அமெரிக்க நாடாளுமன்றத்தை சூறையாடிய டிரம்ப் ஆதரவாளர்கள் 4 பேர் பலி!

அமெரிக்க நாடாளுமன்றத்தை சூறையாடிய டிரம்ப் ஆதரவாளர்கள் 4 பேர் பலி!

உலகளவில் தன்னை மாபெரும் ஜனநாயக நாடு என்றுச் சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதை எதிர்த்து தலைநகர் வாஷிங்டனில் புதன் கிழமை அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றியை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கவில்லை.தேர்தல் முடிவுகளுக்கு எதிராக அவர் குரலெழுப்பி வருகிறார். தேர்தலில் குளறுபடி நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரது வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஜோ பிடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. அதிபர் டிரம்ப் தன் பிடிவாதத்தை கைவிட்டு ஆட்சி மாற்றத்திற்கு வழிவிட வேண்டும் என அவரது கட்சியை சேர்ந்தவர்களே அவருக்கு அறிவுரை கூறி வந்தனர். ஆனால் இதை எதையும் கேட்காத அதிபர் டிரம்ப் ஜனவரி 6ம் தேதி ‘அமெரிக்காவை காப்பாற்றுங்கள்’ (Save America) என்ற பேரணியை நடத்த போவதாக டிசம்பர் 19ம் தேதி அறிவித்தார்.

அதன்படி நேற்று தலைநகர் வாஷிங்டனின் டிரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பேரணிக்கு கூடியிருந்தனர். பேரணியில் மதியம் அதிபர் டிரம்ப் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார். எனது உரைக்கு பின் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல போகிறோம். நானும் உங்களுடன் இருப்பேன். அங்கு நமது செனட்டர்கள், எம்பிக்கள் மற்றும் பெண்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம் என டிரம்ப் அறிவித்தார். அதிபர் டிரம்ப் தன் உரையை முடித்தவுடன் அங்கிருந்த ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர்.

டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை அடைந்த போது உள்ளே பிரதிநிதிகள் சபையில் தேர்தல் வாக்குகளை எண்ணுவதற்காக அமெரிக்க எம்.பிக்கள்  கூடியிருந்தனர். நாடாளு மன்றத்திற்கு வந்த டிரம்ப் ஆதரவாளர்கள் அமைதியாக போராடாமல் நாடாளுமன்றத்தில் ஊடுறுவ முயன்றமர். அங்கிருந்த போலீசார் டிரம்ப் ஆதரவாளர்களை தடுக்க முயன்ற போது பேரணியில் வன்முறை வெடித்தது.

போலீசாரை மீறி சென்ற கலவரக்காரர்கள் நாடாளுமன்றத்தின் படிக்கட்டுகள் வழியாகவும் மதில் சுவர்களில் ஏறியும் உள்ளே நுழைந்தனர். நாடாளுமன்ற அவைகளில் நுழைந்து அங்கிருந்த பொருட்கள், கண்ணாடி கதவுகள், ஜன்னல்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் செனட் சபையில் இருந்த துணை அதிபர் மைக் பென்ஸ், நாடாளுமன்ற எம்.பிக்கள், செனட்டர்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

கலவரக்காரர்களை அடக்க போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கலவரம் அதிகரித்ததால் ஒருக்கட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். கலவரத்தில் மேலும்3 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்தில் 14 போலீசார் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 52 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தத் தகவலை கேபிடோல் பொறுப்பு போலீஸ் அதிகாரி ராபர்ட ஜே.கோண்டீ தெரிவித்தார்

டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தால் வாஷிங்டன் நகரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த மேயர் முரியல் பவுசர், புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தினார்.

இப்படி நாடாளுமன்றத்தை நோக்கி சென்ற பேரணி கலவரமாக மாறி நிலமை கைமீறி சென்றதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அமைதி காக்கும்படியும் கோரிக்கை விடுத்தார். உங்கள் வலி எனக்கு புரிகிறது. ஆனால் சட்ட ஒழுங்கை காப்பது மிகவும் அவசியம். எனவே அனைவரும் அமைதியாக வீடு திரும்புங்கள் என டிரம்ப் கோரினார்.

அதேநேரம் இந்த கலவரம் குறித்து அதிபர் டிரம்ப் பதிவிட்ட சில டுவிட்களை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. மேலும் அதிபர் டிரம்ப்பின் டுவிட்டர் பக்கம் 12 மணி நேரம் முடக்கப்பட்டது.

மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரக்காரர்கள் நடத்திய வன்முறையை கண்டித்து வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் 2 பேர் ராஜினாமா செய்தனர்.அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பின் தலைமை ஊழியரான ஸ்டெபானி கிரிஷாம் மற்றும் வெள்ளை மாளிகை சமூக செயலாளர் ரிக்கி நைசிடா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.இவர்களை தவிர மேலும் பல வெள்ளை மாளிகை அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!