ஜப்பான் டாக்டர் ஒஸ்மிக்கு மருத்துவ நோபல்!- ஏன் தெரியுமா?

ஜப்பான் டாக்டர் ஒஸ்மிக்கு மருத்துவ நோபல்!- ஏன் தெரியுமா?

ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கவுரவுக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலைபெற்றிருக்கிறது.

nobel oct 3

இதனிடையே 2016ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. விருது, ஜப்பானை சேர்ந்த பேராசிரியர் யோஷினேரி ஒஸ்மிக்கு வழங்கப்பட்டுள்ளது. உடல் செல்கள் தம்மை தாமே அழித்து கொள்வது பற்றிய ஆட்டோபேஜி என்ற ஆய்வு மேற்கொண்டதற்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

autophagy என்று அழைக்கப்படும் செல்களின் அடிப்படைச் செயல்பாடுகளின் ஒரு முக்கியமான அம்சத்தை கண்டுபிடித்தார் ஓஸ்மி. auto என்ற கிரேக்கச் சொல்லிற்கு self என்று பொருள். phagy என்றால் to eat. எனவே autophagy என்றால் self-eating என்று பொருள். இந்தக் கருத்தாக்கம் 1960களில் முன்னிலை பெற்றது. அதாவது செல் தனது உள்ளடக்கங்களை சவ்வுகளுக்குள் அடக்கி தன்னையே சேதப்படுத்திக் கொண்டு பை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி இதனை lysosome என்ற ஒரு அறைபோன்ற அமைப்புக்கு மறுசுழற்சிக்கு அனுப்புகிறது. செல்லின் முக்கிய அலகுகளை இது கீழ்நிலைப்படுத்தும் பணிநிலையமாக செயல்படுகிறது.

இதனைக் கண்டுபிடித்ததற்காக 1974-ம் ஆண்டு மருத்துவ நோபல் பெல்ஜிய விஞ்ஞானி கிறிஸ்டியன் டி துவே என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர்தான் self-eating என்பதைக் குறிக்கும் autophagy என்ற ஒரு சொல்லையும் அறிமுகப்படுத்தினார். லைசோசம் என்றால் புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்கள், மற்றும் கொழுப்புகள் ஆகியவற்றை சீரணிக்கும் ஒரு சிறப்புவாய்ந்த அறையாகும்.

ஆட்டோபேகி என்ற செயல்பாட்டைக் கண்டுபிடிப்பது ஆய்வாளர்களின் அறிவுக்கு சவால் விட்டு வந்தது, ஆனால் 1990-ம் ஆண்டுகளில் யொஷினோரி ஒஸ்மி ஈஸ்ட் மூலம் ஆட்டோபேகியை அடையாளம் காட்டும் முக்கிய மரபணுக்களை அடையாளம் கண்டார். இதே போன்ற ஒரு உயர் நுட்ப செயல்பாடு நமது செல்களிலும் உள்ளது என்பதையும் யொஷினோரி ஓஸ்மி நிறுவினார். அதாவது நம் செல்கள் அதன் உள்ளடக்கங்களை எப்படி மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறது என்பது பற்றிய நம் புரிதலில் ஒரு சட்டக-சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் ஓஸ்மி.

இதன் மூலம்தான் நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு புதிய வெளிச்சம் கிட்டியுள்ளது, குறிப்பாக பட்டினி கிடப்பதற்கு நம் உடல் எப்படி தன்னை தகவமைத்துக் கொள்கிறது. அதே போல் கிருமித் தொற்றிற்கு வினையாற்றுவதை எப்படி செய்கிறது என்பது பற்றிய மிக முக்கியக் கண்டுபிடிப்பு இது என்று மருத்துவ அறிஞர்கள் வட்டம் கூறுகிறது. இந்த ‘ஆட்டோபேகி’ மரபணுக்களில் ஏற்படும் உருமாற்றம், திடீர் மாற்றம் எப்படி நோய்க்கு அடிப்படையாக விளங்குகிறது என்பது கண்டுபிடிக்கக் கூடியதே என்று தெரியவருகிறது. இந்த ஆட்டோபேகி தொடர்பான செல் செயல்பாடுகள்தான் பல்வேறு நரம்பியல் மற்றும் புற்றுநோய்களுக்குக் காரணமாகிறது.

மனித செல்களுக்கு இணையான ஈஸ்ட்டின் செல்களை யொஷினோரி ஓஸ்மி தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். ஆனால் ஈஸ்ட்டின் செல்கள் மிகச்சிறியது என்பதால் நுண்ணோக்கியில் அவரால் அதன் உள்ளமைப்புகளை வேறு படுத்திப் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆட்டோபேகி என்ற செயல்பாடு ஈஸ்டில் இருக்கிறதா என்பதே அவருக்கு ஐயமாக இருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து விடாமுயற்சியுடன் அதில் ஆட்டோபேகி இருப்பதற்கான சோதனைகளை மேற்கொண்டு கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றார். 1992-ம் ஆண்டு தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

ஈஸ்ட்டில் ஆட்டோபேகி செயல்பாடுகள் இருப்பதை மனித செல்களுக்குள் கண்டுபிடிப்பது எப்படி என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. ஆனால் இதனையும் தொடர் பரிசோதனைகள் மூலம் கடந்து கண்டுபிடித்தார் ஓஸ்மி.ஆட்டோபேகி என்ற செல்கள் தன் உள்ளடக்கங்களை கீழ்நிலைப்படுத்தி மறுசுழற்சி செய்யும் நடைமுறைக்கு ஏற்படும் இடையூறுதான் பார்கின்ஸன் நோய், டைப் 2 நீரிழிவு நோய் உள்ளிட்ட வயது முதிர்ந்தோருக்கான அனைத்து நோய்களுக்கும் காரணம் என்பது தெரியவர யொஷினோரி ஓஸ்மியின் கண்டுபிடிப்புதான் காரணம். ஆட்டோபேகி மரபணுக்களின் ஏற்படும் மாற்றங்களே மரபுசார் நோய்களுக்குக் காரணமாகிறது. இந்த ஆட்டோபேகியில் ஏற்படும் தொந்தரவுகள்தான் புற்றுநோய்க்கும் காரணம். இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து ஆட்டோபேகி செயல்பாட்டை நோக்கிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts