கலைஞர் கருணாநிதியின் இமையாக இருந்த சண்முகநாதன் காலமானார்!

கலைஞர் கருணாநிதியின் இமையாக இருந்த சண்முகநாதன் காலமானார்!

றைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் (80) உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் இன்று காலமானார்..சுமார் 48 ஆண்டுகள் கலைஞரின் பி.ஏ-வாக இருந்த சண்முகநாதன் கலைஞர் முதல்வராக இல்லாத போது அவரது உதவியாளராக பணியை தொடர தனது அரசு பதவியை துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்முக நாதன் – கலைஞர் கருணாநிதியின் நிழல், இமை அல்லது எதிரொலி என்று சொன்னால் மிகையல்ல.. சற்றேறகுறைய 50 ஆண்டுகளாக கலைஞருடன் வாழ்ந்து இருக்கிறார். கோபாலபுர இல்லம், முரசொலி அலுவலகம், சினிமா நிகழ்ச்சிகள், அரசியல் மேடைகள் என கருணாநிதி செல்லும் அனைத்து இடங்களிலும் அவருடன் செல்லும் ஒரே நபர் உதவியாளர் சண்முகநாதன் தான். கருணாநிதியை சந்திக்க விரும்பும் பத்திரிகையாளர்கள், முக்கிய தலைவர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் இந்த ’குட்டி பி.ஏ.’ என்றழைக்கப்பட்ட சண்முகநாதன் அனுமதித்தால்தான் பார்க்க இயலும் .

பெரும்பாலும் சுருக்கமாக பேசும் சண்முகநாதனிடன் அவர் வாழ்க்கைக் கதைக் குறித்து கேஷூவலாகக் கேட்ட போது சொன்ன தகவலிதோ: “ திருவாரூர் பக்கமுள்ள சின்ன ஊரு. நிறையப் பேரு ‘பக்தவச்சலம்’னு பேரு வைக்கிறாங்களே, அது எங்க ஊரு சாமிதான். 1942-ல பொறந்தேன். அப்பா நாகஸ்வர வித்வான். வாழ்ந்து கெட்ட குடும்பம். கூடப் பொறந்தது மூணு தம்பிங்க. மூணு தங்கச்சிங்க. நான்தான் மூத்த பிள்ளை. கஷ்ட ஜீவனம். காவிரியோட கிளை ஆறான ஓடம்போக்கியைத் தாண்டித்தான் போய்ப் படிக்கணும். உள்ளூர்ல, அப்புறம் அம்மையப்பன்ல, அப்புறம் திருவாரூர் வி.எஸ்.டி. ஸ்கூல்ல படிச்சேன். ரொம்ப சிரமப்பட்டுதான் படிக்க வெச்சாங்க. இன்னும் நெனைப்பிருக்கு. ஃபீஸ் கட்ட கடைசி நாள். காலையில ‘இரு வந்திடுறேன்’னு சொல்லிட்டுப் போனார் அப்பா. ஊருணிக்கரையில போய் சாயங்காலம் வரைக்கும் உட்கார்ந்திருக்கேன். அப்பா வரலை. ராத்திரி எதையோ அடகு வெச்சுப் பணம் வாங்கிட்டு வந்தார். மறுநாள் ஸ்கூல் போனா, எங்க ஆசிரியரே பணம் கட்டிட்டார். வாழ்க்கை இப்படிப் பலரோட உதவியோடும் சேர்த்துதான் நம்மளை ஒரு இடத்துல கொண்டுவந்து உட்கார வைக்குது. படிப்பு முடிச்சதும் திருவாரூர் கூட்டுறவு வங்கியில வேலைக்குச் சேர்ந்தேன். மாதம் 50 ரூபாய் சம்பளம். எழுத்தர் வேலை. ஆனா, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செய்வேன்கிறதால எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். கூடவே நான் டைப் ரைட்டிங் கத்துக்கிட்ட இன்ஸ்டிடியூட்லேயே பகுதிநேர வேலைக்கும் போனேன். வேலையிருந்தால் மூணு ரூபாய் கூலி. ஆனா, எல்லா நாளும் வேலை இருக்காது. காத்துக் கிடக்கணும். அந்தச் சமயத்துலேயே சர்வீஸ் கமிஷன் தேர்வெழுதித் தேர்வானேன்.

