பா.ஜ.க.வுடன் கூட்டணி: பா.ம.க.10 தொகுதிகளில் போட்டி!- ஏனிந்த முடிவு? முழு விபரம்!

பா.ஜ.க.வுடன் கூட்டணி: பா.ம.க.10 தொகுதிகளில் போட்டி!- ஏனிந்த முடிவு? முழு விபரம்!

டப்பு தேர்தலுக்கான கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. உயர்நிலை குழு ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், தீவிர ஆலோசனைக்கு பிறகு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்த்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த ஆலோசனையின் முடிவில் பா.ஜ.க. – பா.ம.க. இடையிலான கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 10 நாடாளுமன்ற தொகுதிகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “10 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க கட்சி முடிவு செய்திருக்கிறது. நாட்டின் நலன் கருதி, பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பான சூழல் இருக்கிறது. ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். எங்கள் கூட்டணி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க மிகப்பெரிய வெற்றி பெறும். பிரதமர் மோடி 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று அன்புமணி கூறினார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் மக்கள் சக்தியாக, தனிப்பெரும் அரசியல் இயக்கமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்து பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று ஒரு வேள்வியுடன் பாமக களமிறங்கியிருக்கிறது. இந்தியாவின் தனிப்பெரும் அரசியல் தலைவராக திகழும் ராமதாஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களின் அன்பை பெற்றவர் ராமதாஸ். தமிழகத்தில் புரட்சிகரமான அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பது அவரது மிகப்பெரிய கனவு.

ராமதாஸ் யோசித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களை பிரதமர் மோடி நாடு முழுவதும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வெற்றியை கொடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியிருக்கிறோம். தமிழகத்தின் அரசியல் நேற்று இரவில் இருந்து மாறியிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி எடுத்துள்ள இந்த முடிவு தமிழக அரசியலை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது. 2024ல் மாபெரும் வெற்றி, 2026ல் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம். நாங்கள் இரவோடு இரவாக கோவையிலிருந்து இங்கு வந்ததற்கு காரணம், இன்று சேலத்தில் பிரதமர் மோடியுடன் ராம்தாசை அமரவைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசைதான்“ என்று அண்ணாமலை தெரிவித்தார்.

முன்னதாக பாஜக – பாமக கூட்டணி குறித்து “அதிமுக கூட்டணிக்கு நம்பத்தகுந்த கட்சி இல்லை – தருமபுரி சொல்லித்தரும் பாடம்! ` என்ற தலைப்பில் சோசியல் மீடியாவில் பரவிய சேதியிது:

அதிமுக கூட்டணிக்கு உகந்த கட்சி அல்ல என்பது நமக்கு தெரிந்துமே, 2021 ஆம் ஆண்டு அவர்களுடன் கூட்டணியை ஏன் வைத்தோம் என்றால், வன்னியர் இட ஒதுக்கீடு என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும்தான் என்பதை அனைவருக்கும் உதாரணத்துடன் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. அதிமுக கூட்டணிக்கு உகந்த கட்சி அல்ல அன்று ஏன் சொல்கிறோம் என்றால், கடந்த 2014 ஆம் ஆண்டு மருத்துவர் அன்புமணி அவர்கள் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட போது, சுமார் 42.5 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெறுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரோ 35.5 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பெறுகிறார். ஆக மொத்தம் 2014 ஆம் ஆண்டு தர்மபுரி தொகுதியில் அதிமுக மற்றும் பாமக பெற்ற வாக்குகள் 78%. அதே தருமபுரி தொகுதியில் அதே மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2019 போட்டியிடும் போது பெற்ற வாக்கு சதவீதம் எத்தனை தெரியுமா? 41 மட்டுமே! அதாவது முன்பு பதிவான 78 சதவீதத்தில் 37 சதவீத வாக்குகள் பதிவாகவில்லை.

அதே நேரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சில தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுக ஆட்சி நீடிக்கும் என்ற நிலை வந்தபோது, பாமக முழு ஆதரவை அளித்தது. இக்கட்டான நிலையில் 18 தொகுதி சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதிமுக, பாப்பிரெட்டிப்பட்டி அரூர் சோளிங்கர் ஆகிய 3 தொகுதிகளில் பாமகவின் பலத்தோடு தான் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை வைத்து தான் அதிமுக அடுத்து இரண்டு ஆண்டுகள் ஆட்சி அமைத்தது என்பதுதான் வரலாறு. அந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு வாக்களிக்கவில்லை என்பதுதான் உண்மையான நிலவரம். தருமபுரி மக்களவை தொகுதிக்கு அடங்கிய அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெற்றது. அவர்கள் சட்டமன்றத்திற்கும் மக்களவைக்கும் வாக்களித்தார்கள்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில், அரூரில் இரட்டை இலைக்கு 88632 பேர் வாக்களித்த நிலையில் மாம்பழத்திற்கோ 65072 பேர் மட்டுமே வாக்களித்தார்கள். அதாவது 23560 பேர் அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள், பாமகவிற்கு வாக்களிக்கவில்லை. அதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுமார் 103981 வாக்குகளை பெற்ற அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 94029 வாக்குகளை மட்டுமே பெறுகிறார். அதாவது 9952 வாக்குகள் அதிமுகவிற்கு போட்டவர்கள் பாமகவிற்கு போடவில்லை.ஒரே நேரத்தில் நடைபெற்ற தேர்தலில், இரண்டு தொகுதிகளில் மட்டுமே 33,512 பேர் அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் பாமகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதுதான் உண்மையான வரலாறு. மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் 2019ல் சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றார். இந்த 33512 அதிமுகவினரும் பாமகவிற்கு வாக்களித்து இருந்தால் வெற்றிக் கோட்டிற்கு மிக அருகில் அன்புமணி அவர்கள் இருந்திருப்பார். அதேபோன்று அன்றைய அமைச்சர் கே பி அன்பழகனுக்கு சொந்தமான பாலக்கோடு தொகுதியில் சுமார் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பின்தங்கி இருந்தார்.

