முதல் மற்றும் இரண்டாம் சுதந்திரம்!

முதல் மற்றும் இரண்டாம் சுதந்திரம்!

நேற்று பாகிஸ்தானுக்கு சுதந்திர தின வாழ்த்து சொன்னதை வைத்து நக்கலடித்து இதே போல இன்று இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்து சொல்வாயா? என்று இந்துத்துவர்கள் கேட்கிறார்கள். வாழ்த்து சொல்வதில் எனக்கெந்த தயக்கமும் இல்லை. பல முறை வாழ்த்து சொல்லி இருக்கிறேன். இந்த முறையும் சொல்வேன். ஆனால் இதை அவர்கள் கேட்பதுதான் சிரிப்பை வரவழைக்கிறது.

இந்தியாவின் சுதந்திரத்துக்கு எந்த வகையிலும் பங்களிக்காத இயக்கம் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகா சபை. ‘”வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை இரும்புக் கரம் கொண்டு நீங்கள் ஒடுக்க வேண்டும்,’ என்று வைஸ்ராய்க்கு இந்து மகா சபை தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி கடிதம் எழுதி இருக்கிறார். பாஜகவின் தாய்க்கட்சியான பாரதிய ஜன சங்கத்தை நிறுவியவர் இவர்தான். 26 ஜனவரியை கறுப்பு தினமாக இந்து மகா சபை இன்று வரை அனுசரித்து வருகிறது.

காந்தி கொலையுண்ட போது தங்கள் அலுவலக வாயில்களில் தேசியக் கொடியை கிழித்துப் போட்டு ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் அவர் சாவைக் கொண்டாடினார்கள். 2002 வரை கூட இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதை ஆர்எஸ்எஸ் தவிர்த்து வந்தது. வாஜ்பாய் ஆட்சி நடந்து வந்த சமயத்தில் ‘வேறு வழியில்லாமல்’ கொடியேற்ற ஆரம்பித்தார்கள். தேசிய கீதத்தையும் கூட ஆரம்பம் முதலே ஆர்எஸ்எஸ் மதித்ததே இல்லை. வந்தே மாதரத்தைத்தான் தேசிய கீதமாக போற்றி வருகிறார்கள். அதற்குக் காரணம் கூட தேச பக்தி அல்ல. அந்தப் பாடல் கொஞ்சம் துர்கை வழிபாட்டுப் பாடல் போன்றது என்பது காரணம். அதை வைத்து முஸ்லிம்களை சீண்ட முடியும் என்பது கூடுதல் போனஸ். இதற்காகவே வந்தே மாதரத்தை எடுத்துப் போற்ற ஆரம்பித்தார்கள்.

இதுதான் நீங்களும் உங்கள் முன்னோர்களும் தேசிய சின்னங்களை, தேசிய தினங்களை மதித்த லட்சணம். இப்படிப்பட்ட பாரம்பரியத்தில் இருந்து வந்து விட்டு வெட்கமே இல்லாமல் தேசபக்தி பற்றி அடுத்தவர்களுக்கு வாய் கிழிய பாடம் எடுக்கிறீர்கள். உங்களைப் போல தேச விரோத ஆர்எஸ்எஸ்சின் பாரம்பரியத்தில் வந்தவனல்ல நான். ‘பாரத மாதா என்பது பாரதத்தின் நிலம், நீர், மரம், செடி, கொடி அல்ல. பாரதத்தின் விளிம்பு நிலை மக்களின் ஒட்டு மொத்த உருவகம்தான் பாரத மாதா,’ என்று சொன்ன நேருவின் பாரம்பரியத்தில் வந்தவன். நேருவையும், அவரது குருநாதர் காந்தியையும் போலவே இந்தியாவுடன் சேர்த்து அனைத்து மானுடத்தையும் நேசிப்பவன். அனைத்து மானுட வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் சிந்திப்பவன்.

எனவே தேசபக்திப் பாடத்தை போய் உங்கள் தலைவர்களுக்கு வழங்குங்கள்.

இதோ எனது வாழ்த்து: சியாமா பிரசாத்துகள் மற்றும் ஹெட்கேவார்கள் போட்ட தடைக்கற்களை எல்லாம் தாண்டி நேருவும் காந்தியும் கணக்கற்ற காங்கிரஸ் தொண்டர்களும், தேசபக்தர்களும் பற்பல ஆண்டுகள் போராடி, சிறையில் கிடந்து வாங்கித் தந்த சுதந்திரத்துக்காக இந்தியர்களுக்கு வாழ்த்துகள். தேச மக்களின் மீது அன்பும் பரிவும் கொண்ட உண்மையான தேசபக்தர்கள் அனைவரும் கை கோர்த்து வரும் ஆண்டு இரண்டாம் சுதந்திரம் கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவோம்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!