கூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவிற்கு போட்டியாக வந்திருக்கும் தேடியந்திரம்!

கூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவிற்கு போட்டியாக வந்திருக்கும் தேடியந்திரம்!

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிய தேடியந்திரம் ஒன்றை கூகுளுக்கு போட்டியாக வந்திருக்கும் தேடியந்திரம் என சொல்வதற்கு பதில், டக்டக்கோவிற்கு போட்டியாக என வர்ணிக்க கூடிய வகையில் புதிய தேடியந்திரம் ஒன்று அறிமுகம் ஆகியிருக்கிறது. தேடல் உலகில் கூகுள் பின்னுக்குத்தள்ளப்படுவது அல்லது அதன் முக்கியத்துவம் குறைவதன் அடையாளம் இது. ( தயவு செய்து தேடல் உலகில் கூகுளின் சந்தை பங்கு புள்ளிவிவரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு விவாதத்திற்கு வர வேண்டாம்).

கூகுளின் ஏகபோக நிலையை மீறி அதன் தேடல் செயல்பாட்டில் பெருங்குறை இருக்கிறது. கூகுள் பயனாளிகளின் தனியுரிமையை மதிப்பதில்லை என்பது தான் அது. ஏனெனில் கூகுள் ஒவ்வொருவரும் என்ன தேடுகின்றனர் என்பதை கண்காணித்து அதனடிப்படையில் செயல் படுகிறது. பயனாளிகள் தேடல் வரலாற்றை கவனைத்து அதனடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதாக தேடல் முடிவுகள் முன்வைக்கப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் கூகுள் தேடல் முடிவுகளில் அநியாயத்திற்கு விளம்பர வாடை அடிக்கிறது.

பயனாளிகளின் தேடல் தொடர்பான தகவல்களை சேகரிப்பது தான் கூகுளின் வருவாய் ஆதாரம் என்பதால், அதனால் ஒருபோதும் பயனாளிகள் தேடல் சுவட்டை பின் தொடர்வதில்லை என உறுதி அளிக்க முடியாது.

இந்த இடத்தில் தான் மாற்று தேடியந்திரமான டக்டக்கோ வருகிறது. 2008 ல் அறிமுகமான இந்த தேடியந்திரம், பயனாளிகள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கலை சேகரித்து சேமிக்காமல், அவர்கள் தனியுரிமையை மதிக்கும் வகையில் தேடல் சேவை அளிப்பதாக கூறுகிறது.

இந்த தனியுரிமை தன்மையே டக்டகோவிற்கு தனித்தன்மையான அடையாளத்தை கொடுத்துள்ளது.

தனியுரிமையில் கவனம் செலுத்தும் முதல் தேடியந்திரம் என டக்டக்கோவை வர்ணிக்கும் அளவுக்கு, இந்த பிரிவில் வேறு பல தேடியந்திரங்கள் அறிமுகம் ஆகியுள்ளன.

இப்போது புதிதாக பிரைவடோ (https://www.privado.com/) அறிமுகம் ஆகியிருக்கிறது. டக்டக்கோவை போலவே இந்த தேடியந்திரமும் பயனாளிகள் தொடர்பான தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதில்லை என உறுதி அளிப்பதோடு, அவர்கள் தேடல் பதங்களையும் என்கிரிப்ட் செய்வதாக தெரிவிக்கிறது.

தேடல் சேவையை மேம்படுத்த அனாமதேயமாக சில தகவல்கள் சேகரிக்கப்படுவது தவிர, பயனாளிகளின் எந்த தேடல் செயல்பாட்டையும் கவனிப்பதில்லை என இந்த தேடியந்திரம் சொல்கிறது. இந்த வகையில் டக்டக்கோவை விட தனியுரிமை பாதுகாப்பில் கொஞ்சம் மேம்பட்டதாக இருக்கிறது.

டிக்டாக் போன்ற செயலிகள் பயனாளிகள் தகவல்களை சேகரிப்பதாக கூறப்படும் பின்னணி யில், தனியுரிமை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், பிரைவடோவுக்கான தேவை உணரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரைவடோ மூல தேடியந்திரம் அல்ல. மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரத்தை அடிப்படையாக கொண்டு, தனியுரிமை காப்புடன் தேடல் சேவை அளிக்கிறது. நீங்களும் முயன்று பாருங்கள்.

சைபர்சிம்மன்

Related Posts

error: Content is protected !!