வடக்கு மாகாணத்திலுள்ள ஆர்மி வாபஸாக நீ சான்ஸ்!
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போர் கடந்த 2009ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. இதையடுத்து, விடுதலைப்புலிகள் வசமிருந்த வடக்கு மாகாணத்தில் இலங்கை ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு அந்தப் பகுதியில் இருந்து ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படவில்லை. அப்பகுதியில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை இலங்கை கண்டுகொள்ளாத நிலையில் இலங்கையில் தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வீரர்கள் திரும்பப் பெறப்பட மாட்டார்கள் என்று அந்நாட்டு ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “போர் முடிவடைந்து 7 ஆண்டுகள் முடிவடைந்தும், தமிழர் பகுதிகளில் ராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது; எங்களுக்கு போலீஸார்தான் தேவைப்படுகின்றனர். ராணுவம் தேவையில்லை’ என்றார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தின் வட பிராந்திய தலைவர் மகேஷ் சேனநாயகே செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ராணுவம் தொடர்ந்து இருக்கும். சிறுபான்மையினரை கவனிப்பதற்காகத்தான் நாங்கள் (ராணுவம்) இங்கு இருக்கிறோம். சிறுபான்மையினரின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்வோம்.
இலங்கை ராணுவத்தின் வட பிராந்தியத்துக்கான தலைவர் என்ற முறையில், இப்பகுதியில் மீண்டும் தனிநாடு கோரிக்கை எழாமல் தடுப்பது எனது பணியாகும். வடமாகாணத்தில் தனிநாடு கேட்டு போர் நடைபெற இனி வாய்ப்பில்லை என்றார் அவர்.


