ஈழத் தமிழர்கள் பலியான போது தெரிவிக்காத அஞ்சலியை நான் உயிரிழந்தால் செய்யாதீர்கள்- மைத்ரேயன் உருக்கம்

ஈழத் தமிழர்கள் பலியான போது தெரிவிக்காத அஞ்சலியை நான் உயிரிழந்தால் செய்யாதீர்கள்- மைத்ரேயன் உருக்கம்

அதிமுக சார்பில் மூன்று முறை தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வருபவர். மைத்ரேயன். மைத்ரேயனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. சுமார் பதினான்கரை ஆண்டு காலம் பணியாற்றிய மைத்ரேயன் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்தவர். இதனால், அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களுடன் நல்ல நட்பு உள்ளது. மாநிலங்களவையில் இருந்து விடைபெறுவதை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு மைத்ரேயன் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்தநிலையில் மைத்ரேயனுக்கு மாநிலங்களவை யில் இன்று பிரியா விடை அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் பலியான போது நாடாளுமன்றத்தில் தெரிவிக்காத இரங்கல், நான் உயிரிழந்தால் செய்ய வேண்டாம் என கலங்கிய குரலில் கேட்டுக் கொண்டார்.

மாநிலங்களவையில் தனது கடைசிநாளான இன்று அவர் ஆற்றிய உரையின் போது அவர், “மாநிலங்களவையில் பதினான்கரை ஆண்டு கால நீண்ட சேவைக்குப் பிறகு நான் ஓய்வு பெறுகிறேன். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை இது எனது அஸ்தமன நேரம். இந்த வேளையில் என் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு மூன்று பதவிக்காலங்களுக்கு என்னை மாநிலங்கள வைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியறிதலை பதிவு செய்ய விரும்புகிறேன். உண்மையில், மாநிலங்களவைக்கு அ.இ.அ.திமுக சார்பாக மூன்று பதவிக்காலங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு எம்பி என்ற தனிச் சிறப்பை அவர் எனக்கு வழங்கியிருக்கிறார். அவர் மீது என்றைக்கும் மாறாத எனது விசுவாசம் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.

இந்த அவையில் எப்போதும் என்னை சகோதரராகக் கருதி வழிநடத்திய ஒருவருக்கு நான் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கவேண்டும். அவர் தான் திரு அருண் ஜெய்ட்லி. அவர் விரைவாக உடல் நலம் தேறி என்னைப்போல் மற்றவர்களுக்கு எதிர்காலத்தில் வழிநடத்தவேண்டும் என்று மனதாற விரும்புகிறேன். என நீண்ட கால நண்பரும் இந்தியப் பிரதமருமான திரு நரேந்திர மோதி அவர்களை நான் மறக்க இயலாது. 90 களில் இருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. பல ஆண்டுகளாக அவருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் இடையே விசுவாசமான தூதராக செயல்பட்டு வந்திருக்கிறேன். என் மீது தனிப்பட்ட அன்பை வைத்திருப்பதற்காக அவருக்கு நான் நன்றிபாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த பதினான்கரை ஆண்டுகளில் நான் குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். POTA மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டம், கூச்சல் குழப்பத்துக்கு இடையே மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது, கொல் கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை, அவர் இந்த அவையின் முன் ஆஜராக அழைக்கப்பட்டது, லோக்பால் மசோதா குறித்து நள்ளிரவு வரை நீண்ட விவாதத்துக்குப் பிறகு திடீரென அவை ஒத்திவைக்கப்பட்டது, சர்ச்சைக்குரிய இந்தியா-அமெரிக்கா இடையேயான அனுசக்தி ஒப்பந்தம் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, தமிழக மீனவர்களின் நடனுக்காக, ஈழத்தமிழர்களின் நிலை ஆகியவை குறித்து திரும்பத்திரும்ப இத்தனை ஆண்டுகளில் இந்த அவையில் நான் உணர்வு பூர்வமாக குரல்கொடுத்து போராடியிருக்கிறேன்.ஒரேயொரு விஷயம் மட்டும் எப்போதும் என் நெஞ்சில் முள்ளாய் உறுத்துகிறது. இந்த அவை பல நேரங்களில் பலருக்கு இரங்கல் குறிப்புகளை வாசித்தது, இறந்து போன மக்களுக்கு இரங்கல் தீர்மானங்களை நிறைவேற்றி, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாம் மௌன அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் ஈழத்தின் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள், எனது தொப்புள்கொடி உறவுகள், இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, இந்த அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுவது மௌன அஞ்சலி செலுத்துவது என்பதை விட அது பற்றி இந்த அவை கவனத்தில் கூட எடுத்துக்கொள்ளவில்லை. இது எனது நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக தைத்துக்கொண்டே இருக்கும். எனது தமிழ் ஈழத்தின் சகோதர சகோதரிகளுக்கு காட்டவேண்டிய குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வைக் கூட இந்த அவர் காட்டவில்லை. எனது வாழ்வின் முடிவு ஏற்பட்டாலும் கூட எந்தவித இரங்கல் தீர்மானமோ மௌன அஞ்சலியோ இந்த அவையில் எனக்கு வேண்டாம் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

எனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் வேளையில் என் மீது மாறா அன்பு காட்டிய இந்திய அரசியலில் பழுத்த அனுபவசாலியான மாநிலங்களவைத் தலைவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது ஆழமான அன்பையும் பாசத்தையும் செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், இந்த அவையில் எனது கட்சித் தலைவர் திரு நவநீதகிருஷ்ணன், மற்றும் இதர அதிமுக எம்பிகளுக்கு என நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என அன்புக்கு பாத்திரமான நண்பர்கள்- ஜெய்ராம் ரமேஷ், அலுவாலியா, நெராஷ் அகர்வால், ராம்கோபால் யாதவ், ரவிசங்கர் பிரசாத், ஸ்மிரிதி இரானி, டி. ராஜா, டி.கே ரங்கராஜன் மற்றும் பலருக்கு என் நன்றி. மாநிலங்களவை தலைமைச் செயலர் மற்றும் செயலக ஊழியர்களுக்கும் நான் நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

திராவிட இயக்கத்தின் முன்னோடி பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது நாடாளுமன்ற பணிகளை இந்த அவையில் இருந்து தான் தொடங்கினார். பின்னர் அவர் மாநில அரசியலுக்குச் சென்றார். எனது இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 1984 முதல் 1989 வரை இந்த அவையில் ஒரு உறுப்பினராக தனது பணிகளைத் தொடங்கினார். பின்னர் தமிழ்நாட்டு அரசியல் நுழைந்து மாநிலத்தின் மிகப் பிரபலமான தலைவராக உருவெடுத்தார். மாநிலங்களவையில் எனது மிக நீண்ட கால பணி அனுபவத்துக்குப் பிறகு மாநில அரசியலுக்கு நான் திரும்பவேண்டிய காலகட்டம் இது. நாடாளுமன்றத்தில் இது எனது அஸ்தமனக் காலம் என்பது உண்மை தான்; ஆனால் மாநில அரசியலில் எனது சூரியோதயக் காலம் என்று சொல்லவேண்டும். எனது குரல் இந்த அவையில் ஒலித்த பல நினைவுகூரத்தக்க நிகழ்வுகள் உள்ளன. எனது பெயர் மறைந்துபோகலாம்; எனது முகம் மாறக்கூடும், என்னை நீங்கள் நினைவுகொண்டால் எனது குரல் மட்டுமே அடையாளமாக இருக்கும்.”என உருக்கமாக தெரிவித்து கண்ணீர் வடித்தார். இதைக் கண்டு அவையே அமைதி காத்தது

error: Content is protected !!