பி எஸ் என் எல்-க்கு நான் சொன்ன பிம்பிளிக்கி பிளாப்பி!

பி எஸ் என் எல்-க்கு நான் சொன்ன பிம்பிளிக்கி பிளாப்பி!

30 ஆண்டுக்கு மேல் பிஎஸ்என்எல்லுடன் இருந்த உறவை போன வருடம் துண்டிக்க நேர்ந்தது. வருத்தம்தான். ஆனாலும் தவிர்க்க முடியவில்லை.தொழில் ரீதியாகவும் சொந்த தேவைக்காக வும் அதன் பல ஆபீசுகளுக்கு போயிருக்கிறேன். அந்த காலத்திலேயே விஸ்தாரம் மலைக்க வைக்கும். மத்திய பொதுப்பணி துறையின் கட்டுமானம். கஞ்சத்தனம் கிடையாது. தரத்தில் குறைவு கிடையாது. மாநில அரசு அலுவலகங்களை போல அ்திக மராமத்துக்கு அவசியம் வராது. நூறு ஆண்டுகள் தாராளமாக தாக்கு பிடிக்கும். ஏனைய கட்டிடங்களை காட்டிலும் ஒவ்வொரு தளமும் சில அடிகள் உயரம். படி ஏறும்போதே தெரிந்து விடும். அகலம் உயரம் கொண்ட ஜன்னல்கள். திறந்த வெளி அதிகம். வெளிச்சம் காற்றுக்கு பஞ்சம் கிடையாது.

சரண்டர் செய்யும்போது அடையார் ஆபீசுக்கு போக வேண்டி இருந்தது. இந்தியாவுக்கு அப்போது கொரோனா வரவில்லை. ஆனால் ஒரு மேசைக்கும் இன்னொரு மேசைக்கும் சில மீட்டர்கள் இடைவெளி. தனியார் நிறுவனங்கள் கற்பனை செய்யவே முடியாது. இந்தியா பூராவும் எல்லா நகரங்களிலும் இருக்கின்றன. பெரும்பாலும் சொந்த கட்டிடங்கள்.  டெலிபோன் சேவையை போல இந்த கட்டிடங்களும் அடிமாட்டு விலைக்கு தனியார் கம்பெனிக்கு போக போவதை நினைத்தால் விசனமாக இருக்கிறது.

காலையில் நண்பர் ஒருவரின் பதிவை படித்தபோது பழசெல்லாம் மனதில் ஓடியது. கணிசமான வருமானம் சம்பாதித்து கொடுத்தாலும் அது போட்டிகளை சமாளிக்கும் வலிமையோடு செயல் பட அரசாங்கம் உதவவில்லை. 4ஜிக்கு அனுமதி மறுப்பு வரையில் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மெகா கோடீஸ்வரர்களுக்கு சாதகமாக இத்தனையும் செய்கிறது என்று முழு பழியையும் அரசு மீது போட முடியாது. சம பங்கு ஊழியர்கள் அதிகாரிகளுக்கும் உண்டு.

தனியார் டெலிகாம் கம்பெனிகள் வந்த பிறகுகூட பிஎஸ்என்எல் ஆபிஸ்களில் கஸ்டமர்களுக்கு மரியாதை அதிகரிக்க வில்லை. அலட்சியம் அலைக்கழிப்பு மெத்தனம் சால்ஜாப்பு என்று அரசு அலுவலகங்களுக்கே உரித்தான இலக்கணங்கள் மாறவில்லை. சேவை கட்டணங்கள் குறைவாக இருந்தது உண்மை. சேவைகளின் தரமும் அவ்வாறே இருந்தது. வெறுப்பில் கஸ்டமர்கள் விலகி சென்று, தனியார் நிறுவன்ங்கள் வேகமாக வளர்ந்த பிறகு பிஎஸ்என்எல் ஆட்களிடம் மாற்றம் தெரிந்தது. முதலுக்கு மோசம் வந்து விடுமோ என்ற பயத்தில் அணுகு முறையை திருத்தினார்கள். அப்போது அது டூ லேட், டூ லிட்டில் என்ற கட்டத்தை எட்டி இருந்தது.