தர்மபுரி என்ற இந்த ஒற்றை தொகுதியிலேயே அதிமுகவின் கூட்டணி நிலவரம் என்ன? அதனால் நமக்கு கிடைத்த பலன் என்ன? என்பது தெரிந்து விட்டது. 2014 இல் அதிமுக தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்ற மத்திய சென்னை, திண்டுக்கல் தொகுதியில் பாமக வைப்புத்தொகை பெறவே தடுமாறியது ஏன்? அதிமுகவினரின் வாக்குகள் எங்கே சென்றது? கடந்த 2019 ஆம் ஆண்டு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட போது, ஒட்டுமொத்தமாகவே அதிமுக கூட்டணி 30 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 39 சதவீத வாக்குகளை பெற்றது.

அதே போன்று 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 19% வாக்குகளை மட்டுமே பெற்ற அதிமுக, 2021 ஆம் ஆண்டு 33 சதவீத வாக்குகளை பெற்றது எப்படி?. 2019 இல் 5.5 சதவீத வாக்குகளை பெற்ற பாமக 2021 இல் 3.8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது எப்படி? பாமகவின் கோரிக்கையான வன்னியர் இட ஒதுக்கீடு என்பதை தனக்கு சாதகமாக்கி, பாமகவை பலிகடவாக்கி தன்னுடைய வளர்ச்சியை தன்னுடைய இடத்தினை தன்னுடைய கட்சியில் வலுப்படுத்திக்கொள்ள தந்திரமாக சூழ்ச்சி செய்து, வன்னியர்களின் வாக்குகளை அறுவடை செய்த எடப்பாடி பழனிச்சாமி, தன்னை ஒரு தலைவராக நிலை நிறுத்திக் கொண்டார் என்பது தான் வரலாற்று உண்மை.

அதிமுகவிற்கு 14% வாக்குகள் உயர்ந்த நிலையில் பாமகவிற்கு 2 சதவீத வாக்குகள் குறைந்தது எப்படி? பாமக செய்த தியாகம்தானே! அதிமுக பாமக கூட்டணி அமைந்ததால் பாமகவின் வாக்குகள் முழுமையாக அதிமுகவிற்கு சென்றதுடன், மேலும் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக பாமக செய்த போராட்டங்களின் பலனாக மேலும் கூடி வந்த வன்னியர்களின் வாக்குகளும் அதிமுகவிற்கு சென்றதே தவிர, அதிமுகவின் வன்னியர் இல்லாத இதர சாதிகளின் வாக்குகளும் அதிமுகவின் தலித் வாக்குகளும் அதிமுகவினரால் பாமகவிற்கு கிடைக்கவில்லை. அதனால் பல தொகுதிகளில் பாமகவினர் சொற்ப வாக்குகளில் தோல்வி அடைய நேரிட்டது.

அதிமுகவின் வெற்றிக்கு பாமகவின் முழுமையான ஒத்துழைப்பும், பாமகவின் தோல்விக்கு அதிமுகவின் வாக்குகள் முழுமையாக வந்து சேராமை மட்டுமே காரணம். அதிமுக பாமக கூட்டணி என்பது ஒரு பொருந்தா கூட்டணி. இதில் நமக்கு விளைந்த ஒரே பயன் என்றாவது ஒருநாள் வன்னியர் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் தான். மருத்துவர் அய்யாவின் உழைப்பில், மருத்துவர் அய்யாவின் அரசியல் சாதுரியத்தால், மருத்துவர் அய்யா அவர்கள் உழைத்து வளர்த்த கட்சியின் தியாகத்தில் உருவானதுதான் 10.5 % வன்னியர் இட ஒதுக்கீடு. அதற்கும் எடப்பாடி பழனிசாமிக்கோ, சிவி சண்முகத்திற்கோ, கேபி முனுசாமிக்கோ துளியும் தொடர்பில்லை. பாமக – பாஜக கூட்டணியில் நாம் ஏற்கனவே 2014 இல் தருமபுரியில் வென்றோம், 2009, 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியைத்தான் சந்தித்தோம்! ஆக பாஜக கூட்டணி என்பது தவறான முடிவல்ல, மாற்றத்திற்கான, கட்சியின் வளர்ச்சிக்கான முடிவு என்பதை உறுதியாக நம்புங்கள்!

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!