திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன காலமானார்!- அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன காலமானார்!- அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் க. அன்பழகன் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 1 மணியளவில் அன்பழகன் உயிர்பிரிந்தது. இதை அடுத்து அவர் உடல் திமுக கொடி போர்த்தப்பட்டு கீழ்ப்பாக்கம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையு லகினர், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின்   மலர் அஞ்சலி செலுத்தினார். அப்பா மறைந்தபோது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன்.. இன்று பெரியப்பாவும்….” க.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் கவிதையை எழுதி மேலும்  43 ஆண்டுகள் தொடர்ந்து திமுக பொதுச் செயலாளராகவும் 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தமிழக அமைச்சராகவும் பேராசிரியர் க.அன்பழகன் பணியாற்றியதை நினைவு கூர்ந்துள்ளார். ஒருவாரத்திற்கு கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகவும், கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அன்பழகன் உடலுக்கு கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தியபின், இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேலங்காடு மயானத்தில் உடல்அடக்கம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், கழக நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு – அவர் திராவிட கொள்கையில் இருந்து விலகாமல் உறுதியுடன் நின்று, அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ. என திறம்பட பணியாற்றி யவர். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், திமுக கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள்! – என தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளார்.

பேராசிரியர் அன்பழகன் மறைவு தமிழக அரசியலில் ஈடுசெய்ய முடியாத இழப்பு; திராவிட இயக்கத்தின் கொள்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் பேராசிரியர் அன்பழகன்  என அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தி.நகர் எம்எல்ஏ சத்யா, அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் நேரில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு அஞ்சலி செலுத்தினார்

சிபிஎம். டி.கே. ரங்கராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசியல் நேர்மையும், தூய்மையும் நிறைந்த க. அன்பழகனாரின் மறைவு பேரிழப்பு! — ராமதாஸ் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர் பேராசிரியர் அன்பழகன், அவரது இழப்பு வேதனைக்குரியது. க. அன்பழகனின் குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் கமல்ஹாசன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் இரங்கல் தெரிவித்து உள்ளார். 47 ஆண்டு காலம் திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேரில் மலரஞ்சலி செலுத்தினார். திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர் தளபதியாருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்… என ரஜினிகாந்த் இரங்கல் செய்தியை நேரில் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் நேரில் மலரஞ்சலி செலுத்தினார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பல்வேறு பதவிகளை வகித்த, பன்முகத்தன்மை கொண்ட திறமையாளர் க.அன்பழகன் – என விஜயகாந்த் இரங்கல் உரையில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க. அன்பழகன் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்கள், தலைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.  இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்  இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து நேரில் மலர் அஞ்சலியுடன் கவிதாஞ்சலியையும் செலுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் நேரில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் க. அன்பழகன் மறைவுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!