத்து முடித்து மூச்சு விட்டார்.

‘மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை’ என்பது பழமொழி. ஆனால் வாசனோ, மலையைப்பிளந்து மாணிக்கத்தை எடுத்தார். அந்தக் காலத்தில் தமிழ்ப் படங்கள் ஒவ்வொரு ஆண்டின் புதுவருடப்பிறப்பு, பொங்கல், தீபாவளி ஆகிய விழாக் காலங்களிலும் மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே புதிய படங்கள் ரிலீசாகும். அவற்றிற்கு 10 முதல் 15 பிரதிகள் (பிரிண்ட்) வரையில் எடுக்கப்படும். அந்த வழக்கத்திற்கு மாறாக வாசன் முதன் முதலாக சந்திரலேகா படத்தின் 35 பிரதிகளை எடுத்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ‘ஏ’ சென்டர் என்று கூறப்படும் தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய ஊர் தியேட்டர்களிலும் வெளியிட்டார்.

அதுவரையில் தமிழ்த் திரைப்படத்தில் கண்டிராத – ஆங்கிலப் படங்களுக்கு நிகரான அற்புதக் காட்சிகள் நிறைந்து, தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக 30 லட்ச ரூபாய்களுக்கு மேல் செலவு செய்து, பதினெட்டாயிரம் அடிகள் நீளத்தில் தயாரிக்கப்பட்டு, தமிழ்ப்புத்தாண்டுக்கு 5 நாட்கள் முன்னதாக 9.4.1948-ல் ரிலீசான சந்திரலேகாவின் பிரமாண்டத்தைப் பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் பிரமித்து திகைத்துத் திரும்பத் திரும்ப அந்தப் படத்தைக் கண்டு களித்தனர்.

படத்தின் உச்சகட்டத்தில், பல பெரிய பெரிய முரசுகளின் மீது அழகிய நங்கைகள் நின்று நடனம் ஆடி, அந்த முரசுகளின் உள்ளிருந்து பல போர் வீரர்கள் வெளிவந்த அந்த அற்புதக்காட்சி ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. இன்று வரையில் எந்த ஒரு இந்திய மொழிப் படத்திலும் அப்படி ஓர் அதிசய காட்சி இடம் பெறவில்லை என்பதே சினிமா மேதையான எஸ்.எஸ்.வாசனின் கற்பனைத் திறனுக்கும், கலை அறிவிற்கும் ஒரு சிறந்த சான்றாகும்.

‘சந்திரலேகா’ தமிழ்ப்படத்துடன் வாசன் ஓய்ந்து போய் உட்கார்ந்துவிடவில்லை. மெச்சத்தகுந்த மேதைகளின் உடம்புதான் ஓய்வை நாடுமே தவிர, மூளை ஓய்வெடுத்துக் கொள்ளாது அல்லவா! வாசன் தனது அரிய, அற்புத, அபூர்வப் படைப்பான சந்திரலேகாவை அப்படியே இந்தி மொழியில் தயாரித்து அதிலும் முதன் முதலாக 150 பிரதிகள் வரையில் எடுத்து வட இந்தியா முழுவதும் வெளியிட்டு வெற்றி பெற்றார்.

சென்னையிலிருந்து சிறந்த சினிமாக் கலை ஓவியர்களையும், பெயிண்டர்களையும் மும்பைக்கு அழைத்துச்சென்று அழகழகான பெரிய பெரிய வண்ண ‘பேனர்’களை வரையச் செய்து அவற்றை மும்பை, டெல்லி, கொல்கத்தா முதலிய பெரு நகரங்களின் முக்கிய – மக்கள் அதிக அளவில் அன்றாடம் கூடுகின்ற இடங்களாகப் பார்த்து எல்லாருடைய கண்களிலும் படும்படியாக வைக்கச் செய்தது மட்டும் அல்ல – அந்தந்த இடங்களுக்கெல்லாம் அவரே நேரில் சென்று பார்த்து திருப்தி அடைந்தார்.

முதன் முதலாக, வட இந்திய சினிமாவையே ஒரு கலக்குக் கலக்கிய வாசனின் விளம்பர நுட்பத்தைக்கண்டு ஏனைய இந்திப்படத் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் மலைத்துத் திகைத்துக் கடிதங்கள் எழுதியும், தொலைபேசி வாயிலாகவும் வாசனை மனமாரப் பாராட்டித் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

எஸ்.எஸ்.வாசன் என்ற ஓர் அதிமேதையான தமிழ் சினிமா தயாரிப்பாளரின் விளம்பர – வியாபார யுக்தியின் மூலமாக – காரணமாக அனைத்திந்திய திரைப்படத்துறையிலும், தொழிலிலும் ஒரு திருப்பமும், மாற்றமும் விளைவித்தது என்றால் அது சற்றும் மிகை அல்ல.

பிற்காலத்தில் மும்பை இந்திப்பட உலகில் அடியெடுத்து வைத்த ஏவி.மெய்யப்ப செட்டியார், வாஹினி பி.நாகிரெட்டியார், கோவை பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் ஜூபிடர் பிக்சர்ஸ் எம்.சோமசுந்தரம், எஸ்.கே.மொய்தீன் போன்ற தென்னிந்திய ஸ்டூடியோ அதிபர்களுக்கெல்லாம் ஜெமினி வாசன்தான் முன்னோடியாகவும், முன்னுதாரணமாகவும், உந்துதல் உணர்வாகவும் (‘இன்ஸ்பிரேஷன்’) விளங்கினார் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது வரலாற்று உண்மையாகும்.

மக்களின் மன அழுத்தத்தையும், பாரத்தையும் குறைத்து அவர்களின் கவலைகளை மறக்கச் செய்து மகிழ்வித்த மாமேதையான வாசன், 1968- 1969-களில் தனது 65-வது வயதில் நோய்வாய்ப்பட்டார். வயிற்றில் உபாதை ஏற்பட்டு அது வெறும் வலிதான் என்று எண்ணி அவ்வப்போது பல்வேறு மருத்துவர்களிடம் சென்று மருந்து மாத்திரைகளை மட்டுமே விழுங்கி நாட்களை நகர்த்தி, காலத்தைக் கடத்திக்கொண்டிருந்த அவருக்கு கடைசிக் கட்டத்தில்தான் தெரிந்தது. தனது வயிற்றில் கொடிய புற்று நோய் உண்டாகி, அது நாளடைவில் வளர்ந்து இறுதி நிலையை அடைந்து விட்டது என்ற உண்மை.

காப்பாற்றப்படக்கூடிய காலக்கட்டத்தையெல்லாம் கடந்து போய்விட்ட வாசன் இதே ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி (1969-ல்) அமரர் ஆனார். அவருடைய இறுதி ஊர்வலம் அவரது விருப்பப்பிரகாரம் மிகவும் எளிமையாக சாஸ்திரச் சம்பிரதாய ஐதிக முறைப்படி அவர் வாழ்ந்த ‘சுதர்ஸன்’ இல்லத்திலிருந்து கிருஷ்ணாம்பேட்டை மயானத்திற்கு தோளில் சுமந்து செல்லப்பட்டது. சுமந்து சென்ற அந்த நால்வருள் ஜெமினிகணேசனும் ஒருவராவார்.

error: Content is protected !!