திமுக முன்னாள் எம்எல்ஏ & தலைமை நிலைய செயலாளர் கு.க.செல்வம் காலமானார்!

திமுக முன்னாள் எம்எல்ஏ & தலைமை நிலைய செயலாளர் கு.க.செல்வம் காலமானார்!

திமுக தலைமை நிலையச் செயலாளரும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

🦉யாரிந்த கு.க. செல்வம்? – கட்டிங் கண்ணையா டைரிக் குறிப்பு🧐

“ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர் இருந்தால் அங்கு செல்வமும் இருப்பார்” அப்படீங்கறது அ.தி.மு.க வட்டாரத்தில் அப்போ புழங்கிய சொலவடை. அந்தளவுக்கு எம்.ஜி.ஆருக்கு இந்த கு.க.செல்வம் நெருக்கம். அதே செல்வம்தான் பின்னாளில் அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இருந்தால் அவருடனேயே முழுநேரமும் இருப்பார். அப்படி தான் இருக்கும் தலைமைக்கு நெருக்கமாகவே இருந்து பழக்கப்பட்ட கு.க.செல்வம் ஒருக் கட்டத்தில் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி தாமரையில் தஞ்சமடைந்து மீண்டும் தாய்கழகம் திரும்பியவர்..

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் எம்.ஜி.ஆர் சி,.எம்.மா இருந்தபோ அவருக்கு ரைட் ஹேண்டா இருந்தவர் ஜேப்பியார். அந்த ஜேப்பியாருக்கு நம்பிக்கைக்குரிய ஆசாமியா அப்போது இளவட்டமா இருந்த கு.க.செல்வம் இருந்தார். அந்த நட்பினால் எம்.ஜி.ஆரிடம் செல்வத்தை அறிமுகம் செஞ்சு வைத்தார். அந்த அறிமுகத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட செல்வம், டெய்லி மார்னிங் ராமாவரம் தோட்டத்துக்கு போனா நைட்டுதான் வீடு திரும்புவார். எம்.ஜி.ஆர் வீட்டுக்கு வேண்டிய சகல எடுபிடி உதவிகளையும் செய்து வந்ததால் எம்.ஜி.ஆர் மனைவி ஜானகிக்கும் நெருக்கமான நபராக மாறினார் செல்வம்.

தலைமையுடனான இந்த நெருக்கத்தால் அ.தி.மு.க-வில் பவுர்ஃபுல் மனிதராகவும் வலம் வந்தார் செல்வம். இதுக்கிடையிலே அன்றைக்கு அ.தி.மு.க-வில் சென்னையில் முக்கிய புள்ளியாக விளங்கிய தி.நகர் மூர்த்தியும், கு.க.செல்வமும் நெருங்கிய நண்பர்கள். தி.நகர் மூர்த்தி, அன்பழகன் பழக்கடைக்கு எதிரே, `முத்து பழக்கடை’ என்கிற பெயரில் பழக்கடை நடத்திவந்தார். இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களின் இந்தப் பழக்கடைப் போட்டியே அரசியல் போட்டிக்கு அடித்தளம் அமைச்சுது. அன்பழகன் பழக்கடைக்குப் போட்டியாகச் செயல்பட்ட முத்து பழக்கடைதான் கு.க.செல்வத்தின் அரசியல் பேசும் இடமாக அப்போ இருந்துச்சு.

இதனால் ஆரம்பம் முதலே மறைந்த ஜெ.அன்பழகனுக்கும் கு.க.செல்வத்துக்கும் ஒத்துப்போகாத நிலைதான் . அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜெ – ஜா என்று கட்சி பிரிஞ்சபோது ஜானகியின் ஆதரவாளராக இருந்தார் கு.க.செல்வம். அதற்கு ஜானகி மீது இருந்த பாசமும், ஆர்.எம்.வீரப்பனின் ஆலோசனையும் காரணமாக இருந்துச்சு. அந்தகட்சி உடைந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையே தொடர்ந்து பிரச்னை இருந்துவந்துச்சு. முன்னாள் அமைச்சர் வளர்மதி அப்போ ஜானகி அணியிலிருந்தார். அவருடன் கு.க.செல்வம் இணைந்துகொண்டு போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சாணியைக் கரைத்து ஊற்றும் போராட்டத்தை நடத்தினார். இதுதான் கு.க.செல்வத்தைக் கடைசிவரை ஜெயலலிதாவிடம் நெருங்கமுடியாமப் போச்சு(கட்டிங் கண்ணையா)

