ஒபாமா லவ் -வை சொன்னப்போ நிராகரிச்சேன் தெரியுமா? – மிச்செல் ஓப்பன் பேட்டி
‘சிகாகோவில் உள்ள சிட்லி ஆஸ்டின் என்னும் புகழ் பெற்ற சட்ட நிறுவனம் ஒன்றில் நான் வேலை பார்த்து கொண்டிருந்தேன். அது 1989–ம் ஆண்டு ஜூன் மாதம்..! அந்த நிறுவனத்தின் உயர்பதவியை ஏற்க, இளைஞர் ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார். மெலிந்த உருவம், வசீகரத் தோற்றம், உற்சாகமான செயல்பாடு என இளமை துடிப்புடன் இருந்த அந்த இளைஞரின் ஆலோசகராக மூன்று மாதம் பணியாற்றினேன். இருவருமே கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள். அலுவலகம் மட்டுமின்றி நிறுவனம் ஏற்பாடு செய்த பொது நிகழ்ச்சிகளிலும் அவருடனேயே இருக்க வேண்டிய சூழல் எனக்கு அமைந்தது..!

இப்படிப்பட்ட நிகழ்வுகள், என் மீது அவருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் என்னிடம் காதலை வெளிப்படுத்தினார். ஆனால் அடுத்த வினாடியே நான் அவரது விருப்பத்தை நிராகரித்து விட்டேன்’’ என்று தன்னுடைய காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார், மிச்செல்.
அன்று.. மிச்செல் என்கிற அந்த புத்திசாலிப் பெண்ணின் மனதைக் கவரும் வழி தெரியாமல் தவித்த அந்த நபர்தான்.. இன்று, ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் மனங்களையும் கொள்ளையடித்து, வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக.. அமெரிக்காவின் அதிபராக.. வீற்றிருக்கும் ‘பராக் ஒபாமா’..!
மிச்செல் தன்னை நிராகரித்தபோதிலும் ஒபாமா மனம் தளரவில்லை…! தன் அபரிமிதமான அன்பை அவருக்குத் தொடர்ந்து உணர்த்தியபடியேதான் இருந்திருக்கிறார்.
‘‘வேலையில்… ஒபாமா காட்டுகிற ஈடுபாடும், சக மனிதர் களிடமும், என்னிடமும் பழகும் தன்மையும்.. அவர் மீது இருந்த மரியாதையை, காதலாக மாற்றியது. இருப்பினும் என்னுடைய காதலை அவரிடம் வெளிக்காட்டவில்லை. பரிசுகளை வாங்கி கொடுத்து, என்னை அடிக்கடி ஆச்சரியப்படுத்துவார். ஒபாமாவின் காதல் கனவு, ஓரிரு மாதங்களில் கலைந்துவிடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல், ஒரு தலையாகவே காதலித்து என்னை ஆச்சரியப்படுத்தினார்.
அன்றும்… வழக்கம் போலவே இரவு உணவு சாப்பிட என்னை ஓட்டலுக்கு அழைத்தார். நான் எப்படியும் நிராகரித்து விடுவேன் என்ற எண்ணத்தில் ஓட்டல்களில் எந்தவித முன்பதிவும் செய்யவில்லை. ஆனால் அன்று அவருடைய காதலுக்கு நான் பச்சைக்கொடி காட்ட… மனிதர் தலைகால் புரியாமல், திக்குமுக்காடி விட்டார்.
அதுவரை காலியாக இருந்த ஓட்டல்கள் அனைத்தும்… அன்று வாடிக்கையாளர்களால் நிரம்பிவிட்டன. ஓட்டலின் ஓரத்தில் கூட நிற்க வழியில்லை. அனைத்து டேபிள்களும் ஓட்டல் மூடும் வரை நிரம்பிவிட்டன. இதனால் ஒபாமாவின் முகம் வாடிவிட்டது. காதல் வாழ்க்கையின் முதல் நாளே சொதப்பிவிட்டது. இறுதியில் இரவு 11 மணிக்கு தான் ஒரு டேபிள் கிடைத்தது. அதற்கு மேல் அவரை கையில் பிடிக்க முடியவில்லை.
எங்களுடைய மூன்று ஆண்டு காதல் வாழ்க்கைக்கு பிறகு திருமணமும், அதன் அன்பின் பரிசாக இரண்டு குழந்தைகளும் பிறந்தனர். குடும்ப வாழ்க்கை திடமாக இருந்ததால் ஒபாமா அரசியல் வாழ்க்கையில் தலை காட்ட ஆரம்பித்தார். ஆனால் எனக்கு அரசியல் வாழ்க்கையில் துளியும் விருப்பம் இல்லை. இருப்பினும் அவர் ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபராக போட்டியிட தயாரானார். அந்தசமயத்தில் ‘மிச்செல், உனக்கு அரசியல் பிடிக்காது என்பது எனக்கு தெரியும். ஆனால் அரசியலை ஏற்றுக்கொள். எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்..!’ என்று கேட்டு கொண்டார். அவருடைய புகை பழக்கத்தை நிறுத்த அரசியல் வாழ்க்கையே சரியான தீர்வாக எனக்கு தோன்றியது. அதனால் ‘பிரசாரத்திற்கு வருகிறேன்..! புகைப்பதை நிறுத்த முடியுமா..?’ என்று கேட்க… உடனே சம்மதித்துவிட்டார். இருப்பினும் அடிக்கடி என் கண்களில் சிகரெட்டுடன் சிக்கிவிடுகிறார்’’
இப்படி ஒபாமா காதல் வாழ்க்கையில் சொதப்பி கொண்டே இருக்கிறார்… என்று நகைச்சுவையாக ஒபாமாவுடனான பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார், மிச்செல்.