வங்கியில யாருக்கும் அனுப்ப மனசில்லை. அப்புறம் அவங்களே, ‘சிட்டி போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல வேலை கிடைச்சிருக்கு. பெரிசா வருவே’ன்னாங்க. சென்னைக்கு வந்தேன். சென்னைக்குப் போறேன்னு தெரிஞ்சதும் என்னோட இன்ஸ்டிடியூட் வாத்தியார் எனக்கு பேன்ட் சட்டை எடுத்துத் தந்தார். சென்னை வந்து முதல் ஒரு மாசம் அந்த பேன்ட் சட்டையைத்தான் தினம் துவைச்சிப் போட்டுக்கிட்டு வேலைக்குப் போனேன். வேற நல்ல உடுப்பு என்கிட்ட கிடையாது. ராயப்பேட்டைல சொர்ணண்ணன் வீட்டுல தங்கியிருந்தேன். ஆபீஸ்க்கு தினம் நடந்துதான் போவேன். மாசம் 135 ரூபாய் சம்பளம். அதுல 75 ரூபாயை வீட்டுக்கு அனுப்பிடுவேன். மீதி 60 ரூபாய் என் செலவுக்கு. அது போதாது. வேலையோடேயே தொலைநிலைப் படிப்புல வேற சேர்ந்துட்டேன். சரி, இங்கே பகுதிநேர வேலை என்ன கிடைக்கும்னு பார்த்தேன். என்விஎஸ் பட்டணம் பொடி நிறுவனத்துல வேலை கிடைச்சுது. காலையில் 5 மணிக்கெல்லாம் எந்திருச்சு ஓடுவேன். 8 மணி வரைக்கும் வேலை. மாசம் 50 ரூபாய் கிடைக்கும். அவர் டிக்டேட் பண்ணுவார். அதை டைப் அடிச்சுக் கொடுக்கணும். கமிஷனர் ஆபீஸ்லேயும் வேலைக்குக் குறைவிருக்காது. பல நாட்கள் அங்கேயே தங்கி வேலை பார்க்க வேண்டியிருக்கும். 1965 இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் நடந்தப்போ வேலைப் பளு தாங்காம ஓடிப்போன ஆட்களெல்லாம் உண்டு. தினம் ஆயிரக் கணக்கான கைதுகள் நடக்கும். எல்லாரோட விவரமும் அடிச்சு சேகரிக்கணும். முதல் நாள் காலையில ஆரம்பிச்சு மறுநாள் மதியம் வரைக்கும் ஒண்ணுக்குப் போகக்கூட எழுந்திரிக்காம வேலை பார்த்த நாளெல்லாம் உண்டு. பத்து, பதினஞ்சாயிரம் பேரைப் பட்டியல்ல அடிக்கணும்னா..! அப்படி வேலை பார்த்ததுக்காக ரிவார்டெல்லாம் வாங்கியிருக்கேன். அப்புறம் தமிழ் ஷார்ட் ஹேண்ட் பாஸ் பண்ணினேன். அதுதான் என்னை கலைஞர் வீட்டில் உட்கார வெச்ச்து “ என்றார்.

கலைஞர் கருணாநிதிக்கும் இந்த சண்முகநாதனுக்கு இடையேயான உறவு அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்துக் கொள்ள முடியாத ஒன்று. கருணாநிதியின் மன ஓட்டம் தொடங்கி எந்த விரல் அசைவுக்கு என்ன அர்த்தம்? என்ன நூலை எப்போது படிப்பார்? எப்போது தூங்குவார்? என கருணாநிதியை பற்றி தலை முதல் கால் வரை தெரிந்து வைத்திருந்தவர் இவரே.

