செய்தியைக் கேட்க / Listen to News
தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் வரும் நாட்களில் கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிகிறது. வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை (5-day work week) என்ற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வங்கிச் சேவைகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
3 நாட்கள் முடங்கும் வங்கிகள்
ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் பின்வரும் நாட்களில் வங்கிப் பணிகள் பாதிக்கப்படும்:
-
ஜனவரி 25 (ஞாயிறு): பொது விடுமுறை என்பதால் வங்கிகள் இயங்காது.
-
ஜனவரி 26 (திங்கள்): குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
-
ஜனவரி 27 (செவ்வாய்): வங்கி ஊழியர் சங்கங்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாகப் பணிகள் முடங்க வாய்ப்புள்ளது.
போராட்டத்தின் பின்னணி என்ன?
கடந்த ஓராண்டிற்கும் மேலாக வங்கி ஊழியர் சங்கங்கள் “வாரத்தில் 5 நாட்கள் வேலை” என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. தற்போது மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்துச் சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அரசு மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துடன் (IBA) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படாததால், இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய சேவைகள்
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை மற்றும் வேலைநிறுத்தம் ஏற்படுவதால் கீழ்க்கண்ட சேவைகளில் பாதிப்பு இருக்கலாம்:
-
காசோலை பரிவர்த்தனை (Cheque Clearance) பணிகளில் தேக்கம் ஏற்படும்.
-
வங்கிக் கிளைகளில் நேரடியாகப் பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் பாதிக்கப்படும்.
-
தொடர் விடுமுறை என்பதால் பல ஏடிஎம் (ATM) மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனினும், ஆன்லைன் பணப் பரிமாற்றங்களான NEFT, IMPS மற்றும் UPI சேவைகள் தடையின்றி இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவசரத் தேவை உள்ளவர்கள் முன்கூட்டியே பணப் பரிவர்த்தனைகளைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
தச்சை குமார்


