சான்டா கிளாஸ் தொப்பி & பரிசுப் பொருட்களுடன் குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்த ஒபாமா!

சான்டா கிளாஸ் தொப்பி & பரிசுப் பொருட்களுடன் குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்த ஒபாமா!

அமெரிக்காவிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சான்டாகிளாஸ் வேடமணிந்து குழந்தை களைச் சந்தித்தார் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. இது பற்றிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ளது குழந்தைகளுக்கான தேசிய மருத்துவமனை. நேற்று இங்கு திடீரென்று சென்றார் அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சான்டா கிளாஸ் தொப்பி அணிந்து பரிசுப் பொருட்களுடன் மருத்துவமனைக்குள் நுழைந்தார். அங்கிருந்த குழந்தைகளை நலம் விசாரித்தவர், அவர்களிடம் பரிசுப் பொருட்களை அளித்தார். பல்வேறு வகைப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கட்டியணைத்துத் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு குறித்து, தேசிய மருத்துவமனையில் இருந்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவொன்றை வெளியிட்டார் ஒபாமா. அதில், மருத்துவமனையில் இருந்த அற்புதமான குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் சந்தித்துப் பேசத் தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகத் தெரிவித்தார்.

“இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையான என்னால், இம்மாதிரியான சூழலில் செவிலியர்கள், ஊழியர்கள், மருத்துவர்கள் இந்த குழந்தைகளைக் கவனித்து வருவதை நினைத்துப் பார்க்க முடிகிறது. இங்கு இதுவே மிக முக்கியமான விஷயம்” என்று பாராட்டு தெரிவித்தார்.

ஒபாமா மருத்துவமனைக்குச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு நன்றி தெரிவித்து தேசிய குழந்தைகள் மருத்துவமனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. “எங்களது நோயாளிகளின் தினத்தைப் பிரகாசமாக்கியதற்கு நன்றி. இங்கிருக்கும் அனைவரையும் உங்களது வருகை ஆச்சர்யப்படுத்தியது. எல்லோருடைய முகங்களிலும் புன்னகையை வரவழைத்தது. எங்கள் நோயாளிகள் உங்களது இருப்பையும் பரிசுப் பொருட்களையும் விரும்பினர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!