‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியா- தேர்தலையேத் தவிர்க்கும் மநீம – கமல் அதிரடி அறிவிப்பு!
நடப்பு 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி நேரடியாகப் போட்டியிடாது என்றும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கூட்டணிக் கட்சிகளின் பரிந்துரையை ஏற்க முடியாததே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்று தெரிகிறது.
சின்னம் எங்களின் அடையாளம்
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில், பேட்டரி டார்ச் சின்னத்தில் மட்டும் தான் போட்டியிடுவது என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தீர்க்கமான நிலைப்பாடு. பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகள் எனக்கு முக்கியம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலினுடன் சந்திப்பு – நிபந்தனையற்ற ஆதரவு
நேற்று இரவு 8 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். அவருடன் மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பின் போது, தேர்தலில் போட்டியிடாமல் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பது என்ற கட்சியின் முடிவை ஸ்டாலினிடம் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இது தியாகம் அல்ல, கடமை!
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்துள்ளோம். திமுக ஆட்சி தொடர வேண்டும். திமுகவுடன் நிற்பதைக் கடமையாகக் கருதுகிறேன். இது தியாகம் இல்லை, கடமை. திமுகவுக்கு முழுமையான அழுத்தமான ஆதரவு அளிப்போம்,” என்று உறுதியளித்தார்.
என்றென்றும் தொடரும் மக்கள் பணி
தனது அறிக்கையில், தமிழக மக்களின் நலன் கருதியும், மதவாத சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து தமிழகத்தைக் காக்கும் கடமையினை உணர்ந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கியுள்ளார். மேலும், “எந்த சுயநலமின்றி, என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதை. அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது. அரசியலில் முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. மண்ணுக்கான, மக்களுக்கான, மொழிக்கான நமது போராட்டம் எப்போதும்போல் தீரத்துடன் தொடரும்,” என்று அவர் தனது தொண்டர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
இதற்கிடையே, கமல்ஹாசனின் இந்த முடிவை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘தேர்தலில் போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது தியாகம் அல்ல, கடமை என்று கமல் கூறினார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம் தான். கமலுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அவரது முடிவு என்னை நெகிழ வைத்துவிட்டது. தமிழகம் முழுவதும் கமல் வலம் வரவேண்டும். அமையும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினால் ஆனது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பான இழுபறியே மக்கள் நீதி மய்யத்தின் இந்த அதிரடி முடிவுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், மதவாத சக்திகளை எதிர்ப்பது மற்றும் திராவிட மாடல் ஆட்சியைத் தக்கவைப்பது என்ற பெரிய நோக்கத்திற்காகக் கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.


