தமிழ் குரல் / AI Voice
தமிழ்நாட்டில் கோடை காலம் நடைபெற்று வருகிறது. கோடையின் உச்சக்கட்டநிலை என்று கருதப் படும் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. கத்திரி வெயில் காலத்தில் வழக்கமாக வெயில் அதிகமாக அடிக்கும். அக்னி நட்சத்திரம் இந்த மாதம் 28-ந்தேதி வரை இருக்கும்.
இந்த நிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் ‘அக்னி நட்சத்திரம் என்றோ கத்திரி வெயில் என்றோ வானிலையில் இல்லை. அது மூட நம்பிக்கை என்றும் சொல்லவில்லை. அது பற்றி பேச விரும்பவில்லை.காற்றின் ஈரப்பதம் குறைந்து வறண்ட காற்று வீசுவதால் சென்னை மாவட்டம் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் ( 4 டிகிரி முதல் 6 டிகிரி பாரன்ஹீட்) வரை அதிகரிக்கும்.
அதாவது காற்றில் உள்ள ஈரப்பதம், கடல்காற்று வீசுதல், மேகங்கள் ஆகியவற்றை பொருத்துதான் வெப்பத்தின் அளவு அமையும். வெப்பத்தை நிர்ணயிக்கூடிய அனைத்தும் பாதகமாக உள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும். எனவே மக்கள் தேவையில்லாமல் காலை 11 மணி முதல் 4 மணிவரை வெளியில் நடமாடவேண்டாம். அதிக தண்ணீர் குடியுங்கள்.

கடந்த மாதத்தில் (ஏப்ரல்) 60 சதவீத நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 2 டிகிரி செல்சியஸ் முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 111 டிகிரி வெயில் அடித்தது. தென்மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியப்பகுதியில் இன்னும் சில நாட்கள் கழித்து ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும்” இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
ஆனாலும் இந்த அக்னி அல்லது கத்தரி வெயில் காலம் இது வானியல் கணக்கு அடிப்படையில் பார்க்கப்படுகிறது.ஜோதிட முறையிலும், முன்னோர்களின் வானியல் கணக்கின் படி ஏற்கனவே அக்னி நட்சத்திரத்தின் காலக்கட்டங்கள் கணிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் அக்னி நட்சத்திர காலம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி மே 29 ஆம் தேதி வரை உள்ளது.இந்த 25 நாட்கள் சூரியனின் தாக்கம் நேரடியாக பூமியின் மேல் இருப்பதால் வெப்பம் கடுமையாக இருக்கும் என வானியல் ஆய்வாளர்களும், ஜோதிட நம்பிக்கையுள்ளவர்களும் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கும் தென் மேற்கு பருவ மழைக் காலத்திற்கும் இடைப்பட்ட காலமாக கத்திரி வெயில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இந்த காலத்தில் வட மாநிலங்களிலேயே வெப்பம் மிக அதிகமாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் சுபகாரியங்கள் நடத்தக் கூடாது,வேலைப்பளூ இருக்கக் கூடாது என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இதன் பின்னணியில் கத்திரி வெயிலில் அலைந்தால் உடல் சூடாகி பாதிப்பு ஏற்படும் என்ற அறிவியல் உண்மை ஒளிந்திருக்கத்தான் செய்கிறது. இந்த 25 நாட்களில், நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்க குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனிடையே வெயிலின் கொடுமை தாங்காமல் உடலில் வெப்ப நோய்களும் வரத் தொடங்கிவிட்டன. கொடூரமாகக் கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தால், சரும நோய்கள் வருவது அதிகமாகிவிட்டது. வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப்புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. என்றாலும், நம் உணவிலும் உடையிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், இவற்றை வரவிடாமல் தடுப்பதும் எளிது.
