‘எல் நினோ’ காரணமாக கொரோனாவை விட கடுமையான வைரஸ் உலகைத் தாக்கலாம் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

சர்வதேச அளவில் 7 காலநிலை மாதிரிகள் (climate models ) இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு வரை சூப்பர் எல்-நினோ காலமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்தத் தரவுகளை அப்படியே எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனவும் சில விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
எல்-நினோ சரி, அது என்ன சூப்பர் எல்-நினோ?
எல்-நினோ நிகழ்வு என்பது, மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதிகளில், அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதியில், பெருங்கடல் பரப்பின் வெப்பம் அதிகரிக்கும் நிகழ்வாகும். மத்திய பசிபிக் பெருங்கடலில் சராசரி தட்பவெப்ப நிலை 0.5°Cக்கு அதிகமாக தொடர்ச்சியாக 5 மாதங்கள் நிலவினால் எல் நினோ எனக் கூறப்படும். இதற்கு எதிரானதுதான் ல-நினா. பொதுவாக சாதாரண எல்-நினோ நிகழ்வு எனில் நீண்டகால சராசரியை விட வெப்பம் 0.8 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதுவே சூப்பர் எல்-நினோ எனில் சராசரி வெப்பநிலையானது 1.5 டிகிரி முதல் 2 டிகிரி செல்சியசுக்குமேல் விட அதிகமாக அதிகரிக்கும். எல்-நினோ நிகழ்வு நடைபெறும் காலகட்டத்தில் இந்தியாவில் பொதுவாக வறட்சி அதிகமாக இருக்கும். காலநிலை மாற்றத்தால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எல்-நினோ காலகட்டத்தில் பதிவான வெப்ப அளவுகள் இப்போது ல-நினா காலகட்டத்தில் பதிவாகியுள்ளன. இதனால் எல்லா காலகட்டத்திலும் அதிகரிக்கும் வெப்ப அளவுகளை உலகம் சந்தித்து வருகிறது.
இச்சூழலில் ‘எல் நினோ’ எனும் காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற பாதிப்புகள் அதிகரிக்கலாம்; கொரோனாவை விட பயங்கரமான வைரஸ்கள் நம்மை தாக்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
எல் நினோ பாதிப்புகள் குறித்து நேற்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், ‘’2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு எல் நினோ நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள உலக சுகாதார அமைப்பு தயாராகி வருகிறது. எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றத்தால் டெங்கு மற்றும் ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற பிற வைரஸ்களை அதிகரிக்கக்கூடும். மேலும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளும், கொசுக்களின் இனப்பெருக்கமும் இந்த நோய்களின் பரவலைத் தூண்டுகின்றன. இந்த கால நிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டு, பொருளாதார சிக்கல் ஏற்படும்’’ என்று தெரிவித்தார்