அதுனாலே ஜெயலலிதா 91-ம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, செல்வம் அரசியல் நடவடிக்கையில் தீவிரம் காட்டாமல் தொழில்களில் தனது கவனத்தைத் திருப்பினார். ஆனால், ஜானகியம்மாவின் ஆளாகவே அப்போதும் பார்க்கப்பட்டார். ஆரம்பத்தில் கு.க.செல்வம் தொழில் தொடங்க ஜேப்பியாரும் சில உதவிகளைச் செஞ்சார். அதே போல் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த ராமச்சந்திர உடையாரிடமும் எதையும் கேட்டு பெற்றுக்கொள்ளும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார் இந்தச் செல்வம்.

இந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி தொழில்களை ஒருபுறம் விஸ்தரித்த நேரத்தில்தான் அ.தி.மு.க-வின் முதல் ஐந்தாண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. அதற்கு முன்பாகவே ஜானகியம்மாள், “அ.தி.மு.க-வில் நீ இருந்தால் வளர விடமாட்டார்கள். தி.மு.க-வுக்குச் போயிடு; எனக்குள்ள தொடர்புகளை வைத்து கருணாநிதியிடம் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்” என்று ஆலோசனை கொடுத்தார்.

இதுக்கிடையிலே 96-ம் ஆண்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது சென்னை மாநகரத் தந்தையாக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன்பிறகு மீண்டும் அரசியலில் தீவிரம் காட்ட நினைத்த கு.க.செல்வம், தி.மு.க-வில் இணைஞ்சார். அப்போ ஜெ.அன்பழகனும் இவர் சார்ந்த தி.நகர்ப் பகுதியிலே இருந்தார். அன்பழகன் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்ததால், கு.க.செல்வம் ஸ்டாலினின் ஆதரவாளராகத் தன்னை அடையாளப்படுத்த ஆரம்பிச்சார். ஒரு கட்டத்தில் அன்பழகன் மாவட்டச் செயலாளராக இருந்த மேற்கு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் பதவிக்கே கு.க.செல்வம் போட்டியிட முடிவு ஆசைப்பட்டார்.

உடனே அன்பழகன் நேரடியாகக் கருணாநிதியைச் சந்தித்து, “இந்த ஒரு முறை எனக்கு மாவட்டச் செயலாளர் வாய்ப்பை தாங்கோ” அப்படீன்னு உருக்கமாகக் கேட்டதால் கருணாநிதியே கு.க.செல்வத்தை அழைத்து, “இந்த முறை அன்பழகன் இருக்கட்டும், அடுத்த முறை உனக்குப் பார்த்துக்கொள்ளலாம்” என்று உறுதி கொடுத்தார். அந்த அடிப்படையில்தான் 2015-ம் ஆண்டு இரண்டாவது முறையாக மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்தார் அன்பழகன்.

அதை அடுத்து இந்த செல்வத்தை சமாதானம் செஞ்சு ஸ்டாலினால் செல்வத்துக்கு வழங்கப்பட்ட பதவியே தலைமை நிலையச் செயலாளர் என்ற பதவி.

அதே சமயம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போ அன்பழகனுக்காக விட்டுக்கொடுத்த பதவியை அன்பழகன் மறைவுக்குப் பிறகு தலைவர் தனக்குத் தருவார் என்று எதிர்பார்த்தவருக்கு அந்தப் பதவி கிடைக்காமல் போன நிலையில் போர்க்கொடி தூக்கியபடி தாமரைக்கு தாவ காரணமாக அமைந்துவிட்டது. அதே நேரம் அவர் சொத்து சுகங்களை காக்க டெல்லியில் சரண்டாரானார் என்றும் சொல்லுவாய்ங்க

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முறைப்படி பாஜகவில் இணைந்த அவர், அதே ஆண்டு நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்ட்டார். ஆனால் அந்த வாய்ப்பு புதியதாக பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு வழங்கப்பட்டதால் பாஜக தலைமை மீது செல்வம் அதிருப்தியில் இருந்தார்.

இதனால் கடந்த 2022ஆம் ஆண்டில் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். அவருக்கு மீண்டும் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுச்சு.. அண்மைகாலமா சில பல உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தன் சகா ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கு.க.செல்வம் காலமானார்..

error: Content is protected !!