வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பலத்த மழை அறிவிப்பு- முழு விபரம்!
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த 2 தினங்களாக நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (வியாழக் கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் விவரித்த போது, “தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றுள்ளது. இது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் டிச. 2-ம் தேதி புயலாக வலுப்பெறும்.
மேலும், வடக்கு இலங்கை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் டிச. 3-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ. 30-ம் தேதி (இன்று) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.1-ம் தேதி (நாளை) டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 2, 3-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வரும் 2-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், 3-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வரும் 4-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
மழைப் பொழிவு விவரம்:
நவ. 29-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 9 செ.மீ., சென்னை அண்ணாநகரில் 6 செ.மீ., கடலூர் மாவட்டம் வடகுத்து, சென்னை மீனம்பாக்கம், திரு.வி.க.நகர், அயனாவரம், தண்டையார்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, விழுப்புரம் மாவட்டம் நேமூர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, புதுச்சேரியில் 5 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, நாகை மாவட்டம் தலைஞாயிறு, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், முகையூர், சென்னை தேனாம்பேட்டை, ராயபுரம், சென்னை ஆட்சியர் அலுவலகம், பெரம்பூர், நுங்கம்பாக்கம், கொளத்தூர், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
அந்தமான் அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வடக்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடல், தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் வரும் 4-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.
முதல்வர் அறிவுறுத்தல்:
தமிழகத்தில் தொடர் கனமழை அச்சுறுத்தலை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவில், ‘‘கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.