சண்முகநாதனை கருணாநிதி எப்படி இந்த பணிக்கு அழைத்துக் கொண்டார் என்பதை, அவரே ஒருமுறை தெரிவித்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு சண்முகநாதனின் இல்லத்திருமண் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துக் கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், இந்த ருசிகர தகவலையும் வெளியிட்டார். அந்த விழாவில் கருணாநிதி பேசியதாவது “ முன்பெல்லாம் பேராசிரியர், என் போன்றோரின் பேச்சுகளை உடனுக்குடன் பதிவு செய்து எழுதி மேலிடத்துக்கு அனுப்பும் பணியை காவல் துறையின் துப்பறியும் பிரிவினர் மேற்கொள்வர்.

அப்படி பதிவு செய்த பேச்சுகளை வைத்து வழக்கும் போடுவார்கள். அப்படித்தான் ஒருமுறை என் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு போடும் அளவுக்கு அப்படி என்ன நான் பேசிவிட்டேன் என்பதை அறிய, போலீஸிடமிருந்த எனது பேச்சு நகலை வாங்கிப் பார்த்தேன். வியந்தும் போனேன். என்னுடைய பேச்சு, பேராசிரியர் அன்பழகனின் பேச்சு மற்றும் திமுகவினரின் பேச்சுகளெல்லாம் அப்படியே எழுத்து வடிவமாகப் பதிவாகி யிருந்தது. ஒரு எழுத்துகூட தவறாமல் அத்தனையும் பதிவாகி இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ’

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ‘நீங்கள் இப்படிப் பேசினீர்களா?’ என்று நீதிமன்றத்தில் கேள்வி கள் கேட்ட நேரத்தில், ‘மனச் சாட்சிப்படி உண்மைதான், அவை நாங்கள் பேசியது தான்’ என்று ஒப்புக்கொள்ளவும் நேரிட்டது. யார் இவ்வளவு தெளிவாக எங்கள் பேச்சை அச்சு அசலாக படியெடுத்திருப்பார்கள் என்று விசாரித்தபோதுதான், சண்முக நாதன் பற்றி எனக்கு தெரிய வந்தது. நான் அமைச்சரானபோது, பி.ஏ.வாக யாரைப் போடலாம் என யோசித்த நேரத்தில் சண்முகநாதன்தான் நினைவுக்கு வந்தார். அந்தத் தம்பியை வைத்துக் கொள்கிறேன் என்றேன்.

சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட, என்னு டைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர். வெறும் சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர்” என்று உருக்கமாக கூறி இருந்தார்.

அதே சமயம் சண்முகநாதனிடம் கலைஞரிடம் இணைந்தது குறித்து கேட்ட போது, ‘நான் ஆரம்பத்தில் சொன்னது போல் தமிழ்நாடு போலீஸ் துறையில் ‘தமிழ் சுருக்கெழுத்து நிருபர்’ பணியில் இருந்தேன். எதிர்க்கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டங்களுக்குச் சென்று அவர்களின் பேச்சை சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதை அதிகாரிகளுக்கு தட்டச்சு செய்து அனுப்புவதுதான் என் வேலை. இந்தநிலையில் கலைஞர் 1967-ம் ஆண்டு அண்ணாவின் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது நான் பார்த்துவந்த வேலைபற்றி அறிந்த கலைஞர், கல்கி இதழில் மேலாளராக இருந்த நண்பர் திரு.சண்முகவடிவேலு அவர்களின் மூலம் என்னைக் கூப்பிட்டனுப்பினார். ஆனால் அதற்கு முன்பே அவரிடம் திரு.நீலகண்டன், திரு.வெங்கட்ராமன் இருவரும் உதவியாளர்களாக சேர்ந்திருந்தனர். அதனால் நான் பார்த்துவந்த காவல்துறை வேலையிலிருந்து தமிழகச் சட்டமன்ற மேலவையில் தமிழ்ச் சுருக்கெழுத்தாளராக பணிமாற்றிக்கொண்டேன். காலம் கடந்தது, 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம்தேதி பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தார். அதே பிப்ரவரி 10-ம் தேதி தலைவர் கலைஞர் முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தசமயம் நான் என் தங்கையின் திருமணத்துக்காக ஒரு மாத காலம் விடுமுறையில் சொந்தக் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னை கலைஞரின் உதவியாளராக நியமனம் செய்த தகவல் முதல்வர் அலுவலகத்தில் இருந்து தந்தி மூலமாக எனக்கு வந்தது. நான் விடுமுறையை ரத்து செய்துவிட்டு உடனடியாக சென்னை திரும்பினேன். 1969 பிப்ரவரி மாதத்தில் தலைவரிடம் உதவியாளராக சேர்ந்த நான் அன்னையிலே இருந்து தொடர்ந்து 48 ஆண்டுகள் உதவியாளனாக பணியாற்றினேன்.

