காந்திஜி நினைவு தினம் – அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு!

காந்திஜி நினைவு தினம் – அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு!

காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட தினத்தையொட்டி மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு. எ.வ.வேலு, உதயநிதி, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 77வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள காந்தியடிகளின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், சென்னை எழும்பூரில் உள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், காந்தியடிகளின் நினைவு தினத்தை தமிழகம் முழுவதும் மத நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்க திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.இதுகுறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.கஸ்டாலின் வெளியிட்டிருந்த செய்தியில், மதநல்லிணக்கத்தின் அடையாளமான காந்தியை மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜன.30ம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாக கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக, தமிழகத்துக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. அதனால், ஜன.30ம் நாளன்று மாவட்டத் தலைநகரங்களில் அனைவரும் மதநல்லிணக்க உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றனர்.திமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உறுதிமொழி நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது, மனிதநேயம் காப்போம், மதவெறியை விலக்குவோம். வேற்றுமையில் ஒற்றுமை காப்போம். மதவெறி சக்திகளை வேரறுப்போம். பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுப்போம். அமைதியான இந்தியா வேண்டும் என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது.

error: Content is protected !!