ஆயிரம் பொற்காசுகள் – விமர்சனம்!

ஆயிரம் பொற்காசுகள் – விமர்சனம்!

பொதுவாகவே காமெடி பண்ணுவது எளிதல்ல. அதிலும் சினிமா எடுப்பது சுலபத்திலும் சுலபமாக தோன்றும் கஷ்டத்திலும் கஷ்டமான வேலை! நகைச்சுவை மெயின் ட்ராக்கை தாங்கி பிடித்தும், அது தொய்யும்போது போரடிக்காமல் இருக்கவும், ஒரு மாறுதலுக்கு என்று பல கோணம் கொண்டது. காமெடி ட்ராக்கை கொண்டு வந்து கதையை காப்பாத்துங்க என்றே சந்திரபாபுவைக்கேட்டுக் கொள்வார்களாம். ஆனால் தற்போதெல்லாம் படம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் இப்படி சல்லியாகத்தான் ரசிப்பார்கள் என்று முடிவு செய்து கொண்டு இரட்டை அர்த்த வசனங்களை புகுத்துவது. இது கத்தி மீது நடப்பது போல. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற அவஸ்தை இருப்பெதல்லாம். சரி.. ஆனால் அந்த கோட்டையெல்லாம் அழி. நாம முதல்லேந்து விளையாடுவோம் என்ற அந்த காமெடி தமிழ் சினிமாவில் பொற்கிழி தரும் அளவுக்கு ஓரளவு க்வாலிட்டியுடன் ரியல் காமெடி படமாக உருவாகி இருக்கிறது ஆயிரம் பொற்காசுகள் படம்!

இப் படம் தொடங்கியதில் இருந்தே இப்படத்தில் சீரியஸாகவோ சோகமாகவோ எதுவுமே பிரதிபலித்து விடக்கூடாது என்பதில் தெள்ளத் தெளிவாக இருந்தது விளங்கிவிடுகிறது. இதனாலேயே காதல் காட்சிகளோ, எமோஷ்னல் காட்சிகளோ, திடுக்கிடும் திருப்பங்கள் அடங்கிய காட்சிகளோ எந்தக் காட்சியாக இருந்தாலும் ஒரே மீட்டரில் ஏறாமல் இறங்காமல் திரைக்கதை சென்று கொண்டே இருக்கிறது. அதாவது தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில், வாழ்ந்து வரும் சரவணன்., திருமணம் செய்யாமல் விட்டேத்தியாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரோடு வந்து சேர்கிறார் சரவணனின் தங்கை மகனான விதார்த். அக்காலக் கட்டத்தில் கிராமம் முழுவதும் டாய்லெட் கட்ட சொல்லி அரசாங்கம் சொல்ல, அதற்காக மானியம் கிடைக்கும் என்பதால் சரவணனும் டாய்லெட் கட்டுவதற்கு குழி தோண்டுகிறார். இதர்கு ஒத்தாசையாக சுடுகாட்டில் குழி தோண்டி பிழைப்பு ஓட்டும் ஜார்ஜ் வருகிறார்.அப்படி ஜார்ஜ் குழி தோண்டும்போது அங்கு ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய ஒரு பானை கிடைக்கிறது. . அதனை ஊருக்கு தெரியாமல் சரவணன், விதார்த் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் மூன்று பங்காக பிரித்து எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர். இந்த பங்கு பிரிப்பு நடப்பதற்குள் சரவணனுக்கும் ஜார்ஜ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிய அடிபடும் ஜார்ஜ்ற்கு சுயநினைவு இழந்து ஞாபக மறதியால் அவதிப்படுகிறார். இதனால் ஹேப்பி ஆகும் மாமனும் மச்சானும் அந்த ஆயிரம் பொற்காசுகளை தங்களுக்குள் பங்கு போட நினைக்க ஒரு கட்டத்தில் புதையல் பற்றிய செய்தி ஒருவர் மூலம் மற்றவருக்கு பரவி ஒரு கட்டத்தில் எதிர் வீட்டு கோவிந்தன் மூலம் ஊர் முழுக்க பரவி ஊரே ஆயிரம் பொற்காசில் பங்கு கேட்கிறது. இறுதியில் இந்த விஷயம் தொல்லியல் துறைக்கே தெரிந்து வந்ததால் என்ன ஆனது? புதையலை அடைய முற்படும் கிராம மக்கள் அனைவருக்குள்ளும் நடக்கும் சண்டையும், துரத்தலும் முடிவுக்கு வந்ததா? யாரிடம் இறுதியில் ஆயிரம் பொற்காசுகள் கிடைத்தது? என்பதை பெரிதும் ரசிக்கும் படி வழங்கி இருக்கிறார்கள். அதிலும் பொற்காசுகளுக்காக ஆசைப்படும் ஒவ்வொரு நபரும் நடிப்பால் நமக்கு ஸ்மைலியை ஏற்படுத்துகிறார்கள்.

