மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!- வீடியோ!

மதுரையில்  கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!- வீடியோ!

மிழக முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ரூ 215 கோடி செலவில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தென் தமிழ்நாடு மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைகிறது மதுரையில் ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’. இந்நூலகம் மதுரை – புதுநத்தம் சாலையில் ரூ.120.75 கோடியில் உலகத் தரத்துக்கு இணையாக கட்டப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரையில் சிறப்புமிக்க நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பொதுப்பணி துறையின் சார்பில் மதுரை புது நத்தம் சாலையில் 2.7 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2 லட்சம் சதுர அடியில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டது.

கலைக்கூடம், குழந்தைகள் நூலகம், போட்டி தேர்வுக்கான பயிற்சி கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான தனிக்கூடம், சிறார் திரை அரங்கம், சிறார் அறிவியல் கூடம் , மாநாட்டு அரங்கம் என பல வகை வசதிகளுடன் 7 தளங்களை கொண்டதாக இந்த நூலகம் அமைந்துள்ளது.

கட்டிட தளங்கள் விவரம்:

6 தளங்களை கொண்டுள்ள இந்நூலகத்தின் அடித்தளத்தில் (19314 சதுரடி ) வாகன நிறுத்துமிடம், செய்தி, நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைக்கிறது. தரைத் தள பகுதியில் (32656) கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டு கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-1, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, மின் கட்டுபாட்டு அறை, தபால் பிரிவுகள் அமைகின்றன.

>> முதல் தளத்தில் : (29,655) கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம்,பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகம், சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-2, அறிவியல் உபகரணங்கள் பிரிவு அமைந்துள்ளது.

>> 2-வது தளத்தில் : (29,655) தமிழ் நூல்கள்பிரிவு (குறிப்பு உதவி நூல்கள் பிரிவு) மற்றும் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப் படத்துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன.

>> 3-வது தளத்தில் : (29,655) ஆங்கில நூல்கள் , ஆராய்ச்சி இதழ்கள், தமிழ் நூல்கள் அடங்கிய பிரிவுகள் அமைந்துள்ளன.

>> 4-வது தளத்தில் : (20,616) சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய போட்டித் தேர்வர்களுக்கான பல்வேறு துறை சார்ந்த நூல்கள் பிரிவு அமைந்திருக்கிறது.

>> 5-வது தளத்தில் : (20,616) அரிய நூல்கள், மின் நூலகம், பல்லூடகம், நூல்கள் பாதுகாத்தல், ஒளி, ஒலி தொகுப்புகள், காட்சியகம், மின்னுருவாக்கம், பார்வையற்றோருக்கான மின் நூல், ஒலி நூல் ஸ்டுடியோ, நுண்பட அட்டை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

> 6-வது தளத்தில் : (20,616) ஆங்கில நூல்கள் (நூல் இரவல் பிரிவு), நூல் பகுப்பாய்வு , நூல் பட்டியல் தயாரித்தல், நூலக நிர்வாகம், நூல்கள் கொள்முதல், பணியாளர்கள் உணவருந்தும் பிரிவுகளும் அமைந்துள்ளன.

இந்நூலகமெங்கும் மின் விளக்குகள், ஏசி மிஷின், 6 மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டிட நடுப்பகுதியில் சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையில், கண்ணாடிப் பேழையிலான கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புற அலங்கார கட்டுமான பணிகளும் முடிந்து, ஜெர்மன் கண்ணாடிச்சுவர் பூச்சு பூசப்பட்டுள்ளது. அதில் கலைஞரின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. முன்பகுதி யில், கலைஞரின் உருவச்சிலை மாடித்தோட்டத்துடன் நூல்களை படிக்கும் வசதி, கலைக்கூடமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 2.50 லட்சம் நூல்கள்: ரூ.10 கோடி மதிப்பில் சுமார் ரூ. 2.50 லட்சம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.16.7 கோடியில் மேஜை, நாற்காலி, புத்தகம் வைக்கும் அலமாரிகள், படிப்பதற்கு தேவையான மேஜைகள், பர்னிச்சர்களும் வாங்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் கலைஞர் நூலகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நூலகத்தின் முன்புறம் அமைந்துள்ள கலைஞரின் சிலையை திறந்து வைத்த முதல்வர் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலைஞர் நூலகத்தினை திறந்து வைத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளையும் பார்வையிட்டார்.இதையடுத்து நூலகத்தில் இருந்த வருகைப் பதிவேட்டில், “கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல் நிலையத்தை மதுரையில் திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் அயராது உழைப்போம், வாழ்க கலைஞர்” என தனது கருத்துகளை பதிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தொழிலதிபர் ஷிவ்நாடார், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!