மைக்ரோசாஃப்ட் டைரக்டர் குழுவிலிருந்து விலகினார் பில்கேட்ஸ்!

மைக்ரோசாஃப்ட் டைரக்டர் குழுவிலிருந்து விலகினார் பில்கேட்ஸ்!

பில்கேட்ஸ் வாழ்க்கைப் பாதை  தெரியுமா?பிறந்தது 1955 ல். சாதாரண மிடில்கிளாஸ் குடும்பம். பதின்மூன்று வயதிலேயே கம்ப்யூட்டர் ஆர்வம் வந்துவிட்டது. காரணம், பள்ளியில் கம்ப்யூட்டர் களை வாங்கியது. பள்ளி கம்ப்யூட்டர்களில் உட்கார்ந்து அவற்றை ஆராய்வதுதான் பில்கேட்ஸின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. பதினாறு வயதில் அவருடைய நெருங்கிய நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து சின்னதாய் ஒரு கம்ப்யூட்டர் குழுவைத் துவக்கியிருக்கிறார். அவர்கள் பகுதியிலிருந்த கம்ப்யூட்டர்களுக்கு புரோகிராம் எழுதித் தந்து சம்பாதித்துக் கொண்டிருந்தது அந்தக் குழு.

ஒருமுறை உள்ளூர் கம்பெனி ஒன்று சம்பள பட்டுவாடாவுக்கு ஒரு புரோக்ராம் எழுதிக் கொடுக்கச் சொன்னது. அந்த காண்ட்ராக்ட்டை கேட்ஸின் நண்பர்கள் குழு ஏற்றுக் கொண்டது. ஆனால் அதில் ஒரு பிரச்னை. கிடைக்கும் பணத்தைப் பிரித்தால் குழுவிலிருக்கும் அனைவருக்கும் போதுமான தாக இல்லை. அதனால் யாராவது ஒருவரை குழுவிலிருந்து வெளியில் அனுப்பிவிட முடிவு செய்தார்கள். அவர்கள் வெளியே துரத்த முடிவு செய்தது பில்கேட்ஸை. அப்போது பில்கேட்ஸ் அவர்களிடம் இப்படிச் சொன்னாராம். ‘‘நான் போகிறேன். ஆனால், என் தேவை ஏற்பட்டு திரும்ப அழைத்தால் சும்மா வரமாட்டேன். இந்தக் குழுவுக்கு தலைவனாகத்தான் வருவேன். ஆனால், அதில் கொஞ்சம் அபாயம் இருக்கிறது. நான் ஒருமுறை தலைவனானால், அதன்பிறகு நானே தான் தலைவனாய் இருப்பேன். என்னை மாற்ற முடியாது.’’ பில்கேட்ஸின் வார்த்தைகளிலிருந்த தீவிரத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் அவரை வெளியே அனுப்பாமலே சமாளித்துக் கொண்டார் கள்.  அப்படி உருவாக்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ் அதன் இயக்குனர்கள் குழுவில் இருந்து வெளியேறினார். தனது அறக்கட்டளை சார்பில் செய்யப்படும் பொதுநலப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்த பில் கேட்ஸ் முடிவு செய்துள்ளார்.

உலகளவில் கணிணி தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸ் தன் இளம் வயதில் தன் நண்பர் ஆலனுடன் சேர்ந்து கடந்த 1975ம் ஆண்டு துவக்கினார். அதை அடுத்து உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தன் மனைவி மெலிண்டாவுடன் இணைந்து அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். இந்த அறக்கட்டளை மூலம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு பொதுநல காரியங்கள் செய்து வருகிறார்.

இந்நிலையில் தன் அறக்கட்டளைப் பணிகளில் அதிக நேரத்தை செலவிடும் நோக்கத்தில் பில் கேட்ஸ் தன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து நேற்று வெளியேறினார்.

அறக்கட்டளை பணிகளை கவனிக்க கடந்த 2000ம் ஆண்டு தன் தலைமை நிர்வாகி பதவியை துறந்த பில் கேட்ஸ், கடந்த 2014ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவின் தலைவர் பதவியில் இருந்தும் விலகினார்.

தற்போது இயக்குனர்கள் குழுவில் இருந்து முழுமையாக தன்னை விலக்கி கொண்டுள்ளார் பில் கேட்ஸ். இனி அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக மட்டுமே பணியாற்றுவார்.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சத்திய நாதெல்லா, ” கடந்த பல ஆண்டுகளாக பில் கேட்ஸுடன் பணியாற்றியதில் பல விஷயங்களை கற்று கொண்டேன். அவருடன் பணியாற்றியதை பெருமையாகவும் கவுரமாகவும் கருதுகிறேன். சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கை மற்றும் சமூகத்தின் மிக பெரிய சவால்களுக்கு தீர்வு காண வேண்டும் என்ற லட்சியம் ஆகியவற்றுடன் பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவினார். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அவரது ஆலோசனைகளால் தொடர்ந்து பயன் பெறும்.பில் கேட்ஸின் நட்பு கிடைத்ததற்காக நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். அவருடன் தொடர்ந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!