தமிழகத்திலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம் மற்றும் ரயில் சேவை!

தமிழகத்திலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம் மற்றும் ரயில்  சேவை!

த்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22–ந்தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்கான சடங்குகள் கடந்த 16–ந்தேதி துவங்கியது. 121 ஆச்சாரியார்கள் இந்த சடங்குகளை மேற்கொள்கிறார்கள். இந்த நிலையில் அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலை கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக வேத விற்பன்னர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். 150 முதல் 200 கிலோ வரையிலான இந்த ராமர் சிலை மைசூரை சேர்ந்த அருண்யோகி ராஜ் வடிவமைத்திருந்தார்.

ஒவ்வொரு ராம நவமியின் போதும், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கருவறையில் சூரிய ஒளியின் கதிர்கள் விழும் வகையில், அதற்கான சிறப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள லென்ஸ்கள் வழியே ஊடுருவி வரும் சூரிய கதிர்கள், கருவறையில் உள்ள குழந்தை ராமரின் நெற்றியில் திலகம் வடிவில் விழும். அது குழந்தை ராமரின் நெற்றியில் ‘‘சூர்ய திலகம்’’ போல் காட்சியளிக்கும். இதனை வடிவமைத்த தலைமை விஞ்ஞானி ஆர்.தரம்ராஜூ கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த சூரிய ஒளி, சிலையின் நெற்றியில் மதியம் 12 மணி முதல் ஆறு நிமிடங்கள் வரை படும் என்றார்.

சென்னையிலிருந்து நேரடி விமான சேவை

இந்த ராமர் கோவிலை காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதனை ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.இதனையொட்டி அயோத்தியில் சமீபத்தில் புதிதாக விமான நிலையம் திறக்கப்பட்டது. கடந்த 6ம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் டெல்லி, ஆமதாபாத், மும்பை, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து பயணிகள் விமானத்தை இயக்க தொடங்கியுள்ளது.


இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானம் இயக்கப்படும் என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான கட்டணமாக ரூ.6,499 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்களில் உயரும் எனக் கூறப்படுகிறது. அதேபோல் பெங்களூரு, மும்பை நகரங்களில் இருந்தும் அயோத்திக்கு நேரடி விமான சேவை துவங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

66 சிறப்பு ரெயில்கள் இயக்கம்

தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் வசதிக்காக ஆஸ்தா (நம்பிக்கை) சிறப்பு ரெயில்களை மத்திய ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 66 நகரங்களில் இருந்து இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் உட்பட 9 நகரங்களில் இருந்து ஆஸ்தா ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. வரும் 22ம் தேதி முதல் இந்த ரெயில் பயணம் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு ரெயிலும் 22 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். இதற்கான முன்பதிவு வசதி ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் வெளியிடப்படவுள்ளது. அயோத்தி சென்று வரும் வகையில் ரவுண்ட் டிரிப் முறையில் முன்பதிவு செய்யலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட 9 ரெயில் நிலையங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரெயில்கள் அயோத்திக்கு இயக்கப்படுகின்றன. டெல்லியை பொறுத்தவரை நியூ டெல்லி, பழைய டெல்லி, நிஜாமுதீன், ஆனந்த் விஹார் ஆகிய நான்கு ரெயில் நிலையங்களில் இருந்தும்,

மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர், புனே, மும்பை, வர்தா, ஜால்னா, நாசி உள்ளிட்ட 7 ரெயில் நிலையங்களில் இருந்தும் ஆஸ்தா சிறப்பு ரெயில்கள் புறப்படவுள்ளன.

மேலும் அகர்தலா, தின்சுகியா, பார்மெர், கத்ரா, ஜம்மு, நாசிக், டேராடூன், பத்ராக், குர்தா ரோடு, கோட்டயம், செகந்திராபாத், ஐதராபாத், காஜிபேட் ஆகிய நகரங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரெயில்கள் அயோத்தி நகருக்கு இயக்கப்படவுள்ளன.ஆஸ்தா என்றால் நம்பிக்கை என்று அர்த்தமாகும். கடவுள் ராமர் மீதான பக்தர்கள் நம்பிக்கையைக் குறிக்கும் பொருட்டு இந்த ரெயில்களுக்கு ஆஸ்தா ரெயில்கள் என்று ரயில்வே அமைச்சகம் பெயர் சூட்டியுள்ளது.

error: Content is protected !!