என்மீது தனிப்பட்ட முறையில் அன்பாக இருப்பார். ஒருமுறை திருவல்லிக்கேணியில் பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு தலைவரின் பேச்சை டைப்செய்து முடித்துவிட்டு கோபாலபுரம் வீட்டில் இருந்து புறப்பட இரவு ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. அப்போது என் வீடு அண்ணாநகரில் இருந்தது. அந்தநேரத்தில் ஸ்கூட்டரில்தான் வீட்டுக்கு செல்வேன். செல்போனும் அப்போது கிடையாது. வீட்டுக்குச் செல்லும்போது பாதி வழியில் கடும்மழை. வீட்டுக்குள் சென்றதும், ‘தலைவர் இரண்டுமுறை போன் செய்து உங்களைக் கேட்டார்’ என்றார் என் மனைவி. ‘நான் டைப் செய்து கொடுத்துவிட்டு வந்ததில்தான் ஏதோ தவறு நடந்துவிட்டது’ என்று எனக்கு உதறல் எடுத்து விட்டது. கோபாலபுரம் வீட்டுக்கு போன் செய்தேன். தலைவரோ, ‘பத்திரமா வீடு போய்ச்சேர்ந்துட்டியானு கேக்கத்தான்யா போன் பண்ணினேன்’ என்றார். அழுதேவிட்டேன்.

அது சமயம் சண்முகநாதன் தனது 48 ஆண்டு பணியில் இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார். அவரின் பிரிவு தன்னை மிகவும் பாதித்ததாக கருணாநிதி தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.

அது குறித்து ஒரு பேட்டியின் போது சண்முகநாதன் , ‘உங்களுக்கும் கலைஞருக்கும் கருத்துவேறுபாடுகள் வந்துள்ளனவா?’ என்று என்னிடம் சிலர் கேட்பதுண்டு. அவரிடம் செல்லச் சண்டைகள் போடுகிற அளவுக்கு எனக்கு எந்த அடிப்படைத் தகுதியும் இருப்பதாக நான் கனவில்கூட நினைத்தது இல்லை. தலைவர் ஒன்று சொல்லி விட்டார் என்றால் அதுதான் எனக்கு வேதவாக்கு. அவரது உதவியாளர் பணியிலிருந்து இரண்டு முறை விலகி என் சொந்த ஊருக்கே போனது உண்டு. ஆனால் அவரிடம் நான் எப்போதும் கோபித்துக்கொண்டதே இல்லை.

