தமிழ் குரல் / AI Voice
பெண் குழந்தைகள் சமூகத்தின் கண்கள் மற்றும் நாட்டின் எதிர்கால தூண்கள் ஆவர். அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவை ஒரு வலுவான சமூகத்தை உருவாக்குவதற்கு மிக அவசியமானதாகும். பாலின சமத்துவமின்மை மற்றும் பல்வேறு சமூக தடைகளை தாண்டி பெண் குழந்தைகள் தங்கள் முழு திறமையையும் வெளிக்கொணர வழிவகை செய்யும் வகையில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணி மற்றும் தொடக்கம்
பன்னாட்டு பெண் குழந்தைகள் தினம் டிசம்பர் 19, 2011 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு மற்றும் உரிமைகளை வழங்க வலியுறுத்தி, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 ஆம் தேதி முதல் முறையாக 2012 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் உலகெங்கிலும் உள்ள பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட சவால்களை உலகிற்கு எடுத்துரைப்பதற்கும், அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு முக்கியமான மேடைக் குரலாகத் திகழ்கிறது.

நடப்பாண்டு மையக்கருத்து (2026 Theme)
இந்த ஆண்டிற்கான சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் அதிகாரப்பூர்வ தீம் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
“End child marriage and invest in girls’ rights!” (குழந்தைத் திருமணத்தை ஒழித்து பெண் குழந்தைகளின் உரிமைகளில் முதலீடு செய்யுங்கள்!)
இந்த முழக்கமானது பெண் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைப் பறிக்கும் கொடூரமான குழந்தைத் திருமண முறையை முற்றிலுமாகத் தடை செய்வதோடு, அவர்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் தலைமைத்துவ திறன்களில் நாம் செய்ய வேண்டிய முதலீடுகளின் அவசியத்தை மிக ஆழமாக வலியுறுத்துகிறது.
பெண் குழந்தைகள் சந்திக்கும் முக்கிய சவால்கள்
இன்றைய நவீன காலகட்டத்திலும் கூட, உலகின் பல்வேறு பகுதிகளில் பெண் குழந்தைகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கல்வி மறுக்கப்படுதல், ஊட்டச்சத்து குறைபாடு, பாலின பாகுபாடு, மற்றும் இளம் வயதிலேயே திணிக்கப்படும் குழந்தைத் திருமணங்கள் போன்ற சமூக தீமைகள் அவர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. இவை பெண் குழந்தைகளின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், தேசத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கின்றன.
உரிமைகளில் முதலீடு செய்வதன் அவசியமும் பலன்களும்
ஒரு பெண் குழந்தையின் கல்வியிலும் உரிமைகளிலும் செய்யப்படும் முதலீடு என்பது அந்த ஒரு தனி நபருக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மற்றும் சமூகத்திற்குமான ஒரு நிலையான முதலீடாகும்.
* படித்த பெண்கள் எதிர்காலத்தில் ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்கி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.
* பொருளாதார ரீதியாகப் பெண்கள் தன்னிறைவு பெறும் போது வறுமை கோடு வெகுவாகக் குறைகிறது.
* சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்து சமத்துவமான ஒரு சூழல் உருவாகிறது.
நம்மின் கடமையும் எதிர்கால இலக்கும்
பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பது வெறும் அரசாங்கத்தின் கடமை மட்டும் அல்ல; அது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் தார்மீகப் பொறுப்பாகும். குழந்தைத் திருமணங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், பெண் குழந்தைகளுக்கு முறையான கல்வியை உறுதி செய்வதும் நமது தலையாய கடமையாகும். இந்தச் சிறப்பு நாளில், பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்து, சமத்துவமான மற்றும் அச்சமற்ற ஒரு உலகத்தை அவர்களுக்குப் பரிசளிக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உறுதியேற்போம்.
நிலவளம் ரெங்கராஜன்