எல்லா அரசு அலுவலகங்களையும் போல இதிலும் ஒரு 60 டு 65 சதவீத ஊழியர்கள் சின்சியராக பணி செய்பவர்கள்தான். மீதி பேரின் நடத்தையால் மொத்த இமேஜும் சேதம் அடைகிறது. தட்டி கேட்க யாரும் துணியாத அளவுக்கு தொழிற்சங்க அரசியல் ஆதிக்கம். அது ரொம்ப காலமாக இருக்கிறது. ராமாவரம் தோட்டத்தில் வெள்ளம் புகுந்ததால் கன்னிமாரா ஓட்டலுக்கு குடி வந்தார் எம்ஜிஆர். அவசரமாக டெலிபோன் இணைப்புகள் ஏற்பாடு செய்தது சென்னை பிஎஸ்என்எல். மீட்பு நடவடிக்கைகளில் அதன் பங்கு பற்றி ஒரு பெரிய அதிகாரி பேட்டி கொடுத்தார். இருமல் வந்தது. பெல் அடித்தார். இரண்டு முறை அடித்தும் யாரும் வரவில்லை. ”ஒரு நிமிஷம்..” என்று சொல்லி தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். “நல்ல மூட்ல இருந்தா பெல் அடிச்சதும் வருவாங்க..” என்று தர்மசங்கடத்தை காட்டிக் கொள்ளாமல் சமாளித்தார். தவறுக்கு நடவடிக்கை எடுத்த அதிகாரியை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்கூட நடந்திருக்கிறது.

யூனியன் பாலிடிக்ஸ் என்பது தபால் துறையில் மட்டுமல்ல. ரயில்வேயிலும் நடக்கிறது. மாநில போக்குவரத்து கழகங்களிலும் இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளிலும் இதுதான் எதார்த்தம் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். இல்லை என்றால் இவ்வளவு பெரிய மோசடிகள் நடக்க முடியாது என்கிறார்கள். சிலருக்கு எதிராக பலர் மவுனம் காக்க இதுதான் காரணம். அரசு அல்லது பொது துறை என்றால் அதிக சம்பளம், அதிக சலுகைகள் மட்டும் அட்ராக்சன் இல்லை. வேலை நிரந்தரம் என்பது பெரிய கவர்ச்சி. மெமோ, சஸ்பென்ஷன் என்று போனாலும் டிஸ்மிஸ் என்று முடியும் தண்டனைகள் அபூர்வம். பெரும்பாலும் வேறு பிரிவுக்கு அல்லது ஊருக்கு டிரான்ஸ்பர். அடுத்தடுத்து தப்பு செய்தால் அடுத்தடுத்து டிரான்ஸ்பர். ஊழியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சங்கங்கள், கடமை தவறிய உறுப்பினரை கண்டிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தால் இந்த சீரழிவை தடுத்து இருக்கலாம்.

வேலை பறிபோகும் என்ற பயத்தால் தனியார் துறையில் தப்பு செய்வது குறைவு. அரசு நிர்வாகத்தில் அந்த பயத்தை உருவாக்குவது அசாத்தியம். அதனால்தான் சோஷலிச பாதையில் பயணம் செய்த நாடுகளில்கூட போலீஸ், ராணுவம், வெளியுறவு போன்ற ஒரு சில துறைகளை தவிர அனைத்து பணிகளையும் சேவைகளையும் அரசாங்கம் கைவிட்டுள்ளது. மக்கள் தொகை குறைவான கியூபா போன்ற நாடுகளில் செயல்படுத்த கூடிய அரசு சேவைகளை 135 கோடி மக்களை கொண்ட இந்தியாவில் அமல் செய்வது கடினம்.

உயிரை காப்பாற்றி கொள்ளவே மாஸ்க் போட மறுக்கும் மனிதர்களை ஒழுக்க நெறிகள் என்ற வட்டத்துக்குள் கொண்டுவர யாரால் முடியும்?

கதிர்

error: Content is protected !!