அம்பான் புயல் = ஒடிசா & மே வங்கம் இடையே கரையை கடக்குமாம்!

அம்பான் புயல் = ஒடிசா & மே வங்கம் இடையே கரையை கடக்குமாம்!

வாட்டி எடுக்கும் அக்னி நட்சத்திர வெயிலுக்கிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘அம்பான்’ புயல் நாளை அதி தீவிர புயலாக வலுப்பெறும் எனவும் இதன் காரணமாக 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் புயல் காரணமாக மேற்குவங்கத்தில் கொல்கத்தா, கிழக்கு மற்றும் மேற்கு மிதானாபூர், ஹவுரா, கூக்லி உள்ளிட்ட மாவட்டங்களில் 19 மற்றும் 20ம் தேதிகளில் மிகக் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தற்போது அம்பான் புயல் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் அம்பான் புயல், நாளை காலைக்குள் அதி தீவிரப் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடக்கு – வடமேற்கு திசையிலேயே தொடர்ந்து நகரும் உம்பன் புயல் வரும் 20-ஆம் தேதி மேற்கு வங்கம் – ஒடிசா இடையே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த அம்பான் புயல் காரணமாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு கடற்பகுதியில் காற்று வழக்கத்திற்கு மாறாக பலத்த வேகத்தில் வீசக் கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, தூத்துக்குடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோன்று கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அம்பான் புயல் ஒடிசா கடற்கரை வழியாக கரையை கடக்கும்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக் கூடும் என்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இச்சூழலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களை புயல் கரையை கடக்கும் பாதை வழியாக இயக்கப்படுவதை நிறுத்தும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!