பன்றி வளர்ப்பது , பறை அடிப்பது இதெல்லாம் இன்னும் தொடர வேண்டுமா?

பன்றி வளர்ப்பது , பறை அடிப்பது இதெல்லாம் இன்னும் தொடர வேண்டுமா?

றையடித்தல் குறித்து ஏற்கனவே பலமுறை உரையாடல்கள் நடந்திருக்கிறது. இப்போது கூடுதலாகப் பன்றி வளர்ப்பதும் சேர்ந்திருக்கிறது. அண்ணன் வெற்றிவேல் ஒரு பொறியைப் பற்றவைத்திருக்கிறார். பன்றி வளர்ப்பையும், பறையடித்தலையும் குறித்து ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசுவதும், எழுதுவதும் எளிதானது. ஆனால், ஒருபோதும் பொது சமூகம் இவ்விரண்டையும் இயல்பாகக் கடந்து போகும் என்று என்னால் நம்ப முடியாது. மாரி செல்வராஜுக்கும், உதயநிதிக்கும் கரும்பன்றிகள் கூட வேண்டாம், காய்கறிகளை மட்டுமே உண்டு வளரும் வெண்பன்றிகளை வளர்க்கும் சூழலும் வாய்ப்பும் சிறப்பாக இருக்கிறது, வளர்ப்பார்களா?

திரைப்படங்களில் குறியீடாக வைப்பது என்பது வேறு, நடைமுறை வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்வது என்பது வேறு. மாரி செல்வராஜ் எதிர் அரசியல் குறியீடாக பன்றியை முன்வைக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு புனைவுக் குறியீடு அவ்வளவுதான். ஒருவேளை உண்மையிலேயே பன்றி வளர்ப்பு குறித்த தீவிரமான சிந்தனைகளோடு “மாமன்னன்” திரைப்படத்தில் மாரி செல்வராஜ் அத்தகைய காட்சிகளை முன்வைத்திருந்தால் அது முட்டாள்தனமானது. பறையடித்தல் அல்லது பறையடித்தலை ஊக்குவித்தல் என்றெல்லாம் ஊருக்கு சில கம்யூனிஸ்டுகள் இருப்பார்கள். அல்லது முற்போக்கு என்ற பெயரில் உலவும் சில பிற்போக்கு மனநிலை கொண்டவர்கள் இருப்பார்கள். அவர்களின் ஆழ்மனதில் பறையிசையைக் கலையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஒருநாளும் இருக்காது. பறையடித்தலை ஊக்குவித்தல் என்பது முற்போக்கு முகமளிக்கும் என்பதற்காக அதை செய்வார்கள்.

தேர்தல் காலங்களில் சில கம்யூனிஸ்டுகள் மேடைகளில் கூட இப்படிப் பேசுவார்கள், “பார்த்தீர்களா, பொதுத்தொகுதியில் நாங்கள் ஒடுக்கப்பட்ட வேட்பாளரை நிறுத்தி இருக்கிறோம்” என்று பெருமை பீற்றல். எவ்வளவு அநாகரீகம், கம்யூனிசம் உலகின் எல்லா மனித இனங்களையும் மானுடன் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அடைக்க முற்படுகிற ஒரு கோட்பாடு. ஆனால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அப்படிப் பேசுவது என்பது அநாகரீகத்தின் உச்சம். பார்த்தீர்களா, மனிதர்களுக்கு பதிலாக நாங்கள் பன்றிகளை தேர்தலில் நிறுத்தி இருக்கிறோம் என்று சொல்வது போலத்தான் அது.

சரி, விஷயத்துக்கு வருவோம். பன்றி வளர்த்தல் நல்ல லாபம் ஈட்டும் தொழில் என்பதால் மட்டுமே இங்கு பேசுகிற பட்டியலினமல்லாத எவரும் பன்றி வளர்ப்பைத் தங்கள் தொழிலாகத் தேர்வு செய்யமாட்டார்கள். பெரிய அளவில் முதலீடுகள் செய்து மாட்டிறைச்சியைத் தொழிலாக செய்யும் பிராமணர்கள் மற்றும் பனியாக்கள் கொள்கையளவில் மாடுகளைப் புனிதம் என்றும், மாட்டிறைச்சி உண்ணும் இஸ்லாமியர்களை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்றும் பேசுவார்கள். அதுபோலத்தான் பன்றி வளர்ப்புக்கு ஆதரவாக இங்கு பேசும் பலர். மறுபடி அது வழக்கமான இடத்தில் போய் தங்குவதற்கான வாய்ப்பே அன்றி அது உளப்பூர்வமானது அல்ல.