ஹீரோவை விட துணை கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்காகவே விதார்த்தை பாராட்டலாம் ஹீரோயின் அருந்ததி நாயருக்கு திரையில் காதலிப்பதை தவிர வேறு வேலை இல்லை என்பது சோகம். ஆனால் படம் பொற்காசுகளை சுற்றி நடந்தாலும், அரசு தரும் பல்வேறு நலத்திட்ட மானியங்கள் எப்படி தவறான வழி யில் பயன்படுத்தப்படுகிறது என்று காமெடி கலந்து சொல்லப் பயன்படுத்தி இருக்கும் அரசாங்கம் கொடுக்கின்ற இலவசங்களை வாங்கி வைத்துக் கொண்டு, ஊரில் இருக்கும் கோழி சேவல்களை திருட்டுத்தனமாக அடித்து உணவாக்கிக் கொண்டு உடலை வளர்க்கும் மாமன்(சரவணன்), அவனிடம் அடைக்கலம் தேடி வந்து ஒட்டிக் கொண்ட உதவாக்கரை மருமகன்(விதார்த்), எதிர்வீட்டில் இருந்து கொண்டே இந்த மாமன் மருமகனை வேவு பார்ப்பதை ஓவர் டைம் வொர்க்காக பார்த்து வரும் மீன் வியாபாரி (ஹலோ கந்தசாமி), கக்கூஸுக்கு குழி தோண்ட வந்த ஜார்ஜ் மரியன் கூட்டணி, வெள்ளிக் கொலுசை வெறுமனே வெளுத்துக் கொண்டிருக்கும் ஆசாரி, போக்கத்த போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பாரதி கண்ணன், பாம்பு பிடிக்க வரும் கதாபாத்திரம், பெட்டிக்கடை நடத்திக் கொண்டு, சிகரெட் வாங்க வரும் நாயகனைப் பார்த்ததும் காதலிக்கும் காதலியாக வரும் அஞ்சலி நாயர் கதாபாத்திரம், நாயகன் மீது ஒருதலைக் காதலில் உருகும் செம்மலர் அன்னம் கதாபாத்திரம், ஊர் பஞ்சாயத்து தலைவர் கதாபாத்திரம் இவர்களோடு திண்ணையில் படுத்துக் கிடக்கும் வட இந்திய பிச்சைக்கார கதாபாத்திரம் என உலா வரும் ஒவ்வொருக் கேரக்டரும் ரசிகனைச் சுற்றி வரும் யாரோ ஒருவரை நினைவூட்டுவதே இப்படத்தின் பெரும்பலம்

கேமராமேன் பானு முருகன் படம் முழுவதும் கிராமத்து மக்களின் வாழ்வாதாரம், கிராமத்து வீடுகள், சண்டை சச்சரவுகள், துரத்தல்கள் என்று காட்சிக் கோணங்களின் அழகு சிறப்பு. கபிலன், நந்தலாலா, தனிக்கொடி, முத்துவேல், ரவி முருகையா ஆகியோரின் பாடல் வரிகளில் ஜோஹன் சிவனேஷ் இசை ஓகே சொல்ல வைக்கிறது.

நியூ டைரக்டரான ரவி முத்தையாபெரும்பாடுப்பட்டு, ஒரு அருமையான ஒன் லைனரைப் பிடித்திருக்கிறார். அந்த ஒன் லைனரை சுவாரஸ்யப்படுத்துவது போல் சில காமெடி காட்சிக் கோர்வைகளையும் சிறப்பாக அமைத்திருக்கிறார். இவைகளைக் கோர்க்க ஒட்டு மொத்த ஊரையும் கிராம மக்களையும் ஒற்றை போலீஸ் ஸ்டேஷனுக்குள் அடைத்து பங்கு பிரிக்க முயலும் திட்டங்கள் எல்லாம் சிரிக்கும்படி இருந்தாலும் சிந்தனைக்கு இடையூறாகவே இருக்கின்றன. அதிலும் கிராமத்தில் இருக்கும் சகல கதாபாத்திரங்களுக்கும் மேற்படி ஆயிரம் பொற்காசுகளை அடைவதைத் தவிர்த்து வேறெதுவும் ஆக்கபூர்வமான தேவைகளே இல்லாதது போல் கதையும் கதைமாந்தரும் அதற்கு பின்னே ஓடிக் கொண்டே இருப்பது ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்படையச் செய்கிறது.

ஆனாலும் புதையலின் பங்கு பிரிப்பை ரோடில் வாகனத்தில் அடுத்தடுத்து கையை பிடித்துக் கொண்டு செல்லும் ஒரே காட்சியில் அழகாக விவரித்து. அடுத்து அடுத்து இணையும் நபர்களுக்கு தெரிய வரும் போது பங்கு போடுவது விரிவடைந்து காட்சிகளின் தன்மை மாறுவதும், பேராசை பெருநஷ்டம் என்பதை அழகாக சொல்லியிருப்பதும், அதன் பின் நடக்கும் சம்பவங்கள் கடைசி இருபது நிமிடங்கள் யாருக்கு புதையல் கலசம் கிடைக்கிறது என்ற கலகலப்பை தக்க வைப்பதில் வெற்றி பெற்று விட்டார் டைரக்டர்.

அது மட்டுமில்லாமல் நாடெங்கும் உள்ள தியேட்டர்களிலும் முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டும் “ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் எந்த வித எதிர்பார்ப்பும், லாஜிக்கும் இல்லமால் இப்படம் பார்க்க சென்றால் ஆயிரம் பொற்காசுகள் டீம் நம்மை சிரிக்க வைத்து அனுப்புவதில் ஜெயித்து விட்டார்கள் என்பதென்னவோ நிஜம்.

மார்க் 3/5

error: Content is protected !!