உயிர்காக்கும் அற்புதம்: ஆம்புலன்ஸ் சேவையின் 900 ஆண்டுகால வரலாறு
ஜனவரி 8-ஆம் தேதியான இன்று, 108 என்ற எண்ணை நினைவுபடுத்தும் வகையில் (1-வது மாதம், 8-ஆம் தேதி) ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு தினமாகக் கருதப்படுகிறது. சைரன் சத்தத்துடன் கடந்து செல்லும் ஆம்புலன்ஸ் நம்மை ஒரு கணம் நிதானிக்க வைக்கும். அது வெறும் வாகனம் அல்ல, பல லட்சம் உயிர்களின் கடைசி நம்பிக்கையாகவும், மரணத்தைத் தடுக்கும் கவசமாகவும் இருக்கிறது.
தொடக்கக்கால வரலாறு:
ஆய்வுகளின்படி, கி.பி. 900-ல் பிரிட்டனின் ஆங்கிலோ-சாக்ஸன் இனக்குழுவினர் ஸ்ட்ரெச்சர்கள் மூலம் முதன்முதலில் இச்சேவையைத் தொடங்கியுள்ளனர். 11-ஆம் நூற்றாண்டில் நடந்த சிலுவைப் போரின் போது, புனித வீரர்கள் (Knights of St John) காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கும் பணிகளை மேற்கொண்டனர். தொடக்கத்தில் இது முற்றிலும் ராணுவப் பிரிவிற்கான சேவையாக மட்டுமே இருந்தது.

பறக்கும் ஆம்புலன்ஸ்கள்:
1792-ல் நெப்போலியன் ராணுவத்தின் மருத்துவர் டொம்னிக் ஜீன் லாரே, போர்க்களத்தில் காயமடைந்தவர்களை விரைவாக மீட்க குதிரை வண்டிகளை அறிமுகப்படுத்தினார். இவற்றை அவர் ‘பறக்கும் ஆம்புலன்ஸ்’ (Flying Ambulance) என்று அழைத்தார்.
மக்களுக்கான சேவையாக மாற்றம்:
1832-ல் லண்டனில் காலரா நோய் பரவியபோதுதான் ஆம்புலன்ஸ் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. 1887-ல் தொடங்கப்பட்ட ‘செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ்’ நிறுவனம் இச்சேவையை உலகளவில் விரிவுபடுத்தியது. இந்தியாவில் 1914-ல் இவர்களே முதல் சேவையைத் தொடங்கினர்.
மகாத்மா காந்தியின் பங்களிப்பு:
தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது (1899), மகாத்மா காந்தி அவர்கள் ‘இந்தியன் ஆம்புலன்ஸ் கார்ப்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி போர்க்களத்தில் சேவையாற்றியுள்ளார் என்பது ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவு. 1950-களின் கொரியப் போரின்போது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு வந்தன.
இந்தியாவில் 108 புரட்சி:
2005-ல் ஆந்திராவில் அறிமுகமான 108 சேவை, இன்று இந்தியாவின் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் பத்து லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
தமிழ்நாட்டின் சாதனைகள் (2025-26 நிலவரம்): 2008-ல் தொடங்கப்பட்ட இச்சேவை இன்று தமிழகத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது:
-
கட்டமைப்பு: தற்போது 1,353 ஆம்புலன்ஸ்கள் தமிழகம் முழுவதும் சேவையில் உள்ளன. 2025 நவம்பரில் மட்டும் சென்னைக்கு 87 புதிய ஆம்புலன்ஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
-
விரைவு சேவை: அவசர அழைப்பு வந்த 7 முதல் 15 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வந்து சேரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
-
தாய்ச்சாவு குறைப்பு: பிரசவ அவசரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், தமிழகத்தில் தாய்ச்சாவு விகிதம் (MMR) 39.4 ஆகக் குறைந்து இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
-
தொழில்நுட்பம்: ‘Avasaram 108 Tamilnadu’ செயலி மூலம் ஆம்புலன்ஸ் வருவதை நேரடியாகக் கண்காணிக்கும் வசதி இன்று சாத்தியமாகியுள்ளது.
முன்பு போல அற்புதங்களை எதிர்பார்த்துக் காத்திருக்காமல், 108 ஆம்புலன்ஸ் மூலம் அறிவியலும் அர்ப்பணிப்பும் இணைந்து இன்று நம் கண்முன்னே பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.
நிலவளம் ரெங்கராஜன்