பறையடித்தலும் அப்படித்தான், பறையை, பறையிசையை வெட்டவெளியில் தான் அடிக்க விடுவார்களேயன்றி பறைக்கு ஆதரவாக முழங்குகிற பிற சாதியினர் யாரும் பறையைத் தங்கள் வீட்டு முற்றத்தில் ஏற்றுவதற்கு இசைவதில்லை. இறுதியில் பறை பட்டியலின் மக்களின் இசை என்றுதான் அறுதியிடப்படும். திராவிட இயக்கங்களில் குறிப்பாக திராவிடர் கழகம் மற்றும் திமுகவில் இருக்கிற பல தலைவர்கள் இப்போதும் சாதி வேறுபாடுகளைப் பேணிப் பாதுகாக்கிறவர்கள் தான் என்பதை என்னால் ஆதாரங்களோடு சொல்ல முடியும்.

தேர்தல் காலங்களில் கலைஞரே சாதிப் பெரும்பான்மை இருக்கிற வேட்பாளர்களைத் தான் முன்னிறுத்துவார். அது தேர்தல் அரசியல் என்று முட்டுக் கொடுத்தாலும் கூட அது சாதிய விஷத்தின் நெருடல் தான். வை.கோ போன்ற தலைவர்கள் விஷப்பாம்பைப் போல சாதிய நச்சுக் கருத்துக்களை கலைஞரின் மீதே அள்ளித் தெளித்தவர்கள் தான். பன்றி வளர்த்தல் என்பது இயல்பில் தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை அருந்ததிய மக்களின் குலத்தொழில். அந்தத் தொழிலை ஒரு பிராமணரோ பறையரோ கூட செய்ய முன்வர மாட்டார்கள். பறையடித்தல் என்பதும் பெரும்பான்மை தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை பறையர்களின் குலத்தொழில், பிற சமூகத்தினரில் யாரேனும் மிக அரிதாக பறையிலிருந்து வெளிவருகிற இசைக்காக அதை முன்னெடுக்கலாம். சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளவும், முற்போக்கு விளம்பரம் செய்து கொள்ளவும் சில கம்யூனிஸ்டுகள் அதை முன்னெடுக்கலாம்.

மற்றபடி பொது சமூகம் பன்றி வளர்த்தலையும், பறையடித்தலையும் இதயப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் என்று மாரி செல்வராஜே நம்பமாட்டார். ஏனெனில் அவரே கூட ஒரு பாதிப் பிராமணராக இந்நேரம் மாறி இருப்பார். மாறி இருக்கிறார் என்பதுதான் யதார்த்த வாழ்வின் அவலம். தங்கள் போராட்ட காலத்தில் சாதி ஒழிப்பை முழங்கிய பல திரை நாயகர்கள் குறிப்பிட்ட வெற்றியடைந்த பிறகு வர்க்க நலன்களைப் பாதுகாக்கும் ஒரு தனி இனக்குழுவின் பிரதிநிதிகளாக தங்களை மாற்றி அமைத்துக் கொள்வார்கள். அதுதான் வரலாறு.

திரைப்படங்களை நம்பி யாரும் பன்றி வளர்க்கவோ பறையடிக்கவோ போக வேண்டாம் என்பதைக் கொஞ்சம் அழுத்தமாகவே எமது பட்டியலின சகோதரர்களிடம் (அதாவது தங்களை இன்னும் பட்டியலினமாகவே நம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு) சொல்ல விரும்புகிறேன். அண்ணன் அ.வெற்றிவேல் அவர்களின் கருத்தோடு மிக அழுத்தமாக நிற்க விரும்புகிறேன். இந்த உரையாடலை வெளிப்படையாக முன்வைத்த அண்ணனுக்கு எனது நன்றி.

கை.அறிவழகன்

error: Content is protected !!