June 4, 2023

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை: ஆஷ் பார்ட்டி ஓய்வு! – வீடியோ

ன்டர்நேஷனல் டென்னிஸ் வுமன்ஸ் சிங்கிள் பிரிவு தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ் பார்ட்டி டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். அவருக்கு வயது 25. மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் ஆஷ்லி, திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஆஷ் பார்ட்டி, சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். ஆஷ்லிக் தனது 4-வது வயதிலேயே டென்னிஸ் விளையாடத் தொடங்கியவர். பெற்றோரின் ஊக்கத்தால் நான்கு வயதில் டென்னிஸ் ராக்கெட்டை கையிலெடுத்த அவருக்கு வழிகாட்டியாக இருந்தது ஆஸ்திரேலியாவின் மற்றொரு சாதனை வீராங்கனை எவோன் கூலாகாங் காவ்லி. அவரின் பயிற்சியால் தொழில்முறை வீராங்கனையாக உருவெடுத்தார். பின்னர் மிகச் சிறிய வயதிலேயே டென்னிஸில் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். 2011-ம் ஆண்டு விம்பிள்டன் ஜூனியரில் சாம்பியன் ஆகி கவனம் ஈர்த்தவர், சீனியர் வீரர்களுடன் விளையாடத் தொடங்கினார். தனது 16 வயதிலேயே கேசி டெல்லாக்வாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் உட்பட மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் இரண்டாம் நபராக வந்தார். தொடர்ந்து சுமார் 121 வாரங்களாக உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். குறுகிய காலத்தில் 15 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ள அவர், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், 2021 விம்பிள்டன் கோப்பை, 2019 பிரன்ஞ்ச் ஓபன் டென்னிஸ் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .இப்படிப்பட்ட ஆஷ்லே பார்ட்டி, தனது 25-வது வயதில் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், “டென்னிஸில் இருந்து நான் ஓய்வு பெறுவதை இன்றைக்கு அறிவிப்பது என்பது கடினமாகவும் உணர்ச்சி மிகுந்ததாகவும் உள்ளது. இந்தச் செய்தியை உங்களிடம் எப்படிப் பகிர்வது எனத் தெரியவில்லை. இந்த விளையாட்டு எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளது. நான் பெருமிதமாகவும் நிறைவாகவும் உணர்கிறேன். இந்தப் பயணத்தில் உடன் இருந்த எல்லோருக்கும் நன்றி, வாழ்க்கை முழுவதற்குமான நினைவுகளைத் தந்ததற்கு நான் என்றும் நன்றியுடையவளாக இருப்பேன்” எனப் பதிவிட்டு காணொலியை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் தன்னுடைய நண்பரும் இரட்டையர் பார்ட்னருமான கேஸியோடு (Casey Dellacqua) உரையாடுகிறார்.அந்தக் காணொலியில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எதற்கும் தயாராகவும்! இது சரியான தருணம் எனத் தோன்றுகிறது. டென்னிஸ்க்கு நன்றியுடையவளாக இருக்கிறேன். எனக்கு எல்லாவற்றையும் டென்னிஸ் கொடுத்துள்ளது. என்னுடைய கனவுகளையும் அதற்கும் அதிகமாகவும். ஆனால் எனக்கு தெரியும் இதிலிருந்து விலகி என்னுடைய மற்ற கனவுகளைத் துரத்தவும், டென்னிஸ் ராக்கெட்டை கீழே வைக்கவும் இதுதான் சரியான நேரம்” என்று கண்ணீர் மல்க அவர் ஓய்வுபெறுவதற்கான காரணத்தைத் தெரிவித்திருக்கிறார்.

காரணம் எதுவாக இருந்தாலும் 25 வயதிலேயே ஓய்வு பெறும் ஆஷ் பார்ட்டியின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பதுதான் உண்மை.