‘எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் அனல் பறந்த விவாத விபரம்!

‘எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் அனல் பறந்த விவாத விபரம்!

Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார்.தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2, யாத்திசை உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் ஓம் பிரகாஷ் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். படத்தொகுப்பை வேல்முகனும் கலை வடிவமைப்பை சூர்யாவும் கவனித்துள்ளார்.

அக்டோபர் 6 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆக்சன் ரியாக்சன் சார்பில் ஜெனிஷ் இந்தப்படத்தை வெளியிடுகிறார். இதனை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் என யாருமே சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்காமல் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், தயாரிப்பாளர் கார்த்திக் பேசும்போது, “அடிப்படையில் வழக்கறிஞர் என்றாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் பயிற்சி எடுத்தேன். கடந்த ஏழு வருட தவமாக தற்போது இந்த படத்தை தயாரித்துள்ளேன். இந்த ஏழு வருடங்களில் ஒவ்வொரு முறையும் இந்த படத்தை துவங்க முயற்சிக்கும்போது சில தடங்கல்கள் ஏற்பட்டு முயற்சி தள்ளிப்போனது. ஆனாலும் ‘எனக்கு என்டே கிடையாது’ என்கிற எங்கள் படத்தின் டைட்டிலை எனக்கு நானே சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டேன்.இந்த படத்தில் மூன்று பேருக்கு இடையே ஏற்படும் ஒரு சிறிய போராட்டம் ஒன்று இருக்கிறது. இதற்கு ஸ்டண்ட் மாஸ்டரை வைத்து படமாக்கினால் நன்றாக இருக்கும் என்பதால் ஓம் பிரகாஷை அழைத்தோம். அவர் அதை ஒரு பிரமாதமான சண்டைக் காட்சியாகவே அமைத்துக் கொடுத்தார். யாத்திசை போன்ற படத்தில் 300 பேருக்கு மேல் வைத்து சண்டை காட்சிகளை உருவாக்கியவர் வெறும் மூன்று பேருக்கான சண்டைக் காட்சியையும் அழகாக வடிவமைத்து கொடுத்தார். சமீபத்தில் நடிகர் விஷால் பேசும்போது மூன்று கோடி, நான்கு கோடி வைத்துக்கொண்டு சின்ன படங்களை தயாரிக்கிறோம் என யாரும் வர வேண்டாம் என கூறியிருந்தார். இதுவே ஒரு விதமான சனாதானம் தான்.. இப்படி சொல்ல யாருக்குமே உரிமை இல்லை” என்று கூறினார்.

இப்படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்றுள்ள விநியோகஸ்தார் ஜெனிஷ் பேசும்போது, “சமீபத்திய நிகழ்வில் நடிகர் விஷால் சின்ன படங்களை எடுப்பவர்கள் தயவு செய்து சினிமாவுக்கு வர வேண்டாம் அதற்கு பதிலாக அந்த காசில் சொத்து வாங்கி போடுங்கள் என்று கூறியதை அவர் சொன்ன ஒரு அறிவுரையாக தான் நான் பார்க்கிறேன். அவர் ஒரு தயாரிப்பாளராக தனது கடந்தகால அனுபவத்திலிருந்து அப்படி கூறியுள்ளார். அவர் சொன்னது போல இன்று சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதிலும் ஓடிடி தளங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதிலும் நிறைய சிரமங்கள் இருக்கிறது. லட்சங்களில் எடுக்கப்பட்ட படங்களை விநியோகித்து கூட நல்ல லாபம் பார்த்தேன். அதேசமயம் சமீபத்தில் ஒரு ஐந்து கோடி பட்ஜெட்தில் எடுக்கப்பட்டு வெளியான படம் வெறும் பத்து லட்சம் தான் வசூலித்தது. டாடா, குட் நைட் போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வசூல் செய்தன என்பதையும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் கலாசரண் பேசும்போது, “இந்தப் படத்தில் கடைசி டெக்னீசியனாக இணைந்தது நான்தான்.. சொல்லப்போனால் மொத்த படத்தையும் எடுத்து முடித்துவிட்டுத் தான் என்னிடம் வந்தார்கள்.. பாடல்களுக்கு கூட மாண்டேஜ் காட்சிகளை முன்கூட்டியே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து அதற்கு பாடல்களை உருவாக்க சொன்னார்கள். அதே சமயம் எனக்கு வேண்டிய சுதந்திரத்தையும் கொடுத்தார்கள். இந்த படத்தில் இரண்டு பாடல்களை பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோர் பாடியுள்ளனர். அபிஷேக் ராஜா என் இசையில் ஏற்கனவே சில சுயாதீன பாடல்களை பாடியுள்ளார்” என்றார்.

இயக்குநர் விக்ரம் ரமேஷ் பேசும்போது, “ நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் இது ஒளிவு மறைவில்லாத ஒரு நிறுவனம். கதையை சொல்வதற்கு முன்பாகவே, இதுதான் பட்ஜெட்.. நான் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறேன். என்னுடைய நண்பர்களும் இதில் என்னுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என முதலிலேயே கூறிவிட்டேன். தயாரிப்பாளரும் எந்த நிபந்தனையும் விதிக்காமல் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்ல ரொம்பவும் தாமதப்படுத்தாமல் கதை சொன்ன ஒரு வாரத்திலேயே படத்தையும் துவங்கி விட்டார்கள். இந்த படத்தில் நடித்துள்ள சேகர் என்கிற கதாபாத்திரம் ஒரே நாளில் பலவிதமான பிரச்சனைகள சந்திக்கும்… அவரது வாழ்க்கையும் இந்த படத்தின் கதையும் முடிந்து விடும் என நினைக்கும் நேரத்தில் மீண்டும் புதிதாக இன்னொரு விஷயம் தொடரும். அதனால் தான் எனக்கு எண்டு கார்டே இல்லை என்கிற டைட்டிலை இந்த படத்திற்கு வைத்தோம்: என்று கூறினார்.

error: Content is protected !!