ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது!

சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் மற்றும் அவர்களது உறவினர்களை தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை சென்னை போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தாவில் ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வுபெற்ற பின்னர் தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து அவதூறான கருத்துக்களை வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.
இதையடுத்து கர்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன் கடந்த மாதம் 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில் கர்ணனை நேரடியாக வரவழைத்து, விசாரணை நடத்தியதாகவும், அந்த விசாரணையின் போது இனிமேல் இது போன்ற வீடியோக்களை வெளியிட மாட்டேன் என்று கர்ணன் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். இது குறித்து விளக்கமளிக்க தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் வரும் 7-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் முன்னாள் நீதிபதி கர்ணனை இன்று பிற்பகல் ஆவடியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.