அமித்ஷா & எடப்பாடி சந்திப்பின் இலை மறைவு செய்தி!

அமித்ஷா & எடப்பாடி சந்திப்பின் இலை மறைவு செய்தி!

மித்ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேசியதாக செய்தி வந்ததே தவிர, என்ன பேசினார்கள் என்று அறிவிக்கப்படவில்லை. மாநில உரிமைகள் பற்றிப் பேசியதாக எடப்பாடி கூறுவதை நம்ப முடியாது. கூட்டணி பற்றிதான் பேசியிருப்பார்கள். முடிவு எடுத்திருந்தால் அறிவித்திருப்பார்கள். எடுக்கவில்லை என்று தெரிகிறது.’ எடப்பாடியை டெல்லிக்கு வரவழைத்து கூட்டணிக்கு அமித்ஷா வற்புறுத்தினார். மிரட்டினார் ‘ என்பதெல்லாம் கழுகு பாணி கற்பனை.

உண்மையில், பாஜக கூட்டணி தேவை என்றும், தேவையில்லை என்றும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கிறது அதிமுக. அதன் தலைவர்கள் சிலர் நீண்ட காலமாக எடப்பாடியை பாஜக கூட்டணிக்கு வற்புறுத்தி வருகின்றனர். அதை அலட்சியப்படுத்தினால், அதன் காரணமாக கட்சி பிளவு பட்டு விடுமோ என்ற அச்சமும் எடப்பாடிக்கு இருக்கிறது. அதனால், அவர்களை சமாதானப்படுத்த ‘ சரி, தேதி வாங்குங்கள் ‘ என்று சொல்லியிருப்பார். அந்த வகையில் சந்திப்பு நடந்திருக்கலாம்.

திமுகவை வீழ்த்த அதிமுக பாஜக கூட்டணி இருந்தால்தான் முடியும் என்று அமித்ஷா நினைக்கிறார். எடப்பாடிக்கு அதில் விருப்பம் இல்லை. கூட்டணி அவசியம் என்று அதிமுகவில் பலர் விரும்பினாலும், அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை. இரு கட்சியிலும் தலைமை மாறினால்தான் இணக்கமான கூட்டணி ஏற்படும். அதற்கு வாய்ப்பு இல்லை. இந்த நிலையில் சந்திப்பு நடந்துள்ளதால், கூட்டணி உருவானாலும், விரும்பத்தகாத பல விளைவுகளை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகவே இருக்கும். திமுகவின் கொள்கைகளையே கொண்டுள்ள அதிமுகவுடன் வைக்கும் கூட்டணி , பாஜக மற்றும் அண்ணாமலையின் பிரசார வலிமைக்கு பெரும் தடைக்கல்லாகவும் இருக்கும்.

இன்று திமுக எதிர்ப்பு ஓட்டுகளை ஈர்க்கும் பெரிய சக்தியாக இருப்பவர் அண்ணாமலை என்பதை பாஜக மேலிடம் நன்கு உணர்ந்துள்ளது. எடப்பாடிக்காக, அண்ணாமலையை ஒதுக்கி விட்டு தேர்தலை சந்திக்க பாஜக தயாராக இல்லை. அதனால், கூட்டணியில் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் தருவது பற்றி அமித்ஷா பேசியிருக்கலாம்.

எடப்பாடியோ, பாஜக கூட்டணியால் சிறுபான்மையின ஓட்டுகள் போய்விடும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அதிமுக மிகப் பெரிய கட்சி. ஏற்கெனவே முதல்வராக இருந்திருக்கிறேன். அண்ணாமலையை போட்டியாக வளர விடுவது தனக்கும் அதிமுகவுக்கும் நல்லதல்ல’ என்றும் அவர் நினைக்கிறார். பாஜகவுடன் கூட்டணி ஏற்பட்டால் இலவச இணைப்பாக சசிகலா& co. நுழைந்து விடும். அதன் பின், ஒற்றைத் தலைமையாவது இரட்டைத் தலைமையாவது- என்ற நியாயமான அச்சமும் அவருக்கு உள்ளது.

திமுக அதிமுக என்று மாறி மாறித்தானே ஆட்சிக்கு வர வேண்டும்? அடுத்த சான்ஸ் நமக்குத்தானே கிடைக்க வேண்டும்- என்பது அவர் கணக்கு. அதிமுக முன்பு போல் வலிவுடன் இல்லை. திமுக எதிர்ப்பு வாக்குகளை ஈர்ப்பதில் இன்று பாஜக , அதிமுக வை மிஞ்சி இருக்கிறது என்பதை அவர் உணரவில்லை. அதுதான் சிக்கல்.இதனால், பேச்சில் சுமுக முடிவு ஏற்பட்டிருக்காது. ‘சரி, யோசித்து சொல்கிறேன் ‘ என்று கூறி திரும்பி வந்திருப்பார்.

பாஜக கூட்டணி வேண்டும் என்று எடப்பாடி நினைத்திருந்தால், சட்டசபையில் வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிரான திமுக அரசின் தீர்மானத்தை ஆதரித்திருக்க மாட்டார். குறைந்த பட்சம் அதிமுக வெளிநடப்பாவது செய்திருக்கும்.

அதே சமயம், கூட்டணி இல்லவே இல்லை என்று முன்பு போல் அவர் சொல்லவில்லை. தேர்தல் நேரத்தில் அப்போதைய சூழலைப் பொறுத்து முடிவெடுப்போம் என்றுதான் கூறுகிறார். இது வேலுமணி போன்ற பாஜக ஆதரவு தலைவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ள செய்யப்படும் முயற்சி.’2026ல் தமிழகத்தில் என்.டி.ஏ. ஆட்சிதான் ‘ என்ற அமித்ஷாவின் ட்வீட்டுக்கு ‘ பாஜக பங்கு பெறும் ஆட்சி ‘ என்றுதான் அர்த்தம். அதிமுக ஆட்சி என்பதை அவர் ஏற்கவில்லை.

பாஜக சரியான பாதையில்தான் போகிறது.

துக்ளக் சத்யா, மூத்த பத்திரிகையாளர்