இனப்படுகொலை நடந்த மாதத்தில் புத்த பூர்ணிமா கொண்டாட்டமா?
இரண்டு நாள் பயணமாக இலங்கை செல்லவிருக்கிறதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன் என்றும், கொழும்புவில் நடக்கவிருக்கும் வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இணைந்து கொள்வேன் என்று டிவிட்டர் பக்கத்தில் தமிழில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் நடக்கும் புத்த பூர்ணிமா விழாவுக்கே இலங்கை தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஐ.நா. சார்பில் 3 நாட்கள் புத்த பூர்ணிமா விழா நடைபெற உள்ளது. புத்தர் பிறந்த தினம், ஞானம் அடைந்த தினம், இறந்த தினம் ஆகியவற்றை நினைவு கூரும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இலங்கையில் விசாக தின விழா என்ற பெயரில் இந்த விழா அழைக்கப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். அதே சமயம் இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போர் மே மாதம் தான் நடைபெற்றது. மே மாதம் 12 முதல் 18 வரையிலான நாட்களில் முள்ளிவாய்க்காலில் பெருமளவில் இனப்படுகொலை நடைபெற்றது. இதை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக தமிழக மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
இது குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான செல்வராஜா கஜேந்திரன் கூறியதாவது: “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று 8 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. இலங்கையின் வடக்குப்பகுதியில் சிங்கள ராணுவ ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அனைத்து தமிழ் மக்களும் மே மாதத்தை கருப்பு மாதமாக அனுசரிக்க வேண்டும்”என்று கூறினார்.
மேலும் இலங்கை அதிபர் சிறிசேனா மே 18ம் தேதி முள்ளிவாய்க்கால் வரவிருக்கிறார். இந்தப் பயணத்தை அவர் ரத்து செய்ய வேண்டும் என்றும் கஜேந்திரன் வலியுறுத்தினார்.


