டெல்லியில் டீசல் பேருந்துகள் இயங்க இன்று முதல் தடை.!

டெல்லியில்  டீசல் பேருந்துகள் இயங்க இன்று முதல் தடை.!

ந்திய தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்து வருவதால் பிற மாநிலங்களில் இருந்து இயங்கும் அனைத்து டீசல் பேருந்துகளும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் காற்று தர மேலாண்மை ஆணையம் பிஎஸ் III (BS III) மற்றும் பிஎஸ் IV (BS IV) வகை டீசல் பேருந்துகளை நாளை முதல் டெல்லி மாநகரில் இயக்க தடை விதித்துள்ளது. பிஎஸ் VI (BS VI) வகை சிஎன்ஜி (CNG இயற்கை எரிவாயு), மின்சாரம், மற்றும் டீசல் பேருந்துகள் மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த விதிமுறை தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும். இந்த விதிமுறையின் மூலம் 60 சதவித பேருந்துகள் இயக்கப்படாது. இந்த விதிமுறை பயணிகளிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் 30ம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் டீசல் பேருந்துகளுக்கு முழுமையான தடையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் டெல்லி அரசு செயல்பட்டு வருவதாக கூறிய கோபால் ராய், கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 397 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு (AQI) நேற்று 325 ஆக இருந்தது. இது காற்றின் தரம் முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காட்டுகிறது. அதை மேலும் மேம்படுத்த முயற்சித்து வருவதாகக் கூறினார். ஆனால், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) படி, ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) டெல்லியில் 373 ஆக உள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், சிவப்பு சிக்னலின் போது வாகனத்தின் இன்ஜினை அணைக்குமாறு டெல்லி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் டீசல் பேருந்துகள் இயங்குவதால் மாசு அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், ஐஎஸ்பிடியில் ஆய்வு செய்ததில், உ.பி மற்றும் ஹரியானாவில் இருந்து இங்கு வந்துள்ள அனைத்து பேருந்துகளும் பிஎஸ் III மற்றும் பிஎஸ் IV பேருந்துகள் என்பது கண்டறியப்பட்டதாக கூறினார்.

இதனிடையே டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான நீதிபதிகள் சுதான்ஷு துலியா, பிகே மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அந்த வழக்கு இந்த அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உ.பி, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களும் ஒரு வாரத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

நீதிபதிகள் வேதனை: வழக்கை விசாரித்த நீதிபதிகள், “காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்வது எதிர்கால சந்ததி மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தலைநகர் டெல்லியில் அக்டோபர் மாதம் மிகச் சிறந்த காலமாக இருக்கும். ஆனால், இப்போது அந்த மாதத்தில் வெளியே செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இதே காலகட்டத்தில் காற்று மாசுபடுவது நடந்துகொண்டே இருக்கிறது. பயிர்க்கழிவுகளை எரிப்பதும் டெல்லியில் இது தொடர்கதையாவதற்கு ஒரு காரணமாக உள்ளது” என்று வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து அரசுத் தரப்பில் இந்தக் காலகட்டத்தில் பலமாக காற்று வீசுவதும், மாசு அதிகரிக்கக் காரணம் என்று சொல்லப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம். “அரசு நிர்வாகமும் கூட காற்றுபோல் துரிதமாக செயல்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்தது.

இந்நிலையில்தான் டீசலில் இயங்கும் பேருந்துகளால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கவும், காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் டெல்லி மற்றும் என்சிஆரில் உள்ள ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நகரங்களுக்கு இடையே மின்சார, சிஎன்ஜி மற்றும் பிஎஸ்-6 பேருந்துகள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும். மேலும், அனைத்து நுழைவுச் சாவடிகளிலும் போக்குவரத்துத் துறை மூலம் சோதனை நடத்தப்படும். விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!