காஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு!

காஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு!

நாட்டின் தலை நகரில் இருந்தபடி பெரும் தலைவலிக் கொடுத்து வரும் ஜம்மு காஷ்மீரில் முடிந்த வரை விரைவாக இயல்பு நிலையை மீட்டமைக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால், அந்த மாநிலத்தின் ஐகோர்ட்டுக்கு தாம் செல்ல நேரிடும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வீட்டுச் சிறையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை விடுவிக்க வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். தம்மை காஷ்மீர் செல்ல அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்த்தும் அம்மாநிலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்த உத்தரவிடக் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

வைகோ தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞர், பரூக் அப்துல்லா ஒன்றும் வைகோவின் உறவினர் அல்ல என்றும், 2 ஆண்டுகள் வரை காவலில் வைக்க வகை செய்யும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, மனு தொடர்பாக வரும் 30 ஆம் தேதி பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இயல்பு நிலை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், முடிந்தவரையில், மிக விரைவாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையை மீட்டமைக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தனர். அதேவேளையில் தேச நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர்.

இதை தொடர்ந்து குலாம் நபி ஆசாத்தின் மனு விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீர் செல்வதற்கு குலாம் நபி ஆசாத்திற்கு அனுமதி வழங்கினர். ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களுக்கு அவர் செல்லலாம் என்றும், ஆனால், பொதுமக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவோ, பொதுக் கூட்டங்கள் நடத்தவோ கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

error: Content is protected !!