ஒரு டாக்டர் 16000 உயிர் காக்கும் சிகிச்சைகளை செய்திருக்க முடியுமா?

ஒரு டாக்டர் 16000 உயிர் காக்கும் சிகிச்சைகளை செய்திருக்க முடியுமா?

ஜூன் 6, அதிகாலை .. சகோதரர் மருத்துவர். கவுரவ் காந்தி அவர்கள் இதய செயல் முடக்கத்தால் மரணித்தார். இதய நோய் சிறப்பு நிபுணரான அவர் இதய செயல் முடக்கத்திற்கு உள்ளாகி மரணித்த செய்தி எஃகுக் கோட்டைக்குள் நாம் இருப்பினும் மரணத்தை வெல்ல நம்மால் முடியாது எனும் சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. அனைவரும் தான் பிறக்கிறோம் வாழ்கிறோம்.. இறக்கிறோம் .. ஆனால் சிலர் மட்டுமே பிறர் வாழ தங்களின் வாழ்வை மெழுகுவர்த்தி போலக் கரைத்து வாழ்கின்றனர்.

“பகிர்ந்தாலும் தீ ரெண்டாய் வாழும்” என்ற கவிஞர் விவேக்கின் வரிகளை மெய் படுத்துவது போல வாழ்பவர்கள் சிலரே . அத்தகையதோர் வாழ்வை வாழ்ந்து மறைந்தவன் என் சகோதரன் டாக்டர் கவுரவ் காந்தி . கார்டியாலஜிஸ்ட் ஆக கடந்த பத்து ஆண்டுகளாக பணிபுரிந்து பலரின் இதயத்தின் கோளாறுகளை செப்பனிட்டு அடைப்புகளை அகற்றி அவர்களின் வாழ்வு நீட்சிக்கும் வாழ்க்கைத் தரத்திற்கும் உதவியவன் என் சகோதரன் அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.

இன்றைய விவாதப்பொருளாக அவர் 16000 சிகிச்சைகளை செய்திருக்க முடியுமா? என்பது மாறியிருக்கிறது. மருத்துவத்துறை சார்ந்திடாத எனதருமை சகோதர சகோதரிகளுக்கு இது குறித்த விளக்கத்தை அளிப்பது எனது கடமை . மிக அதிகமான நோயாளிகளை சந்திக்கும் மருத்துவமனைகளில் ( அது அரசு மற்றும் தனியார் எதுவாக இருப்பினும் சரியே)

தினசரி கார்டியாலஜிஸ்ட் ஐந்து ஆஞ்சியோகிராம் சிகிச்சைகளை சராசரியாக செய்ய முடியும். ஆஞ்சியோகிராம் என்பது இதயத்தின் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா? என்பதை அறியும் பரிசோதனை ஆஞ்சியோகிராம் செய்ய பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் ஆகும். ஆஞ்சியோ ப்ளாஸ்ட்டி என்பது உருவான ரத்தக் குழாய் அடைப்புக் கட்டிகளை நீக்கும் சிகிச்சை . இதில் ஸ்டெண்ட்டுகளும் வைக்கப்படும். இந்த சிகிச்சைக்கு ஒரு மணிநேரம் ஆகும். இவையன்றி பேஸ்மேக்கர் எனும் இதயத்தின் துடிக்கும் திறனை உந்தும் கருவி பொருத்தும் சிகிச்சை இதயத்தின் துடிப்பு வேகத்தைக் குறைக்கும் நவீன சிகிச்சைகள் என கார்டியாலஜிஸ்ட் செய்யும் சிகிச்சைகள் அதிகம்.

எனவே கடந்த பத்து முதல் பனிரெண்டு வருடங்களில் தினசரி பதினான்கு மணிநேரங்கள் பணி புரிந்த அவர் 16000 உயிர்காக்கும் சிகிச்சைகளை புரிந்திருப்பது சரியே.

இன்னும் கூறுகிறேன்.. தமிழ்நாட்டின் மருத்துவமனைகளில் பணிபுரியும் மகப்பேறு மருத்துவர்கள் தினசரி சராசரியாக ஐந்து முதல் பத்து அறுவை சிகிச்சைகள் ( சிசேரியன் + கர்ப்பபை சார்ந்த சிகிச்சைகள்) செய்கின்றனர் . இதையெல்லாம் எளிதில் நம்ப இயலாது . ஆனாலும் இவை உண்மை. இறந்த சகோதரர் தினசரி 14 மணிநேரங்கள் உயிர்காக்கும் பணியில் தன்னை ஈடுபட்டுத்திக் கொண்டு தொடர்ந்து மன அழுத்தமான வேலையைச் செய்தது அவரது இறப்புக்கு காரணமாக இருக்கக்கூடும்.அதுவன்றி வேறு தீங்கிழைக்கும் பழக்க வழக்கங்கள் அவருக்கு இல்லை என்று தெரிகிறது

அவரைப் போன்றே அத்தனை மணிநேரங்கள் மன அழுத்தமான சூழ்நிலையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஏனைய தொழில் முனைவோர் இங்கு உண்டு. தொடர் மன அழுத்தம் , இதயத்துக்கு ஊறு செய்யும் என்பதை நாம் அறிந்து தெளிய வேண்டும் சொந்தங்களே.. உன் இதயத்தின் தசை தன் இசையை நிறுத்திக் கொண்டாலும் பல்லாயிரம் பேரின் இதயத்துடிப்பெனும் இசையில் நீ வாழ்வாய் சகோதரா…

“மலையில தான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடிவெடிக்குது ராசா..
பட்டகாயம் எத்தனையோ ராசா
அத சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா?”
என் சகோதரனுக்கு வீர வணக்கம்

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

error: Content is protected !!