ஆனால் வருத்தப்பட்டு அழுதிருக்கிறேன். ஒருமுறை ட்ரெயினில் செல்லும்போது அவர் என்னை மிகவும் கடிந்துகொண்டார். பிறகு என் இடத்துக்குச் சென்று தனிமையில் அமர்ந்து அழுதேன். அதன்பின், ‘சண்முகநாதனை அதிகமா திட்டிட்டோமோ’ என்று அவருக்கு தோன்றியிருக்க வேண்டும். அதனால் அருகிலிருந்த அன்பில் தர்மலிங்கம் மாமாவை என்னை சமாதானப்படுத்த அனுப்பினார். ‘யோவ் மாப்ள, தலைவரே உன்னை சமாதானம் செய்யச்சொல்லி அனுப்பினார்டா’ என்று அன்பில் மாமா சொன்ன அடுத்த நிமிடமே என் வருத்தமெல்லாம் மறைந்து விட்டது.

அதேபோல என் குடும்பத்தாரிடமும் அன்பாக இருப்பார். என் தந்தை மறைந்தபோது, தலைவர் வந்தது மட்டுமல்லாமல் சுடுகாடுவரை வந்து எனக்கு ஆறுதல் சொன்னார். என் வீட்டுக்கு மூன்றுமுறை நேரில் வந்து எனக்கு ஆறுதல் கூறியதையும் என்னால் மறக்கவே முடியாதது. எனது திருமணம், என் தம்பி தங்கைகள் திருமணம், என் மகன்கள், மகள் திருமணம் என எங்கள் வீட்டில் நடந்த அனைத்து திருமணங்களையும் தலைமையேற்று தாலி எடுத்து கொடுத்து நடத்தியது தலைவர்தான்.

அதிலும் என் திருமணம் நடந்த கதை சுவையானது : என் வீட்டுக்காரங்க பெயர் யோகம். காரைக்குடி. என்னை மாதிரி அவங்களும் கஷ்டப்படுற குடும்பத்துலேர்ந்து வந்தவங்கதான். 1971-ல் எங்க கல்யாணம் நடந்துச்சு. பெங்களூர் போய்ட்டு காரில் திரும்பி வந்துக்கிட்டிருக்கோம். தலைவர் பேச்சுவாக்குல சொல்றாரு, “அடுத்த வாரம் இந்நேரம் சண்முகநாதன் பொண்டாட்டியோட இருப்பான்.” எனக்குத் திகைப்பாயிப் போச்சு. கிருஷ்ணகிரி பக்கம் ஒரு இடத்துல தலைவர் காபி குடிக்கிறதுக்காக இறங்கினாரு. அப்ப நான் நைஸா சின்னம்மாகிட்ட கேட்டேன், “ஏம்மா, தலைவரு ஏதோ கல்யாணம்னு சொன்னாரே, என்னதும்மா?” அவங்கதான் பத்திரிகை முதற்கொண்டு அடிச்சு வெச்சிட்ட தகவலைச் சொன்னாங்க. தலைவர் சொல்லி கருணானந்தம் எல்லாத்துக்கும் ஏற்பாடு செஞ்சுருந்தார். கல்யாணத்து அன்னிக்கு எனக்கு, அழகிரிக்கு, ஸ்டாலினுக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி டிரஸ். சின்னம்மாவோட நகைகளை எல்லாம் பொண்ணுக்குப் போட்டு சிங்காரிச்சிருந்தாங்க. அப்போ ஆரம்பிச்சு என் குடும்பத்துல எல்லாத்துக்கும் அவர் முன்னாடி நின்னுருக்கார். எங்கப்பா ஆஸ்பத்திரியில இருந்தப்போ “ஏன் இன்னும் போய்ப் பார்க்கலை?”னு மொத்த குடும்பத்தையும் சத்தம் போட்டு அனுப்பிச்சார். அப்பா இறந்தப்போ முழு நாளும் கூடவே நின்னார்” என்று நினைவு கூர்தார்.

ஆக கலைஞரின் வாழ்க்கையில் நிழலாக இருந்தவர் விண்ணுலகிலும் அவ்ருக்கு உதவவே சண்முகநாதன் காலமாகி விட்டார் என்றுதான் தோன்றுகிறது

Related Posts

error: Content is protected !!