இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!- முழு விபரம்!

இன்ஜினியரிங்  படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!- முழு விபரம்!

பொறியியல் எனப்படும் இன்ஜினியரிங் படிப்புக்கு 1,78,959 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியான நிலையில், கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் 1,57,378 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 3,100 இடங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. 11,804 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து படித்து, பொறியியல் கலந்தாய்வில் இடம்பெற உள்ளனர். அங்கீகாரம் பெற்றும் 430 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையை நடத்த உள்ள நிலையில் வரும் ஜூலை 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. அன்று தொடங்கி 26-ம் தேதி வரைக்கும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 28-ம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. 28-ம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை முதல் சுற்று கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்விலேயே இடஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரிகள் ஒதுக்கப்படும். இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9 முதல் 22 வரை நடைபெறும். மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும். செப்டம்பர் 15-ம் தேதிக்குள்ளாக கலந்தாய்வு முடிக்கப்படும்.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை 430 அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் உள்ளன. அந்த கல்லூரிகளில் 1.56 லட்சம் இடங்கள் உள்ளது. இது சென்ற ஆண்டை விட 3100 இடங்கள் கூடுதலாக இருக்கிறது. 7.5% என்ற அடிப்படையில் 11,804 இடங்கள் உள்ளன. இது சென்ற ஆண்டை விட 236 இடங்கள் கூடுதலாக உள்ளன. இந்த ஆண்டு புதிதாக 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 1.87 லட்சம் மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த கலந்தாய்வில் 1.78 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். மருத்துவ கலந்தாய்வு முடிந்த பிறகுதான் பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது. காலியிடங்கள் இல்லாத அளவிற்கு இந்த கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும். ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்ட பிறகு அரசு அல்லது வேறு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது என்றால் அவர்கள் கட்டிய பணத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.

கூடுதல் விவரங்களுக்கு:

தொடர்பு எண்‌: 044 – 2235 1014 / 1015
அழைப்பு எண்‌: 1800 – 425 – 0110

இ- மெயில் முகவரி: [email protected]

error: Content is protected !!